போர்க்குற்றம் என்பதுபற்றிய விளக்கம்
போர் நடைபெறும்பொழுது இழைக்கப்படும் தனிமனித, அமைப்பு ரீதியான அல்லது அரச ரீதியான எந்தக் கிரிமினல்க் குற்றமும் போர்க்குற்றம் என்று வரையறுக்கப்படுகிறது.
சர்வதேச சட்டங்களின் படி போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்கெதிரான கூற்றம் ஆகிய இவ்விரு குற்றங்களும் மிகவும் பாரதூரமான குற்றங்களாகப் பார்க்கப்படுகின்றன.
இக்குற்றங்களின் பாரதூரத் தனமையினால், இக்குற்றங்களை விசாரிப்பதற்கான கால எல்லையென்று வரையறுக்கப்படுவதில்லை. அதாவது குற்றங்கள் நடைபெற்று பலவருடங்கள் கடந்தபின்னரும் கூட, இவைபற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, குற்றமிழைத்தவர்கள் நீதியின் முன்னர் நிறுத்தப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்பட முடியும்.
போர்க்குற்றம் தொடர்பான வரலாற்றுப் பதிவு
போர்க்குற்றம் பற்றிய கருத்தியல் என்பது அண்மையில் உருவாக்கப்பட்டதொன்று. இரண்டாம் உலக யுத்தம் வரையிலும், போரில் இடம்பெறும் அனைத்து அழிவுகளையும், கொடுமைகளையும் போரின் இயல்புகள் என்றே ஏற்றுக்கொண்டு வந்துள்ளார்கள். எவ்வாறாயினும், போர்க்குற்றங்கள் கிரேக்க , ரோம காலத்திலிருந்து அவப்போது பதியப்பட்டு வந்திருக்கின்றன.
20 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலப்பகுதிவரை போர்களின் படைவீரர்கள் எதிரிப் படைவீரர்களை எந்த வித தயவு தாட்சணியமும் பாராது மிகவும் கொடூரமாகவே நடத்தி வந்துள்ளனர். போரில் சம்பந்தப்படாத அப்பாவிகள் கூட இம்மாதிரியான கொடூரக் குற்றங்களிலிருந்து தப்பவில்லை. போரில் மேற்கொள்ளப்படும் எந்தவித குற்றமாக இருப்பினும், அதை தீர்மானித்து தண்டனை வழங்குவது எப்போதுமே போரில் வென்ற தரப்பாகவே இருந்து வந்துள்ளது.
படைத்தளபதிகளோ அல்லது போரினை நடத்திய அரசர்களோ ஒருபோதுமே தமது குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படவில்லை. அவர்கள் போரில் தோற்குமிடத்து, எதிரித் தரப்பால், கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டனர்.
போர்க்குற்றம் பற்றி விசாரைப்பதற்கான வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்களோ அல்லது போரிடும் தரப்புகளுக்கிடையே பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையோ இருந்ததில்லை. அதேபோல, போர்குற்றங்களில் ஈடுபடும் தனிநபர்களோ, படைவீரர்களோ அல்லது ஒரு அரசோ தமது குற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற கடப்பாடும் இருக்கவில்லை.
இவ்வகையான மனநிலை, இரண்டாம் உலகப் போரில் பலமில்லியன் மக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மாற்றம்பெறதொடங்கியது. மில்லியன்கணக்கான யூதர்கள் ஜேர்மனிய நாஜிகளால் கொல்லப்பட்டது, சரண்டைந்த எதிரிப் படைவீரர்களையும் பொதுமக்களையும் ஜப்பானிய ராணுவம் நடத்திய விதம் போன்றவை மேற்குநாடுகளின் அதிகாரத்திலிருப்பவர்களை இக்கொடுஞ்செயல்களைப் புரிந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எண்ணத்தூண்டியது.
இவ்வாறான எண்ணங்களின் தோற்றமே, யூகொஸ்லாவியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் போன்றவற்றை ஆரம்பிக்க ஏதுவாக்கியது.
போரில் வென்றவனின் நீதி !
பொதுவாகவாக போரில் தோற்கடிக்கப்படும் தரப்பே போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது. ஆனால், போரில் வெல்லும் தரப்போ, ஒருபோதுமே தனது தரப்பு படைவீரர்களையோ, அதிகாரிகளையோ போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வது கிடையாது. இப்படியான சந்தர்ப்பங்களில் இடம்பெறும் விசாரணை என்பது எதிரித் தரப்பை பழிவாங்குவதற்காக வென்ற தரப்பினால் நடத்தப்படும் ஒரு நடவடிக்கை என்பதுடன், இவை இயல்பாகவே நீதிக்குப் புறம்பானதாகப் போய்விடுகிறது...
ஆனால், இதற்கு விதிவிலக்கான சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. வியட்நாமியப் போரில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட பல அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணை, யூகொஸ்லாவியாவில் சேர்பிய ராணுவ வீரர்களுக்கெதிராக புதிய அரசாங்கம் நடத்திய விசாரணைகள் என்பவற்றைக் குறிப்பிட முடியும்.
எவ்வாறான செயற்பாடுகள் போர்க்குற்றங்களாகப் பார்க்கப்படுகின்றன?
ஜெனீவா சாசனத்தின்படி போர்க்குற்றங்கள் வரையறுக்கப்படுகின்றன. அவை மூன்று வகைப்படுத்தப்படுவதுடன், இனக்கொலயுடன் சேர்த்து நான்கு பிரிவுகளாகின்றன.
குற்றங்கள்
சர்வதேச சாசனங்களை, ஒப்பந்தங்களை, வாக்குறுதிகளை மீறும் வகையில் ஒரு போரினைத் திட்டமிடுதல், தயார்படுத்துதல், நடைமுறைப்படுத்துதல், அல்லது மேற்சொன்ன விடயங்களை முன்வைத்து சேர்ந்து போரிடுதல் ஆகியவை அமைத்திக்கெதிரான குற்றங்களாகப் பார்க்கப்படுகின்றன.
2. போர்க்குற்றங்கள்
போர் விதிமுறைகளை மீறி நடைமுறைப்படுத்தப்படும் எந்தப் போர்நடவடிக்கையும் போர்க்குற்றமாகும். அவ்வாறான குற்றங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படாலம்,
போர்விதிமுறைகளுக்கெதிராக மக்கள் மீதோ, சொத்துக்கள் மீதோ கொடுமைகளை நிகழ்த்துவது
ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்பினுள் சாதாரண பொதுமக்களைக் கொல்லுதல், கொடூரமாக நடத்துதல், பலவந்தமாக இடம்பெறச் செய்தல், அடிமைகள் போல நடத்துதல்,
போர்க்கைதிகளைக் கொல்லுதல் மற்றும் கொடூரமாக நடத்துதல்
பணயக் கைதிகளைக் கொல்லுதல்,
சித்திரவதைகள், மனிதநேயமற்ற முறையில் நடத்துதல் மற்றும் உடல்ரீதியான பரிசோதனைகளை மேற்கொள்ளுதல்,
தனியார், பொதுச் சொத்துக்களை அழித்தல்,
திட்டமிட்ட ரீதியில் நகரங்கள், கிராமங்களை அழித்தல்,
3. மனித குலத்திற்கெதிரான குற்றங்கள்
போரின்போதும், அதற்கு முன்னரும், பொதுமக்கள் மீது நடத்தப்படும் அனைத்து கொடூரங்கள் மற்று போர்நடவடிக்கைகள் இதற்குள் அடங்கும். அவையாவன,
கொலைகள்
கூட்டுப் படுகொலைகள்,
அடிமைப்படுத்துதல்,
பலவந்தமாக நாடு கடத்துதல்,
திடாமிட்ட கூட்டான பாலியல் வன்புணர்வுகள் மற்றும் பாலியல் அடிமைகளாக நடத்துதல்,
மற்றும் இவைபோன்ற மனிதநேயத்திற்கெதிரான செயல்களான,
அரசியல், சமய, மொழி, இன அடிப்படையில் கொடூரங்களை இழைத்தல் அல்லது கொல்லுதல்,
போர் நடைபெற்ற நாட்டில் இருக்கும் சட்டங்களுக்கெதிரான போர்க் கொடூரங்கள் ஆகியவை.
போர்கூற்றங்களுக்கான பொறுப்புக் கூறல்
மேற்கூறப்பட்ட போர்க்குற்றங்களை நிகழ்த்துவதற்கு திட்டமிட்டு நடைமுறைப்படுத்திய நாட்டின் தலைவர்கள், அமைப்பாளர்கள், ஊக்குவிப்பாளர்கள், துணைபோனவர்கள் மற்றும் இந்த குற்றங்களில் ஏதோ ஒரு வகையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் ஆகிய அனைவரும் இக்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் ஆகிறார்கள்.
கட்டளைகளின் படி நடைபெற்ற போர்க்குற்றம்
ஒருவர் தனது மேலதிகாரியோ அல்லது அரசோ இடும் கட்டளையின்படியே தான் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக கூறித் தப்பிக்க முடியாது. ஆனால், அவரது தண்டனையின் அளவு குறைக்கப்படச் சாத்தியப்பாடு உள்ளது.
இனப்படுகொலை என்பது மனிதகுலத்திற்கெதிராக நடத்தப்படும் மிகவும் பாரதூரமான குற்றமாகக் கணிக்கப்படுகிறது.
ஒரு தேசிய இன மக்களையோ அல்லது குறிப்பட்ட சமயத்தை வழிபடும் மக்களையோ அல்லது ஒரு குறிப்பிட்ட இன மக்கள் கூட்டத்தினரையோ அழிக்கும் நோக்குடன் மிகவும் திட்டமிட்ட முறையில் நடத்தப்படும் போர் இனப்படுகொலை என்றழைக்கப்படுகிறது.
இனப்படுகொலை என்னும் பதமானது 1943 இல் போலந்து நாட்டு யூதரான ரபாயேல் லெம்கின் என்பவரால் ஜெனோஸ்( இனம் அல்லது குழுமம்) என்னும் கிரேக்க சொல்லையும், சயிட் (கொல்லுதல்) என்னும் இலத்தின் சொல்லையும் சேர்த்து உருவாக்கப்பட்டது.
தனது குடும்பத்தில் அனைவரையும் ஜேர்மனியர்களால் யூதர்மேல் நடத்தப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பில் இழந்த இவர், இனப்படுகொலை என்னும் பதம் சர்வதேச சட்டங்களுக்கடிப்படையில் குற்றமாகப் பார்க்கப்படுதல் வேண்டும் என்று போராடிவந்துள்ளார்.
அவரது அயராத போராட்டத்தின் விளைவாக, இனப்படுகொலை என்னும் பதம் 1948 இல் ஐ. நாவின் இனப்படுகொலை சாசனத்தை பிறப்பிக்கவும், 1951 இல் சட்டவாக்கமாக மாறவும் மாற ஏதுவாகியது.
ஒரு தேசிய மக்களை, இனத்தை, குழுமத்தை, சமயத்தைப் பிபற்றுவோரை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ அழிப்பதை இனப்படுகொலை என்று ஸ்தாபிக்கும் சட்டமானது பின்வரும் செயற்பாடுகளை இனப்படுகொலை என்று ஏற்றுக்கொள்கிறது,
இக்குழுமத்தைச் சேர்ந்தவர்களைக் கொல்லுதல்,
இக்குழுமத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கடுமையான உடல் உள உபாதைகளை உண்டுபண்ணுவது,
இக்குழுமத்தைச் சேர்ந்தவர்களை முற்றாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்குடன் வேண்டுமென்றே சூழ்நிலைகளை உருவாக்குவது,
இக்குழுமத்தில் உள்ள சிறுவர்களை வேண்டுமென்றே பலவந்தமாக இன்னொரு குழுமத்திற்கு இடம் மாற்றுவது,
இக்குழுமத்தின் சனத்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த திட்டமிட்ட முறையில் தடுப்புத் திட்டங்களை மேற்கொள்ளுவது,
எந்தவிதமான காரணங்களும் இல்லாதபொழுதிலும் கூட, இக்குழுமத்தைச் சேர்ந்தவர்களை இலக்குவைத்து கொடூரப்படுத்துவது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இனப்படுகொலை நடைபெறும் நாட்டில் இச்செயல் குற்றமாகப் பார்க்கப்படாவிடினும் கூட, சர்வதேச சட்டங்களுக்கமைய இது ஒரு பாரதூரமான குற்றமாகப் பார்க்கப்படுகிறது.
இனப்படுகொளைகள்
முற்றுப்பெறாத நவீனகால இனப்படுகொலைகளின் பட்டியலில் பின்வரும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. நடைபெற்ற கொடூரங்களின் அடிப்படையிலோ அல்லது நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலோ இவை இனப்படுகொலைகளா அல்லது இல்லையா என்பது முற்றாக தீர்மானிக்கபடவில்லையாயினும், பொதுவாக அதற்கான அம்சங்களைக் கொண்டிருப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன,
1. துருக்கிய பேரரசால், 1915 இலிருந்து 1923 வரையான காலப்பகுதியில் சுமார் 1.5 மில்லியன் ஆர்மீனியக் கிறீஸ்த்தவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இனப்படுகொலை என்னும் பதத்தை நிராகரித்துள்ள துருக்கி, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 300,000 மட்டுமே என்று வாதிட்டு வருவதோடு, இந்த மரணங்கள், ஆர்மீனியர்கள் மட்டுமல்லாது, அப்பகுதியெங்கும் பல போர்களில் கொல்லப்பட்ட வேற்று இன மக்களினதும் மரணங்களை உள்ளடக்கியது என்று வாதிட்டு வருகிறது.
2. 1930 முதல் 40 களின் மத்திய பகுதிவரை ஐரோப்பாவின் யூதர்கள் மற்றும் ஜிப்ஸீக்கள் மீது ஜேர்மனிய நாசிகளின் இனப்படுகொலை.
3. ருவாண்டாவில் 1994 ஆம் ஆண்டு ஹூட்டு இன ஆயுத தாரிகளால், டுட்ஸி இன மக்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டித்தனமான இனப்படுகொலை. குறைந்தது 800,000 டுட்ஸி இன மக்கள் இதில் கொல்லப்பட்டார்கள். பல லட்சம் பேர் நாட்டை விட்டு தப்பியோயுள்ளார்கள்.
4. முன்னாள் யூகொஸ்லாவியாவில், பொஸ்னிய முஸ்லீம்கள் மேல் சேர்பிய இனவாதிகள் நடத்திய இனப்படுகொலை. திட்டமிட்ட இனப்பெருக்கத் தடை, சந்ததி சந்ததியாக ஆண்கள் அழிக்கப்பட்டமை, பொஸ்னியப் பெண்கள் கட்டாயப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமை போன்ற நடவடிக்கைகள். இதற்கான விசாரணை இன்னும் ஹேக்கில் இடம்பெற்று வருகிறது.