நாட்டை ஒன்றிணைக்கும் தலைவர்தான் மைத்திரி! –
21 Sep,2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் குல தெய்வக் கோயிலான திருகோணமலை ஸ்ரீ ஆதிபத்ரகாளி அம்மன் ஆலயத்தில் சம்பந்தனோடு நேற்றுக் காலை வழிபாடுகளில் பங்குபற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பின்னர் திருகோணமலை கடற்படைத் தளத்தில் அவருடன் நேரடிப் பேச்சுக்களில் ஈடுபட்டார்.
அதன் பின்னர் கோமரங்கடவலவில் பொது நிகழ்வு ஒன்றில் இருவரும் பங்குபற்றினர். அங்கு ‘‘நாட்டை ஒன்றிணைக்கும் பெறுமதியான ஜனாதிபதி நமக்குக் கிடைத்துள்ளார்” என்று மைத்திரிபால சிறிசேனவை சம்பந்தன் பகிரங்கமாகப் புகழ்ந்துரைக்க, சம்பந்தனின் அறிவிப்பு மிக முக்கியமானது என்று பகிரங்கமாகச் சிலாகித்தார் ஜனாதிபதி.
‘‘தற்போது எமக்குப் பெறுமதியான ஜனாதிபதி ஒருவர் கிடைத்துள்ளார். நாட்டை ஒன்றிணைக்கும் ஒருவர் கிடைத்திருக்கிறார். நாட்டைப் பிளவுபடுத்தாமல் ஒரே நாட்டுக்குள் எந்தவிதப் பிரச்சினையும் இன்றி மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, அதிகாரத்தைப் பகிர்ந்து, அந்தந்தப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அதிகாரங்களை வழங்கிச் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி சிந்திக்கின்றார். அந்த நிலைமை கட்டாயம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
‘‘ஒரு நாட்டுக்குள் நாம் அனைவரும் சமாதானத்துடன் வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என அவர் நினைக்கின்றார். அது இடம்பெறவேண்டும். அதனையே நாமும் எதிர்பார்க்கின்றோம்.
‘‘மீண்டும் நாட்டில் ஒரு மோதல் இடம்பெற்றால் இருக்கின்றமையை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அதனை நாம் மனதில் இருத்திச் செயற்பட வேண்டும்” என்று சம்பந்தன் தமது உரையில் மேலும் தெரிவித்தார்.