இலங்கையின் இறுதி யுத்தத்தை இந்தியாவே நடத்தியது: மூத்த ஊடகவியலாளர் அய்யநாதன்
21 Sep,2018
இலங்கையின் இறுதியுத்தத்திற்கு இந்தியா உதவியது என்பதைவிட இந்தியா நடத்தியது என்பதே உண்மை என்றும், அதனால் அப்போதைய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி தண்டிக்கப்பட வேண்டும் என்றும், தமிழக ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான அய்யநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் படுகொலையில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி உடந்தையாக இருந்தது என்பது தமிழகத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருந்த, குறித்த ஊடகவியலாளர் மேற்படி தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கூறிய அவர்,
“இது ஒரு மிக முக்கியமான விடயமாக உள்ளது. எனவே இது தொடர்பில் குற்றவாளிகள் பொறுப்பு கூற வேண்டும்மென அ.தி.மு.க. மீண்டும் வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.
இலங்கை போரின் போது இந்தியா எப்படி உதவியது என்பது தொடர்பில், எனது ‘ஈழமா மையம்’ என்ற புத்தகத்தில் தெளிவாக எழுதியுள்ளேன்.
குறித்த போரை கோட்டாபய ராஜபக்ஷ, அவரது சகோதரர் மற்றும் லலித் வீரதுங்க ஆகிய மூவரும் இந்தியாவினுடைய வெளிநாட்டு செயலாளர் சிவசங்கர் மேனன் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணன், இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் விஜய்சிங் ஆகிய மூவருடனும் ஒவ்வொரு நாளும் விவாதித்து தான் போரை நடத்தினோம் என்று, கோட்டாபய ராஜபக்ஷ போர் முடிந்ததும் கூறியிருந்தார்.
எங்களுடைய பக்கத்தில் இந்தியாவை வைத்துக் கொண்டதும், இந்தியாவின் ஒத்துழைப்புடன் இந்தப் போரை நடத்தியதும் தான் வெற்றிக்கு காரணம் என்று அவர் அப்போதே கூறியிருந்தார்.
அதேபோன்று இறுதிக்கட்ட படுகொலை நடக்கும் போது, அதனை தடுக்க சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை இந்தியாவே தடுத்ததென மஹிந்த ராஜபக்ஷ பல இடங்களில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 2009 ஆம் ஆண்டு போர் முடிந்த பின்னர், ஓகஸ்ட் மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்த ராஜபக்ஷ இந்தியாவின் உதவி இல்லை என்றார் போரை வெற்றி கொண்டிருக்க முடியாதென இந்தியாவிற்கு நன்றி கூறியிருந்தார்.
இந்நிலையில், இவற்றை மட்டும் ஆதரமாக கொள்ளவில்லை. அதையும் கடந்து, இந்தியா வந்த ராஜபக்ஷவிடம், ‘இந்த போருக்கு நாங்களும் ஆதரவு தெரிவித்தோம் என்பதை கருத்தில் கொள்க என’ இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்திருந்தார்.
எனவே இத்தனை ஆதாரங்களுடன், ஒரு படுகொலைக்கு காரணமாக இருந்த அப்போதைய இந்திய அரசாங்கத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே வலியுறுத்தியிருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது அ.தி.மு.க மீண்டும் வலியுறுத்துவதை நான் வரவேற்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இலங்கையில் இறுதி யுத்த போரில் இந்தியாவின் உதவி தமக்கு பெரும் பங்கென்பதையும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் வெளிப்படையாக உதவியதாகவும் கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து குறித்த விடயம் தமிழகத்தில் மிகப் பெரிய பேசு பொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.