ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக ஐ.நா.வில் ஆர்ப்பாட்டம்!
25 Sep,2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகம் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் புலம்பெயர் தமிழ் அமைப்பினரின் ஒழுங்கமைப்பின் கீழ் அமெரிக்ககா நேரப்படி நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது.
ஐக்கிய நாடுகளின் 73ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரை நிகழ்த்தவுள்ளார். இதன்போதே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க புலம்பெயர் தமிழ் அமைப்பு தீர்மானித்துள்ளது.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக கனடாவிலிருந்தும் புலம்பெயர் தமிழர்கள் வருகை தரவுள்ளதாகவும் இப்போராட்டத்துக்காக டொரன்டோ நகரிலிருந்து விசேட பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்களுக்கு நீதி கோரி போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்