சம்பிக்கவின் யோசனையை நிராகரித்தது கூட்டமைப்பு
20 Sep,2018
தமிழ் அரசியல் கைதிகளையும், போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய இராணுவத்தினரையும் ஒரே நிலையில் வைத்து எடைபோட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தடுப்பில் உள்ள விடுதலைப் புலிகள் மற்றும் போர்க்குற்றம்சாட்டப்பட்ட படையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பொதுமன்னிப்பு அளித்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற யோசனை ஒன்றை அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்திருந்தார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,
“போர்க்குற்றம்சாட்டப்பட்ட படையினரையும், தமிழ் அரசியல் கைதிகளையும், சமமாக எடை போட முடியாது.
தமிழ் அரசியல் கைதிகள் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வழக்குகள் முடியவில்லை. இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.
இவர்கள் கைது செய்யப்பட்டு, ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட – அடையாளம் காணப்படாத கொடுமைகளுடன், தமிழ் அரசியல் கைதிகளை ஒப்பிட முடியாது.
எந்தவொரு பொதுமன்னிப்பு குறித்தும் கவனத்தில் எடுக்க முன்னர், உண்மை கண்டறியும் பொறிமுறை உருவாக்கப்பட்டு, எவ்வாறான குற்றங்கள் இழைக்கப்பட்டன என்று கண்டறியப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.