30 வருட கால யுத்த வடுக்களை மூன்று வருடங்களில் தீர்க்க முடியாது – விஐயகலா மகேஸ்வரன்
16 Sep,2018
30 வருட கால யுத்த வடுக்களை மூன்று வருட காலத்தில் தீர்ப்பதென்பது சாதாரண விடயமல்ல என விஐயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. எனினும் 30 வருடமாக நிலவிய போரின் வடுக்களிற்கு 3 வருடத்தில் தீர்வு காண்பது என்பது சாதாரணவிடயமல்ல.
எனினும் இந்த நல்லாட்சி அரசாங்கமானது மக்களுக்கு செய்யவேண்டிய பலவற்றை செய்துள்ளது. எஞ்சியுள்ள காலப்பகுதியில் ஏனையவற்றை செய்யும்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரே வடக்கில் ஐனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது. முன்னைய ஆட்சியில் ஐனநாயகம் என்ற சொல்லுக்கே இடமில்லாத நிலையே காணப்பட்டது.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வடக்கில் இராணுவத்தினரிடமிருந்த காணிகளை விடுவித்திருக்கிறோம். மேலும் பல வேலைத்திட்டங்களை இந்த நல்லாட்சி அரசினால் நாம் செய்து வருகிறோம்“ என தெரிவித்துள்ளார்.