காணாமல் ஆக்கப்பட்ட – அனைவரும் புலிகளே!!
13 Sep,2018
பாதுகாப்புப் படைகளின் பிரதானி மீதான குற்றச்சாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவருமே விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டவர்கள். ஆயுத மோதலின்போதே புலிகள் காணாமல் போனார்கள். அவர்களுக்காகப் பாதுகாப்பு படைகளின் பிரதானியைத் தண்டிக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணி தெரிவித்துள்ளது.
கடத்தப்பட்டவர்கள் மாணவர்களா அல்லது வேறு யாருமா என்று தெரியாது. ஆனால் இந்தக் காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, கடத்தல், கொலை, கைதுகள் என்று அனைத்துமே விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டவை எனவும் அந்த அணி குறிப்பிட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணி கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.
அந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்ததாவது:-
போர்க் குற்றங்கள் குறித்த நடவடிக்கைகளில் இராணுவம் மீது கடுமையான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை முன்னெடுக்க வேண்டும் என்று வடக்கின் அரசியல்வாதியான சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
ஆனால் இரண்டு தினங்களுக்கு முன்னர் அமெரிக்க அரச தலைவர் கூறியது என்ன?. அமெரிக்க இராணுவம் மீது எந்தப் பன்னாட்டு நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறிவிட்டார். பன்னாட்டு நீதிமன்றம் இறந்துவிட்டது என்பதை தெரேசா மேயும் கூறிவிட்டார்.
எமது நாட்டிலும் இராணுவம் மீதும், முன்னாள் அரச தலைவர் மகிந்த, முன்னாள் பாதுகாப்புச் செயலர் மீதும் இராணுவ குற்றங்களை சுமத்தி தண்டிக்க முயற்சித்த பன்னாட்டுத் தலைவர்களே இன்று அவர்களின் நாட்டில் பன்னாட்டு நீதிமன்றத்துக்கு இடமில்லை என்று கூறிவிட்டனர்.
வடக்கின் அரசியல்வாதிகள் இப்போதாவது இந்தக் கருத்துக்களைக் கைவிட்டு நல்லிணக்கப் பயணத்துக்கு இடம் கொடுக்க வேண்டும். மகிந்த ராஜபக்சவுக்கும் – இந்தியத் தலைமை அமைச்சருக்கும் இடையில் ஏற்பட்ட சந்திப்பின் மூலமாக இந்த நாட்டில் மீண்டும் மக்களாட்சி அரசு உருவாகும் வாய்ப்பும் நம்பிக்கையும் எழுந்துள்ளது. அதனை தமிழ் தலைமைகள் சீரழித்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம் – என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக தெரிவித்ததாவது:-
இந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அரச தலை வர் மைத்திரி. ஆனால் பாதுகாப்பு படைகளின் பிரதானி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றன. பாதுகாப்பு படைகளின் பிரதானியைக் கைது செய்ய அரசு முயற்சித்து வருகின்றது. இதன் பின்னணியில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார்.
காணாமல் போனோர் அனைவரும் விடுதலைப் புலிகள். போர்க் காலகட்டத்தில் நாட்டுக்கு எதிராக சதி செய்தவர்கள். இப்போது கடத்தல் சம்பவத்துடன் தொடர்புபட்ட பாதுகாப்பு படையினர் மீது குறி வைக்கப்படுகின்றது. இராணுவம் மீது தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பாதுகாப்பை பலவீனப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
புலனாய்வு பிரிவினர் மீதான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்த நடவைக்கை எடுக்கப்படுகின்றது. குற்றச்சாட்டு முன்வைக்கும் நபர்களின் பின்னணியை ஆராய வேண்டும்.
சரத் பொன்சேகா யார் என்பது அனைவருக்கும் தெரியும். இராணுவத்தில் உள்ள பெண்கள் விடயத்தில் அவர் நடந்து கொண்ட விடயங்கள், ஏனைய நடவடிக்கைகள் குறித்து முறைப்பாடு கள் பல உள்ளன. எமது இராணுவம் ஒழுக்கமான இராணுவமாகும். மியன்மார் போன்ற நாடுகளை போல எமது நட்டு இராணுவம் ஒருபோதும் செயற்பட்டதில்லை.
அரச தலைவர் இந்த செயற்பா டுகள், அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். உடனடியாக சரத் பொன்சேகாவின் பதவிகளைப் பறித்து அமைச்சுப்பதவியையும் பறிக்க வேண்டும்.
அரச தலைவரின் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு பிரதானிகளைத் தண்டிக்க முயற்சிப்பது இறுதியில் அரச தலைவரை நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடாக அமையும்.- என்றார்.
கேள்வி -– – வடக்கில் பொதுமக்கள் இராணுவ தரப்பிடம் தஞ்சம் புகுந்த நிலையில் காணாமல் போயுள்ளனர் என்றும் பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன?. இதை இல்லையெனக் கூறுகின்றீர்களா?
பதில் – – அவ்வாறான சம்பவங்களும் உள்ளன. அதை நாம் மறுக்கவில்லை. எமக்குத் தெரியாத பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்க முடியும். அவற்றை நாம் கண்டிக்கின்றோம். வடக்கில் பொது மக்கள் தண்டிக்கப்பட்டால் அதனைக் கண்டிக்கின்றோம். ஆனால் போர்க் காலகட்டத்தில் பொதுமக்களை வலுக்கட்டாயமாக பிரபாகரன் சிறைப்பிடித்து வைத்திருந்தார்.
பிரபாகரன் மூலமாக அதிகமாக கொல்லப்பட்டது தமிழ் தலைவர்களே என்பதை மறந்துவிடக்கூடாது. காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளை நாம் ஆதரிக்கின்றோம். அப்போது நாம் அரசில் இருந்து முழுமையாக ஆதரவு தெரிவித்தோம். பாதுகாப்பு பிரதானி மீதான குற்றச்சாட்டில் காணாமல் ஆக்கப்பட்ட அனைவருமே புலிகள் என்பதையே நாம் கூறுகின்றோம் -– என்றார்.