இலங்கைத் தமிழருக்கு சர்வதேசம் துரோகமிழைக்கிறது!
18 Sep,2018
இனப்படுகொலைப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் மக்களுக்கு அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சர்வதேசம் தவறியுள்ளதாகவும் அதன் மூலம் சர்வதேசம் அந்த மக்களுக்கு துரோகம் இழைத்து வருகின்றது எனவும் பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளரும், சனல்4 ஆவணப் படத்தின் இயக்குனருமான கெலும் மக்ரே குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கைப் படையினர் மீதான போர்க்குற்றச்சாட்டுக்களை நீக்கிக்கொள்ளுமாறு எதிர்வரும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரின்போது யோசனையொன்றை முன்வைக்கவுள்ளமையுடன் பின்னர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா அமர்வின்போது இந்த யோசனையைப் பிரேரணையாகக் கொண்டுவரத் தாங்கள் திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய கருத்துக்கள் தொடர்பாக ருவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே மக்ரே இதனைச் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஊடகப் பிரதானிகளை சந்தித்தபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அது தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் மரியோ அருள், “இதிலே மிகவும் மோசமான விடயம் யாதெனில் இதற்குப் பின்னரும் கூட இலங்கையின் முன்னேற்றம் தொடர்பாக நாங்கள் உற்சாகமடைந்துள்ளோம் என்ற பல்லவியைப் பாடுவதை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட தரப்புகள் மாற்றிக்கொள்ளமாட்டா.
இலங்கை அரசு நீதியை ஒருபோதும் வழங்கமாட்டாது என்ற விடயத்தைத் தான் தமிழ் மக்கள் தொடர்ந்தும் கூறி வந்துள்ளனர்” – எனத் தெரிவித்துள்ளார்.
இக் கருத்தினை மேற்கோள் காட்டி தனது ருவிட்டர் பதிவிலே கருத்து தெரிவித்த கெலும் மக்ரே, “சர்வதேச சமூகம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு வழங்கிய தன் சொந்த வாக்குறுதிகளுக்கு துரோகமிழைத்து வருகின்றது. இலங்கையில் நீதிக்குத் தொடர்ந்தும் துரோகமிழைக்கப்படுகின்றது” என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதியின் கருத்துக்கள் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களிடையே அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என யஸ்மின் சூக்காவின் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.