அகதிகளை நாடுகடத்துவதற்கு அவுஸ்திரேலியன் எயர்லைன்ஸ் உதவக்கூடாது-
23 Sep,2018
இலங்கை அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை பலவந்தமாக நாடு கடத்தும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நடவடிக்கைளிற்கு அவுஸ்திரேலியன் எயர்லைன்ஸ் விமானசேவை உதவக்கூடாது என எம் ஐ ஏ அழைக்கப்படும் ரப் இசைப்பாடகி மாதங்கி( மாயா ) அருள்பிரகாசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
கடந்த சில வாரங்களில் 12 இலங்கையர்களையும் ஒரு ஈராக்கிய பிரஜையையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியுள்ள நிலையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அவர் இது குறித்து கார்டியனிற்கு தெரிவித்துள்ளதாவது
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நடத்தப்படும் விதம் குறித்த செய்திகள் பயங்கரமானவையாக விளங்குகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கம் அகதிகளையும் புகலிடக்கோரிக்கையாளர்களையும் கௌரவத்துடன் நீதியாக நடத்தாவிட்டால் அந்த அகதிகள் தங்கள் வாழ்க்கையை மீள கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டியது எங்கள் கடமை.
நாடுகடத்தப்படுதல் என்பது ஒரு தீர்வல்ல.
இலங்கையில் உள்ள தமிழர்களை பொறுத்தவரை ஐக்கியநாடுகள் உட்பட பல அமைப்புகள் அங்கு சித்திரவதைகள் அச்சுறுத்தல்கள் தொடர்வதாக தெரிவித்துள்ளன.
இலங்கையில் பலவந்தமாக காணாமல்போகச்செய்ய்பட்ட ஆயிரக்கணக்கானவர்களிற்கு என்ன நடந்தது என்பதற்கான விடை இன்னமும் கிடைக்கவில்லை.
அகதிகள் புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளில் பங்குகொள்ள மறுப்பதன் மூலம் விமானசேவைகள் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான பங்களிப்பை வழங்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.