சம்பந்தனின் சாணக்கிய அரசியலை தோற்கடிக்க சாந்தி எம்.பி. !விக்கியின் கூற்று பொறுப்பற்றது :மாவை எம்.பி.
26 Aug,2018
எதிர்க்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலை வருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் சாணக்கியப் போராட்டத்தை தோற்கடிக்கின்ற வகையில் பல காக்கை வன்னியர்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
மக்களின் விடிவுக்காக சுய சிந்தையோடு சிந்திக்கின்ற பண்டார வன்னியர்களை அடையாளம் காணுங்கள். காக்கை வன்னியர்களை காலால் உதைத்துத் தள்ளுங்கள். நாங்கள் ஒற்றுமையுடன் பயணிக்கின்றபோதுதான் எங்களின் இழப்புக்கள் வலிகள் வடுக்களுக்கான விடிவைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மண்ணின் விடிவுக்காக தங்கள் உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் சாம்பல் மேட்டிலிருந்து நான் இதனைக் கூறுகின்றேன். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்தார்.
முல்லைத்தீவு கற்சிலைமடுவில் மாவீரன் பண்டாரவன்னியனின் 215ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
மாவீரன் பண்டாரவன்னியனின் நாளில் தமிழன் தலைவணங்கான் என்ற செய்தியைப் பேரினவாத அரசியல்வாதிகளுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.
மாவீரன் பண்டாரவன்னியன் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக வாள் எடுத்து போராடியபோது கூலிப் படைகளாகவும் நவீன ஆயுதங்களுடன் இருந்தவர்கள் முல்லைக் கோட்டைக்குள் ஒளித்த வரலாற்றும் உண்டு. மாவீரன் பண்டாரவன்னியன் காக்கைவன்னியனால் காட்டிக்கொடுக்கப்பட்டான. இது முதலாவது சாபக்கேடு.
அதனைத் தொடர்ந்து தமிழினத்தின் விடிவுக்காக ஆயுதப்போராட்டம் பரிணமித்தது. பன்னாட்டுச் சமூகமே பயந்து நடுங்குகின்ற எங்கள் ஆயுதப் போராட்டமும் காக்கைவன்னியர்கள் போன்றவர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டது.
இன்று எங்கள் சம்பந்தன் ஜயாவின் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற அரசியல் சாணக்கிய போராட்டத்தினையும் தோற்கடிக்கின்ற வகையில் பல காக்கைவன்னியர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நடப்பதை நடப்பதில்லை என்று கூறுவதும் இல்லாததை உள்ளது என்று கூறுவதுமாக பல காக்கைவன்னியர்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள் – என்றார்.
விக்கியின் கூற்று பொறுப்பற்றது :மாவை எம்.பி.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட அரசியல் செல்வாக்கையும், பணத்தினையும் தான் எதிர்பார்க்கின்றார்கள் என வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியிருப்பதானது பொறுப்பற்ற கருத்தாகும் என கண்டித்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா முதலமைச்சரது இக் கருத்தானது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது கடமையினை செய்ய விடாது ,தடுப்பதற்கு ஒப்பானது எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்குபற்றக் கூடாது என விக்கினேஸ்வரன் முன்வைத்த கோரிக்கையை கூட்டமைப்பு நிராகரித்ததையடுத்து விக்கினேஸ்வரன் கூட்டமைப்பு மீது காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக தொடர்பு கொண்டு கேட்ட போதே மாவை சேனாதிராசா இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
முதலமைச்சர் விக்கினேஸ்வரன், ஜனாதிபதியின் செயலணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்கவில்லை எனவே தான் தாமும் போகவில்லை என முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இது விடயத்தை நான் பகிரங்கமாகவே யாழில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது சுட்டிகாட்டி தெரிவித்திருந்தேன். குறிப்பாக இச் செயலணியில் தமிழ் மக்களது பிரச்சினைகள் தொடர்பாக உள்ளடக்கப்படாத நிலையில் எவ்வாறு தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்க்கப் போகிறீர்கள் என்று கண்டித்திருந்தேன். இவ்வாறன நிலையிலேயே தற்போது எம்மை அழைத்திருக்கின்றார்கள்.
இத்தகைய ஒர் சூழ்நிலையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனது கருத்துக்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது கடமையினை செய்யவிடாது தடுப்பதற்கு ஒப்பானதாகவே காணப்படுகின்றது.
மேலும் முதலமைச்சருக்கு நாம் இன்னும் எழுத்து மூலமான பதிலை வழங்காத நிலையில், அவர் இப்போது தெரிவித்திருக்கின்ற கருத்தானது ஏற்கனவே தாயார் செய்து வைத்த அறிக்கையை வெளியிட்டது போலவே காணப்படுகின்றது என்றார்.
கேள்வி : இச் செயலணியில் இராணுவத்தினருடன் இணைந்து செயற்படப் போகின்றார்களா என்ற கருத்தை முன்வைத்துள்ளாரே ?
பதில் : இராணுவத்திடம் உள்ள பொது மக்களது காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளன. குறிப்பிட்ட காணிகள் விடுவிக்கப்பட்டாலும் மேலும் காணிகள் விடுவிக்கப்படாமலேயே உள்ளன. இது தொடர்பாக நாம் இராணுவத்திற்கு நேரடியாகவே கூறியும் உள்ளோம்.
இந்நிலையில் இந் நிலங்களை ,காணிகளை விடுவிக்க வேண்டும் என்பதை இச் செயலணியில் வலியுறுத்தி அங்கிருக்கும் இராணுவ அதிகாரிகளைக் கொண்டே அத் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். இதனையே கூட்டமைப்பு செய்யப்போகின்றது. அதனூடாக எமது மக்களின் காணிகளை அவர்களிடமே பெற்றுக்கொடுப்பதே நோக்கமாகும்.
கேள்வி : கூட்டமைப்பினர் தமது தனிப்பட்ட அரசியல் செல்வாக்கினையும் பணத்தினையுமே முதன்மைபடுத்துவதாக கூறியுள்ளாரே ?
பதில் : அவர் நீதியரசராக இருந்துகொண்டு இவ்வாறு பொறுப்பற்ற முறையில் பதிலழித்திருப்பதையிட்டு நாம் மிகவும் துக்கமடைகின்றோம். முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எமது கட்சியில் இருந்தே முதலமைச்சராக நியமனம் பெற்றவர். இந்நிலையில் அவர் இவ்வாறு பொறுப்பற்ற வார்த்தைகளை பிரயோகிப்பதானது நீதியரசர் பொறுப்பில் இருந்தவருக்கு உகந்தல்ல என்றார்