மலையகத்தவர்கள் சிந்தும் இரத்தத்திற்கு ஜனாதிபதி பதில் கூற வேண்டும் ; போராட்டக்களத்தில் ஸ்ரீதரன் எம்.பி
23 Sep,2018
மலையக தோட்ட தொழிலாளர்கள் சிந்துகின்ற இரத்தத்திற்கு நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதில் சொல்ல வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் தலவாக்கலை நகரில் இன்று காலை ஏற்பாடு செய்த சம்பள போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தொழிலாளர்களின் சம்பளம் ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக இருக்க வேண்டும். தொழிலாளர்களுடைய ஒரு நாள் சம்பளத்தை அதிகரிப்பதற்காகவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் நாங்கள் இவ்வளவு காலமும் பட்ட துன்பங்களிலிருந்து முதலாளிமார் சுரண்டல்களிலிருந்து நாங்கள் விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவும் தான் இந்த மைதானத்தில் நாங்கள் ஒன்றுக்கூடியுள்ளோம்.
தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானதும், ஏற்றுக்கொள்ள கூடியதுமாகும். இந்த கோரிக்கைகளை அரசாங்கம் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.
மலையக மக்களின் வாழ்வில் மாற்றம் பெற வேண்டும் என்றால் முதலாவதாக மக்களின் அடிப்படை சம்பளத்தில் மாற்றம் பெற வேண்டும். அடிப்படை சம்பளம் 500 ரூபாயிலிரந்து 1000 ரூபாய்க்கு உயர்த்தப்பட வேண்டும் இதற்காகவே நாங்கள் ஒன்றுதிரண்டுள்ளோம்.
நாங்கள் பட்ட துயரங்களிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும். இதற்கு நாட்டின் ஜனாதிபதியும் , பிரதமரும் செவி சாய்க்க வேண்டும்.
தொழிலாளர்கள் அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு, உழைப்பில் நிமிர்ந்து நிற்கின்ற மக்களாக உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை பெறுகின்ற மக்களாக தொழிலாளர்களை நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் தயாராக வேண்டும் என்றார்.
இன்று தொழிலாளர்களின் உரிமையை வெல்வதற்கான அழுத்த ஆர்ப்பாட்டம்
நியாயமான சம்பளம் கிடைக்காவிடின் பெருந்தோட்ட நிறுவனங்கள் துரத்தியடிக்கப்படும் - திகாம்பரம்
தேயிலையின் விலை அதிகரித்துள்ளதனால் மக்களை பெருந்தோட்ட நிறுவனங்கள் எமாற்ற முடியாது. அவ்வாறு ஏமாற்றினால் பெருந்தோட்ட நிறுவனங்களை துரத்தியடித்து தோட்டங்களை தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுப்போம் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் தலவாக்கலை நகரில் இன்று காலை ஏற்பாடு செய்த சம்பள போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு முறையான சம்பளத்தை வழங்க வேண்டும். இவ்வளவு காலமும் மலையகத்தில் எல்லா தொழிற்சங்கங்களும் பிரிந்து செயற்பட்டோம். இந்த மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்காக எல்லா தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம்.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக நாங்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளோம். இதனால் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இதனை புரிந்துக் கொண்டு கம்பனிகாரர்களிடம் முறையாக பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
எனக்கும், அமைச்சர் இராதாகிருஷ்ணனுக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட முடியாது. காரணம் சட்ட சிக்கல் உள்ளது. இதனால் மக்களுக்கு முறையான சம்பளத்தை பேச்சுவார்த்தையில் ஈடுப்படும் தொழிற்சங்கவாதிகள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாகும் என்றார்