தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்கிறது
24 Sep,2018
நிலைமையை சட்ட மா அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளோம் என்கிறார் சிறைச்சாலைகள் பேச்சாளர் துஷார
அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நேற்று 11 ஆவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்றது. இந் நிலையில் அரசியல் கைதிகள் சிறைச்சாலை உணவை புறக்கணிக்கும், நிலையில் அவர்களது உடல் நிலை மற்றும் ஆரோக்கியம் குறித்து விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் இருவருக்கு தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உப்புல்தெனிய கேசரியிடம் தெரிவித்தார்.
உண்ணாவிரதமிருக்கும் கைதிகள் தமது வழக்குகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை முன்வைப்பதாக கூறும் அவர், அது தொடர்பில் நீதிமன்றங்களிடம் அழுத்தம் பிரயோகிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை எனவும், அதனால் கைதிகளின் கோரிக்கையை தாம் சட்ட மா அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷேர உப்புல்தெனிய தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
' குறித்த கைதிகள் தொடர்ந்தும் உணவை புறக்கணிக்கின்றனர். அதனால் அவர்களது உடல் நிலை மோசமடைகின்றது. எனவே எமது வைத்தியர்கள் அவர்களை பரிசோதனை செய்து வருகின்றனர். அவசியம் ஏர்படும் போது அவர்களை வைத்தியசாலையிலும் அனுமதித்து சிகிச்சையளித்துள்ளோம். தற்போது இருவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் உள்ளனர்.
கைதிகளின் கோரிக்கை எமது அதிகாரத்துக்கு அப்பால் பட்டது. எம்மால் வழக்குகளை துரிதப்படுத்துமாறு நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. இந்த விடயம் குறித்து நாம் சட்ட மா அதிபருக்கு அரிவித்துள்ளோம். என்றார்.