தமிழர் வாழ்விடங்களை தீர்மானிக்கும் விடயத்தில் விட்டுக் கொடுக்க முடியாது
ஈ.பி.ஆர்.எல்.எப்பில் இருந்து பிரிந்தவர்ளை மீள இணைப்பதற்கான முயற்சிகள் வரவேற்கப்படவேண்டியவையே. ஆனால் அந்த இணைவு வெறுமனே பிரிந்தவர்களை ஒன்றிணைப்பதாக அல்லாமல் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுடன், அர்த்தபூர்வமானதாய் அமைய வேண்டும் என்கின்றார் ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். தினகரன் வாரமஞ்சரியுடனான நேர்காணலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கு, கிழக்கு இணைப்பின் இன்றைய யதார்த்த நிலை, கிழக்கு மாகாண முதல்வராக தமிழர் ஒருவர் வரவேண்டியதன் அவசியம் பற்றியெல்லாம் அவர் வாரமஞ்சரி வாசகர்களுக்காக மனம்திறந்து பேசுகின்றார்.....
மாகாண சபைத் தேர்தல்கள் விரைவில் இடம்பெறலாம் என்கின்ற நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியினுடனான புதியகூட்டணியுடனா, ஈ.பி.ஆர்.எல்.எப் தேர்தல்களை எதிர்கொள்ளும்?
அது தொடர்பில் நாம் இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை. தேர்தல் எப்போது நடைபெறலாம் என்பதும் இன்னமும் மிகத் தெளிவாகத் தெரிவரவில்லை. ஜனாதிபதித் தேர்தல்களின் பின்னரேயே மாகாண சபைத் தேர்தல்கள் இடம்பெறலாம் என்றவாறான பேச்சுக்கள் தற்போது அடிபடுகின்றன. தேர்தல்கள் பற்றிய உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்படுகின்றபோது, அது தொடர்பிலான முடிவை நாங்கள் எடுப்போம்.
தமிழர்களுக்கான மாற்றுத் தலைமையொன்றின் அவசியம் அண்மைக்காலமாக வலுவாக உணரப்பட்டு வருகின்றது. தமிழர் உரிமைப்போராட்டங்களிலும், அரசியல் நகர்வுகளிலும் பங்கேற்ற கட்சியொன்றின் தலைவர் என்ற வகையில் அவ்வாறான மாற்றுக்கட்சியொன்றினை தலைமையேற்க ஏன் நீங்கள் உத்தேசிக்கவில்லை?
இதில் நான் தலைமையேற்பதா அல்லது வேறொருவர் தலைமையேற்பதா என்பதல்ல பிரச்சினை. ஆனால் மாற்றுத் தலைமையொன்றுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது மிகச்சரியானதும் வரவேற்கப்படக்கூடியதுமான ஒரு விடயம். அதற்கான பலவேறுகட்டப் பேச்சுவார்த்தைகள் பல்வேறு தரப்பினரிடையே இடம்பெறுகின்றனவென்பதும் அறிந்ததுதான். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தமிழ் முதலமைச்சர் என்ற கோரிக்கையை முன்வைத்து சிலர் தங்களது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றனர். அதேபோல, வடக்கிலும் மாற்றுத்தலைமையின் அவசியத்தை வலியுறுத்தி சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே யார் தலைமை தாங்குவதென்ற கேள்விக்கப்பால், அவ்வாறான மாற்றுத் தலைமையொன்றின் அவசியத்தை முன்னிறுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவை வரவேற்கப்பட வேண்டியவையே.
ஈ.பி.ஆர்.எல்.எப்பில் அங்கம் வகித்த பலர் இன்று வெவ்வேறு கட்சிகளாக, அமைப்புகளாகப் பிரிந்து நிற்கின்றனர். ஆனால் எல்லோருமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் போக்குக்கு எதிரானவர்களாய் உள்ளனர். அந்தவகையில் அவர்கள் எல்லோரும் ஓரணியில் இணைந்து மாற்று அரசியல் பாதையொன்றை அமைக்கும் சாத்தியக்கூறு உள்ளதா?
அதில் எங்களுக்கு எந்தவிதமான கருத்துவேறுபாடும் கிடையாது. ஆனால் அவ்வாறு பிரிந்துசென்றவர்கள் இன்ற நேற்றல்ல மிக நீண்ட காலமாக வேறு வேறு பாதைகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். உதாரணத்துக்கு ஈ.பி.டி.பி. யின் டக்ளஸ் தேவானந்தாவை எடுத்துக்கொண்டால், முன்னைய ஆட்சிக்காலங்களிலும் அதன் பின்னரும் தான் அமைச்சராக இருக்க வேண்டும். அவ்வாறு அமைச்சராக இருந்தால்த்தான் மக்களுக்கு சேவை செய்யலாம் என்று எண்ணுபவர். தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அவர்களிடத்தில் எந்தவொரு வேலைத்திட்டமும் இல்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு குறைந்தது ஒரு சமஷ்டி அமைப்பு முறைமையேனும் வேண்டுமென்று நாங்கள் கேட்கின்றோம். ஏனையோருக்கும் வெவ்வேறு சிந்தனைகள் இருக்கலாம். எனவே இங்கு ஒரு பொதுவான கொள்கையை ஏற்படுத்தி அதன்பால் இவர்கள் எல்லோரும் உறுதியாக இருந்து ஒன்றுபடுவார்களாயின், எதற்காக இக்கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டனவோ, தமிழ் மக்களது குறைந்தபட்ச உரிமைகளை வென்று, வட,- கிழக்கில் அவர்கள் கௌரவமாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தக் கூடிய வகையிலான கொள்கைகளை அவர்கள் வகுப்பார்களாயின், அவ்வாறான கொள்கையின் அடிப்படையில் சிலவேளைகளில் நாங்கள் ஒன்றுபடலாம். ஆனால் இன்று வரையில் அவ்வாறானதொரு கொள்கையை எவரும் வெளிப்படுத்தவில்லை. அதுமாத்திரமல்ல அவர்கள் நீண்டகாலமாக, வெவ்வேறு பாதைகளில் பயணிப்பவர்கள். எனவே அவ்வாறான இணைவை விரும்புபவர்கள் இவையெல்லாவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறான கொள்கை ரீதியான இணக்கப்பாடில்லாமல் எனக்கு மாத்திரமல்ல ஏனையவர்களுக்கும் அது கடினமானதாகவே இருக்கும். வெறுமனே ஈ.பி.ஆர்.எல்.எப் மீள இணைவது என்றில்லாமல் அவ்விணைவானது அர்த்தபூர்வமாய் அமைய வேண்டும். ஏனெனில் ஈ.பி.ஆர்.எல்.எப்பில் இருந்தவர்கள் தற்போது, வெவ்வேறு திசைகளில் பயணிக்கின்றார்கள். ஒரு காலத்தில் நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தோம் தற்போது அவ்வாறான சூழல் இல்லை. ஒன்றாக இருந்த எல்லாரும் தற்போது முன்னரைப்போலவும் இல்லை.
கிழக்கு தமிழர் ஒன்றியம், கிழக்கில் புதிய மாற்று அணியொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. அது உங்களுடனும் தொடர்பு கொண்டதா?
ஆமாம். ஈ.பி.ஆர்.எல்.எப். உடன் பேசியிருக்கின்றார்கள். ஏனைய தமி ழ்க் கட்சிகளுடனும் பேசியிருக்கின்றார்கள். கிழக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தேதும் இல்லை. அதனை எவ்வாறு சாத்தியப்படுத்துவது என்பது முக்கியமானது. அதில் யார்யாரெல்லாம் பங்களிக்கலாம்? அதற்குத் தேவையான வாக்குப்பலம் எங்களுக்குக் கிடைக்குமா என்ற கேள்வியும் இருக்கின்றது. தமிழ் முதலமைச்சர் என்பது கிழக்குமாகாண மக்களது தேவை, அதனை நிறைவேற்றுவதற்கான ஒத்துழைப்பு நிச்சயம் எங்களிடமிருந்து கிடைக்கும். ஆனால் அது எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும். ஆளும் தரப்புக்கு ஆதரவான ஒரு சிலர் மாத்திரம் இணைந்து அதனைச் சாதிக்க முடியாது. அவ்வாறானதொரு தேவை இருக்கின்றதென்பதை தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் பணியாற்றும் கட்சிகள், ஏற்றுக்கொண்டு அதனைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். இவ்வாறான விடயங்களில் தமிழரசுக் கட்சி தன்னையொரு பெரிய கட்சியாக, தான் தான் பெரியதென்ற கோதாவில் செயற்படுவதால்தான் தற்போதும், இதற்கு முன்னரும் பல பிரச்சினைகளுக்கு மூலகாரணமாய் இருந்திருக்கின்றது. இனிமேலும் அவர்கள் அவ்வாறு செயற்படுவார்களாயின், தமிழர்களின் நலனை விட தமது சொந்தக் கட்சி நலனே அவர்களுக்கு பிரதானமாய் இருக்கின்றதென்பது பட்டவர்த்தனமாக நிரூபிக்கப்பட்டு விடும்.
தமிழ் முதலமைச்சர் என்பது தமிழர்களுக்கான கட்டாயத் தேவை. ஆனால் அது எவ்வாறு கையாளப்படப்போகின்றது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியப் பட வேண்டுமனில், தமிழர்கள் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கை வென்றெடுக்கப்பட வேண்டும். அதற்காகவே கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்கு வழங்கியதாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றது. அவ்வாறல்லாமல் தமிழர் முதலமைச்சராக வரவேண்டுமென வலியுறுத்துவதால் வட-, கிழக்கு இணைப்பென்பது சாத்திப்படாததாகவே போய்விடாதா?
இல்லை. பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பவே கிழக்கு முதல்வர் பதவி விட்டுக்கொடுக்கப்பட்டதாக சம்பந்தர் சொன்னாலும், அதற்கடுத்த கட்ட நகர்வெதனையும் அவர் மேற்கொண்டிருக்கவில்லை. இணைப்புப் பற்றி முஸ்லிம்களுடன் இதுவரை வாய் திறந்து எதனையும் பேசவில்லை. அதற்கு மாறாக இணைப்புக்கு கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அங்கீகாரத்தை உடனடியாகப் பெற இயலாது. அதுபற்றி இப்போதைக்குப் பேசவேண்டாம் என்றுதான் அவர் சொல்கின்றார். முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக்கியது நாங்கள் தான். எனவே எதிர்காலத்திலும் நாங்கள் இணைந்து பயணிப்பது அவசியம் என்றவாறாக எந்தவொரு முஸ்லிம் தரப்புடனும் ஏன் அவர் பேசவில்லை? அதற்கடுத்த கட்ட நகர்வெதனையும் மேற்கொள்ளவில்லை? என்ற பாரியதொரு குற்றச்சாட்டு அவர் மீது இருக்கின்றது. கிழக்கு மாகாண தமிழ் மக்களே இக்குற்றச்சாட்டை வலிமையாக முன்வைக்கின்றார்கள். கூட்டமைப்பு எதிர்காலத்திலும் அதுகுறித்து தீவிரமாக முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாததோடு, முஸ்லிம் தரப்பில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தாங்கள் இணைப்பை திட்டவட்டமாய் எதிர்ப்பதாகவும் அவ்வாறு வடக்கும் கிழக்கும் இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்றும் ஊடகங்களில் அறிக்கை விடுத்தும் வருகின்றார்கள. அவ்வாறு முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறுவது தவறெனக்கூட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாய்திறக்கவில்லை. வடக்கு,- கிழக்கு இணைப்புத் தேவையென்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கிழக்கு மாகாணத்திலும் பல அமைப்புகளும், கட்சிகளும் அதனையே வலியுறுத்துகின்றன. ஆனால் அக்கோரிக்கையை சரியாக வழிநடத்தும் தலைமைத்துவம் அங்கில்லை என்பதுதான் வருத்தத்தத்துக்குரிய விடயம். நாங்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்களல்ல. முஸ்லிம்களது பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையக்கூடிய முறைமைகளின் தேவைபற்றி அஷ்ரப்பின் காலந் தொட்டு வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அவ்வாறான முறைமைகளை உருவாக்குவதற்குத் தமிழ்த்தரப்பும் தயாராகவே இருக்கின்றது. கிழக்கில் உள்ள தமிழர்களின் இருப்பும் அவர்களது பொருளாதார நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களது வாழ்விடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களது எதிர்காலம், வேலைவாய்ப்பென்பன உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவையெல்லாம் சாத்தியமாக வேண்டுமெனில் நிச்சமாக வட-, கிழக்கு இணைக்கப்பட வேண்டும். எல்லோரும் இணைந்து திட்டமிடுவதன் மூலமே அதனை சாத்தியமாக்கலாம். அல்லாமல் முஸ்லிம் மக்கள் தனித்துப்போக விரும்பினால் அதனை ஏற்றுக்கொள்வதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அவர்கள் தனித்துப் போக விரும்பினால் போகலாம். ஆனால் தமிழ் மக்களின் வாழ்விடங்கள், பொருளாதாரம் என்பனவற்றைத் தீர்மானிக்கும் பொறுப்பும் கடமையும் தமிழ் மக்களுக்கே உரியது. அதனை வேறுயாரிடமும் விட்டுக்கொடுக்க முடியாது.
மாகாணசபைத் தேர்தல்கள் எப்போது நடைபெறும் எனத் தீர்மானிக்கப்படாத நிலையிலும் கூட, முதலமைச்சர் வேட்பாளர் என்று வரும்போது, மாவை சேனாதிராஜா எம்.பி அல்லது தற்போதைய முதல்வர் சீ.வி. விக்கினேஸ்வரன் என்ற இரண்டு பெயர்களே தொடர்ச்சியாக அடிபடுகின்றன. அவர்களது மக்கள் சேவை குறித்த பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் ஏன் புதிய முகங்களை எங்களால் சிந்தித்துப் பார்க்க இயலாதுள்ளது?
அரசியலில் யாருக்கெதிராகத்தான் விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை? அரசாங்கத்துக்கெதிராக, எனக்கெதிராக, வரதராஜப்பெருமாளுக்கெதிராக, முதலமைச்சருக்கெதிராக என எல்லோருக்கெதிராகவும் விமர்சனங்கள் உள்ளன. அதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. எல்லா தலைவர்களையும் தமிழ் மக்கள் அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்கின்றார்கள் என்றில்லை. எல்லோர் மீதும் வெவ்வேறுவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்படலாம். ஆனால் இன்று மக்கள் மத்தியில், மக்களின் அரசியல் கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்பவராக, நீதியான, நேர்மையான, ஊழலற்ற ஒருவராக, கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலும், மக்களின் அபிலாஷைக்கான கோரிக்கைகளைக் கைவிடாதவராக, முதலமைச்சரே பார்க்கப்படுகின்றார், என்பது நிதர்சனமானது. வடக்கிலும் கிழக்கிலும் நடந்த 'எழுக தமிழ்' கூட்டங்களிலும் சரி, இன்றும் சரி மக்கள் மத்தியில் அவருக்கென்றொரு தனி அபிமானம் இருக்கின்றது ஒப்பீட்டளவில். எனவே ஒரு மாற்றுத் தலைமையை நாங்கள் ஆகாயத்தில் இருந்து தேட முடியாது. உள்ளவர்களிடத்தில் இருந்துதான் தேட முடியும் அந்த வகையில், தற்போது மாற்றுத் தலைமை பற்றிப் பேசப்படுகின்ற நிலையில் முதலமைச்சர் போன்றோராலேயே அது சாத்தியம் என்று நான் நினைக்கின்றேன்.
தமிழர்களின், குறிப்பாக வடக்கின் அரசியல் தற்போது எவ்வாறிருக்கின்றது? ஒருகாலத்தில் பரம எதிரிகளாகக் கருதப்பட்ட இராணுவ அதிகாரிகள் தற்போது தமிழ் மக்களின் நண்பர்களாகப் பார்க்கப்படுகின்றார்கள். அவர்கள் மக்களின் துயர் துடைக்கின்றார்கள், மறுபுறம் தெற்கின் பிரதான கட்சிகளுக்கான செல்வாக்கு வடக்கில் அதிகரித்து வருகின்றது. இவையெல்லாம் எதனை உணர்த்துகின்றன? தமிழர் தலைமைகள் தங்கள் கடமைகளைச் செய்யத் தவறியுள்ளன என்பதையா?
சில காலங்களுக்கு முன்னர் இராணுவ அதிகாரியொருவரின் பிரிவுபசாரத்தின் போது மக்கள் கண்ணீர் மல்கியதாகச் சொல்லப்பட்டது. இது ஒரு திட்டமிடப்பட்ட செயற்பாடு. இங்குள்ள சிவில் பாதுகாப்புப் படையென்பது முன்னாள் பேராளிகளுக்கு, புனர்வாழ்வளித்து, வேலைவாய்ப்பு வழங்கி வருகின்றது. போராளிகளுக்கு 20,000, 30,000 ரூபாய் சம்பளமும் வழங்கி அந்த சம்பளத்திலேயே, பிரிவுபசாரங்கள் போன்றவற்றையும் நடத்துகின்றது இராணுவம். இவ்வாறான வைபவங்களில் சிவில் பாதுகாப்புப் படையில் உள்ளவர்களும் சிவில் உடைகளில் சாதாரண பொதுமக்களைப் போலப் பங்குகொள்ளப் பணிக்கப்படுகின்றார்கள். இவையெல்லாம் திட்டமிட்ட வகையில் ஒரு பிரசார உத்திக்காகக் காட்டப்படுபவையே தவிர மக்கள் அவர்களை தங்கள் உற்றார் போலவோ, நண்பர்களைப் போலவோ பாவிக்கும் மனோநிலையில் இல்லை. அது முக்கியமானது. ஆனால் தமிழ் மக்கள் இராணுவத்தையே நம்புகின்றார்கள் போன்றதொரு பொய்த் தோற்றப்பாட்டை உருவாக்குவதில் சில ஊடகங்களும் முன்னின்று உழைக்கின்றன. ஆனால் ஐக்கிய தேசிக் கட்சியோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ தங்கள் அரசியல் பிரதிநிதிகள் ஊடாக, அது மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்களோ அல்லது தெரிவுசெய்யப்படாதவர்களோ யாராக இருப்பினும், அவர்களுக்கூடாக மில்லியன் கணக்கான காசைச் செலவழிக்கின்றார்கள். காரணம், அடுத்த தேர்தல்களில் தாங்கள் வெற்றியடைய வேண்டும் என்பதுதான். யுத்தம் முடிவடைந்த சூழலில் மக்களுக்கு வாழ்வாதாரம் அவசியம். அதனைப் பூர்த்தி செய்வதற்கான உதவிகள் அவசியம். அதனை மாகாண சபையின் ஊடாகச் செய்தால் தங்களுக்கு அதற்கான பலன் கிட்டாது. அது வட மாகாணமாக இருந்தாலும் சரி கிழக்கு மாகாணமாக இருந்தாலும் சரி அங்குள்ள அரசியல்வாதிகளைப் புறமொதுக்கி விட்டு அவர்கள் தாமாகவே நேரடியாக அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுகின்றர்கள். 48 பேர் கொண்ட அபிவிருத்திக் குழுவொன்றை ஜனாதிபதி உருவாக்கியிருக்கின்றார். ஆனால் அதில் வடக்கைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களோ மாகாண சபை உறுப்பினர்களோ இல்லை. அதில் அங்கம் வகிக்கும் அதிகாரிகளாயினும் சரி, அரசியல்வாதிகளாயினும் சரி சிங்களவராகவோ முஸ்லிமாகவோதான் உள்ளார். இதெல்லாம் கேலிக்கூத்தாக இல்லையா? வடக்கிற்கெனத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் இருக்கின்றபோது அவர்கள் எல்லோரையும் புறந்தள்ளி விட்டு, வடக்குக்கான அபிவிருத்தியைச் செய்ய எந்தப் பிரதிநிதியும் இல்லையென்பது போலவும், அதனை ஜனாதிபதியும் அவரைச் சார்ந்தோரும் தான் செய்யவேண்டும் என்பது போன்ற தோற்றப்பாட்டையும் உருவாக்கும் கேவலமான அரசியல் நிலைப்பாடு வேறு எங்கும் இருக்க முடியாது. குறைந்தபட்சம் வடக்கின் அரசியல் தலைமைகளுடன் பேசி எவ்வகையான அபிவிருத்திப் பணிகள் தேவைப்படுகின்றன என்பதை ஆராய்ந்த பின்னர் அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை. மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கவும் அவர்கள் தயாராக இல்லை. அது சுதந்திரமாக இயங்குவதற்கான அனுமதியை வழங்கவும் அவர்கள் தயாராக இல்லை. உதாரணத்துக்குச் சொல்வதானால் 13 ஆம் திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறு, ஆசிரியர் நியமனம் என்பது வடக்கு மாகாணசபைக்கு உரித்தான ஒரு விடயம். ஆனால் ஆசிரியர்களை தேர்வு செய்து அந்தந்த மாகாணசபைகளுக்கு அனுப்பும் விடயத்தை மத்திய அரசே செய்கின்றது. இவ்வளவும் ஏன் பொலிஸாரை உள்ளீர்ப்பதும் மாகாணசபையின் அதிகாரத்துக்குட்பட்ட விடயமே. ஆனால் அது இன்று மாகாண சபையிடம் இல்லையே. உள்ள அதிகாரங்களைக்கூட சுதந்திரமாகப் பிரயோகிக்க முடியாத நிலையிலேயே வட மாகாணசபை வைக்கப்பட்டுள்ளது. ஐக்கியதேசியக் கட்சியோ, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியோ தனது நலனை மாத்திரமே கருத்தில் கொள்ளுமே தவிர தமிழ் மக்களின் நலனில் அவற்றுக்கு கிஞ்சித்தும் அக்கறையில்லை.
ஆனால் வடக்கின் அரசியல்வாதிகள் தங்கள் மக்களுக்குசேவை செய்யாததாலேயே தான் அவற்றைச் செய்ய நேர்ந்ததாக வடக்கின் ஆளுனர் அடிக்கடி குற்றம்சாட்டி வருகின்றாரே?
அவர் அவ்வாறானதொரு மாயைத் தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைகின்றார் என்பதே உண்மை. என்னைப் பொறுத்தவரையில் அதுவொரு முற்றுமுழுதான பிழையானதொரு வியாக்கியானம். ஆளுனரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதிதான். அவரும் தான் செய்யவேண்டிய வேலைகளையே உருப்படியாகச் செய்யாதவர். வட மாகாணத்தில் சில காலங்களுக்கு முன்னர் ஒரு அமைச்சரவை மாற்றம் நடைபெற்றது. டெனீஸ்வரன் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக முதலமைச்சர் ஆளுனருக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் அதனை வர்த்தமானி அறிவித்தலில் உடனடியாகச் சேர்க்காமல் விட்டது ஆளுனரின் தவறு. இன்றுவரை அவர் அதனைப் பிரசுரிக்கவில்லை. பிரசுரிக்குமாறு கோரியும் அவர் அதனைச் செய்யவில்லை. அதனாலேயே இன்று வட மாகாண சபையில் அது பூதாகரமான பிரச்சினையாக வெடிக்கக் காரணமாய் இருந்திருக்கின்றார். அவர் உண்மையாக விரும்பியிருந்தால் அதனை ஏற்கனவே வர்த்தமானி அறிவித்தலில் சேர்த்து பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம். அதனை ஏன் செய்யாமல் இருக்கின்றார்? அதன் அரசியல் பின்புலம் என்ன? வட மாகாணசபை இயங்கக் கூடாதென்பதற்காக திரைமறைவு வேலைகளை மேற்கொண்டு, மாகாண சபை எதுவுமே செய்வதில்லை என்ற மாயத்தோற்றத்தை உண்டுபண்ண விளைவது தெட்டத் தெளிவாகத் தெரிகின்றதல்லவா?