முன்னாள் போராளி மீது பொலிஸார் கொடூர தாக்குதல்!
10 Sep,2018
வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தாக்கியதில் முன்னாள் போராளியும் அவரின் இரு பிள்ளைகளும் காயமடைந்துள்ளனர்.
தமது காணியின் ஒரு பகுதியை உணவகம் ஒன்றிற்கு வாடகைக்கு கொடுத்துள்ளதாகவும், அதன் ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில் உணவகத்தினை நடாத்துபவர் காணியை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்காத நிலையில் வவுனியா நீதிமன்றில் வழக்கு தொடுத்துள்ளதுடன் அது தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் தாக்குதலுக்குள்ளான முன்னாள் போராளியின் மனைவி இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்,
நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை எனது கணவர் உணவகத்தின் பின்புறமான காணியில் உள்ள கிணற்றிலிருந்து தென்னங்கன்றுகளுக்கு நீர் இறைத்தார். உணவகத்திற்கு நீர் தேவைப்படுவதால் இறைக்க வேண்டாம் என்று உணவகம் நடாத்துபவர் கூறினார்.
இதனால் அவர்களிற்கிடையில் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் உணவக உரிமையாளர் பொலிசாரை அழைத்து வந்து எனது கணவரை வெளியில் வருமாறு தெரிவித்தார். கணவர் வெளியில் சென்றதும் பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி எனது கணவரை தாக்கினார்.
2009ம் ஆண்டு தனது கணவன் கைது செய்யபட்டு பூசாமுகாமில் இருந்து 2013 ம் ஆண்டு விடுதலையாகியிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை காணியில் நின்ற எனது கணவரை அருகில் உள்ள உணவகத்தில் சிவில் உடையில் நின்ற கனகராயன்குளம்
பொலிஸ் பொறுப்பதிகாரி தாக்கியுள்ளார்.
கணவருக்கு அடித்த போது எனது மகன் ஓடிச்சென்று பிடிக்கமுற்பட்டார். இதன்போது எனது கணவரை அடித்து இழுத்து பொலிஸ் வாகனத்திற்குள் தள்ளிவிழுத்தியதுடன் அதனை தடுக்கச்சென்ற எனது மகனின் கழுத்தை பிடித்து வேலியுடன் தள்ளிவிட்டதுடன் இன்னுமொரு பொலிசார் கழுத்தில் அடித்தார். குறித்த சம்பவங்களை தடுக்கபோன என்னையும் பிடித்து இழுத்து சட்டைகளை கிழித்து இழுத்து தள்ளிவிட்டனர்.
இதனைபார்த்த எனது 14 வயதான பெண் பிள்ளை அதனை தடுக்க முற்பட்டபோது பெண் பிள்ளையின் வயிற்றில் புறம்கையால் அடித்து துரத்தினர். இதனால் காயமடைந்த தனது கணவன், மகள் மற்றும் மகன் ஆகியோர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதுடன் கணவர் மேலதிக சிகிச்சைகளிற்காக கிளிநொச்சிவைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதுடன் உரியதரப்புகள் எமக்கு நீதியை பெற்றுதரவேண்டும்.
அத்துடன் எமது உறவினரான இளைஞர் ஒருவரும் கனகராயன்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மாங்குளம் பொலிசிற்கு முறைப்பாடு செய்ய சென்ற போது பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக எமது நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியாது உதவி பொலிஸ் அத்தியட்சகரிடமே முறைப்பாடு அளிக்க முடியும் என தெரிவித்தனர்.
பின்னர் வவுனியா பொலிஸ் அத்தியட்சகருக்கு தெரியப்படுத்தி அவர்கள் அறிவித்தன் ஊடாக மாங்குளம் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.