காணாமல்போனோர் தரவரிசை பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்
24 Aug,2018
உலகளாவிய ரீதியில் அதிகளவு காணாமல் ஆக்கப்பட்டோர் நாடுகளின் வரிசையில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், “முன்னைய ஆணைக்குழுவின் மூலம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஆசியாவில் மாத்திரமின்றி உலகளாவிய ரீதியிலான காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலை நோக்கும்போது இலங்கை முதலிடத்தில் உள்ளது.
அத்துடன் காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிரான சர்வதேச தினம் எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதன்போது பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளோம்.
குறித்த நிகழ்வு காணாமல் போதல் இனி நிகழக்கூடாது’ என்ற தொனிப்பொருளை மையமாக கொண்டு அமையபெறவுள்ளதுடன் காணாமல் போனோர் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றும் இதன்போது வெளியிட்டு வைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் காணாமல் போனோருக்கான நிவாரண தொகை மற்றும் காணாமல் போனோரின் குடும்பத்தினருக்கு நீதியை பெற்றுக்கொடுத்தல் ஆகிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி, மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இதனை கையளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.