ரொஹிங்கியா முஸ்லீம்கள் மேல் நடப்பது இனக்கொலை என்றால், ஈழத்தமிழர் மீது நடந்தது என்ன ?
28 Aug,2018
பர்மாவில் சிறுபான்மை முஸ்லீம்களுக்கெதிராக பெளத்த பேரினவாதிகள் கடந்தவருடத்திலிருந்து ஒரு திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டு வருகிறார்கள். நொபெல் சமாதானப் பரிசுக்குச் சொந்தக்காரரான ஆன் சாங்க் சுகி தலமையிலான பர்மிய அரசும், ராணுவமும், பெKளத்த மதகுருமாரின் துணையுடன் இந்த திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள்.
வங்கத்தேசத்து வம்சாவளியினரான சிறுபான்மை ரொஹிங்கியா முஸ்லீம்கள் தமக்கெதிராக பெளத்த பேரினவாதம் தொடுத்துவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்ககளிலிருந்து தம்மைப் பாதுகாக்கும் நோக்குடன் ஆயுத ரீதியிலான எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்க, இதைச் சாட்டாக வைத்துக்கொண்டு பர்மிய அரசு தனது ராணுவத்தை முற்றான இனவழிப்பு ஒன்றில் ஏவிவிட்டுள்ளது.
கிராமம் கிராமமாக அழிக்கப்பட்ட ரொஹிங்கியாக்கள், ஈழத்தமிழரைப் போன்றே கூட்டுப் பாலியல் வன்புணர்வு, சித்திரவதை, கூட்டான படுகொலை, சொத்தழிவு என்று பல வழிகளில் பர்மிய அரசால் துன்புறுத்தப்பட, சுமார் 700,000 வரையான ரொஹிங்கியா அகதிகள் வங்கதேசத்தினுள் தஞ்சம் புகுந்துள்ளார்கள்.
சீனாவின் செல்லப்பிள்ளையான பர்மாவின் நடவடிக்கைகளைக் கண்டும் பேசாமலிருந்த ஐ. நா உற்பட்ட சர்வதேசம் இப்போது இதுபற்றி பேச ஆரம்பித்திருக்கிறது.
பர்மாவில் நடப்பது ஒரு திட்டமிடப்பட்ட இனவழிப்புத்தான் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள ஐ. நா, இந்த இனவழிப்பில் முன்னின்று நடத்தியவர்களான பர்மிய ராணுவத் தளபதிகளின் பிரதானி , ஐந்து பர்மிய ராணுவத் தளபதிகள் மற்றும் உயர் அரச அதிகாரிகளை இனம்கண்டு , வர்கள் மீது இனவழிப்பு, போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கெதிரான குற்றம் போன்றவற்றினூடாக வழக்குத் தொடுப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றது.
செய்மதிப் படங்கள் மூலம் எடுக்கப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில், சிவிலியன்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள், சிறுவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள், கூட்டான பாலியல் வன்புணர்வுகள், கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டமை போன்ற பல அக்கிரமங்களை சேகரித்து வைத்திருக்கும் ஐ. நா வின் கண்காணிப்பாளர் குழு, சுமார் 10,000 வரையான முஸ்லீம்கள் கடந்த ஒருவருடத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளது.
பயங்கரவாதிகள் மீதான எதிர்ப்பு நடவடிக்கையை மட்டுமே தாம் மேற்கொண்டதாக பர்மிய ராணுவம் கூறியதை முற்றாக மறுத்துள்ள ஐ. நா, இவ்விடயம் தொடர்பாக சர்வதேச கிரிமினல் நீதிமன்றில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்யவும் முடிவெடுத்துள்ளது.
தமது நடவடிக்கைகளின் முதற்படியாக, பர்மிய ராணுவத்தளபதியை உடனடியாகப் பதவி இறங்குமாறு கோரியுள்ளதோடு, அரச அதிகாரிகளின் இவ்விசாரணை தொடர்பான மெத்தனப் போக்கையும் கடுமையாகக் கண்டித்துள்ளது.
சரி, பர்மாவில் நடப்பது இனவழிப்புத்தான், சந்தேகம் வேண்டாம். அப்படியானால் இன்றுவரை ஈழத்தில் நடப்பது என்ன? இன்று பர்மிய அரசும் ராணுவமும் செய்வதற்கும் சிங்களப் பேரினவாதம் ஈழத்தில் செய்வதற்கும் என்ன வேறுபாடு? இன்று ஒருவருடத்தினுள்ளேயே பர்மாவை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கும் சர்வதேசன், இன்றுவரை, 9 வருடங்கள் கழிந்தபின்னும், சிங்களப் போர்க்குற்றவாளிகளை தொடர்ந்தும் ஆதரித்து வருவதன் நோக்கம் என்ன? வெறும் 10,000 முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு ஒருவருடத்தினுள் கொக்கரிக்கும் ஐ. நா, 150,000 தமிழர்கள் 2 வருடகாலத்தில் வன்னியின் கொலைக்களங்களில் கொன்றொழிக்கப்பட்டபோது பேசாமல், மெள்னமாக அரங்கேறிக்கொண்டிருந்த இனக்கொலையை ஆதரித்ததன் நோக்கமென்ன? எல்லாம் ஒரே காரணம்தான், இந்தியா என்னும் இனக்கொலையின் பொஅங்குதாரி ஐ. நா வையும் சர்வதேசத்தையும் தனது பிராந்திய பலத்தினைக் காட்டி எட்டவே வைத்திருந்ததுதான்.
ஆனாலும், எமது தலைவர்கள் என்ன செய்கிறார்கள் ? பர்மாவில் நடப்பது இனவழிப்பு என்று பேசப்படும் இத்தறுவாயிலாவது எமக்கு நடந்ததும் இதுதான், ஆகவே எமக்கும் நீதி தாருங்கள் என்று கேட்கமுடியாமல் இருப்பது ஏன்? எதிர்கட்சித் தலைவர், பாராளுமன்ற பதவி என்று இன்றும் இனக்கொலையாளிகளின் அணுரசணையில் இருந்துகொண்டு இனவழிப்பை மறைக்கத் துணைபோவது ஏன்?
சாணக்கியம் சாணக்கியம் என்று 70 ஆண்டுகளாக நாம் கூறிவரும் எமது புலமை, இப்போதாவது காண்பிக்கப்பட வேண்டாமா?
இனக்கொலை நடந்து ஒருவருடத்திற்குள் பர்மிய முஸ்லீம்களால் தமது அழுகுரலை ஐ. நா வில் ஒலிக்கச் செய்து நீதி கேட்க முடியுமென்றால், 9 வருடம் கடந்தும் நாம் இதுவரை என்னத்தைச் செய்தோம் என்று எம்மை நாமே கேள்வி கேட்கும் தருணமிது.