விரைவில் தொடர்பு - சம்பந்தன் பேசுவதற்குத் தயார் - விக்கி
26 Aug,2018
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை விரைவில் தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்வேன் என எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள அதேவேளை சம்பந்தனுடன் பேசுவதற்கு என்றுமே தயாராகவுள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ள நிலையில் இருவருக்கும் இடையிலான சந்திப்பு விரைவில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. வடமாகாண முதலமைச்சரும் அண்மைய தினங்களில் கொழும்பில் தங்கியிருக்கின்ற நிலையில் இச்சந்திப்பு நடந்தேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னதாக ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் தலைமையில் இருவருக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றிருந்த நிலையில் அதேபோன்றதொரு சந்திப்பினை மீண்டும் நடத்துவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக எதிர்வு கூறப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட இருதலைமைகளும் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
எதிர்க்கட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் தெரிவிக்கையில், வடமாகாண முதலமைச்சர் எனக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். எனக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டதாகவும் அறியக் கிடைத்தது. கொழும்பில் தங்கியிருப்பதாகவும் அறிந்தேன். நான் கடந்த சில தினங்களாக சுகவீனமுற்றுள்ளேன் . ஆகவே விரைவில் நான் அவரை தொலைபேசியூடாக தொடர்பு கொள்ளவுள்ளேன். அதன்பின்னரே சந்திப்பு குறித்து தீர்மானிக்கப்படும் என்றார்.
இதேநேரம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில், என்னிடமிருந்து சந்திப்பதற்கான எவ்விதமான கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை. அவர்களுக்கு சந்திப்பதற்கான அவசியம் ஏற்பட்டால் அதற்கு நான் மறுப்புத் தெரிவிக்கப்போவதில்லை. சம்பந்தனுடன் பேசுவதற்கு நான் எப்போதும் தயாராகவே உள்ளேன் என்றார்.
முன்னதாக கடந்த புதனன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கடிதம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கான கடிதம் அனுப்பி வைத்தபோது அக்கடிதம் கிடைக்கப்பெற்றதை உறுதிப்படுத்தும் வகையிலேயே அவரது அலுவலகத்தால் தொலைபேசி அழைப்பொன்று எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித்தலைவரின் அலுவலகத்திலிருந்து வடமாகாண முதலமைச்சர் கொழும்பில் தங்கியிருப்பதை உறுதிசெய்யும் வகையில் அவரது இல்லத்திற்கு தொலைபேசி அழைப்பொன்று எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சம்பந்தன் நேற்று முன்தினம் சுகவீனம் காரணமாக பாராளுமன்றத்திற்குச் சென்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.