இந்தியாவிடமே வழங்க வேண்டும்: காலத்தை கடத்தாது வீடுகளை நிர்மாணிக்கக் கோருகின்றது கூட்டமைப்பு
18 Aug,2018
வடக்கிற்கான வீட்டுத்திட்டம் அமைப்பதை அரசாங்கம் இந்தியா விற்கே கொடுக்க வேண்டும். எமது மக்களின் கலாசாரத்திற்கும் எமது பிரதேச காலநிலைக்குமான தகுந்த வீடுகளை இந்தியாவே நிர்மாணிக்க முடியும் என தமிழ் தேசியக் கூட் டமைப்பு தெரிவித்துள்ளது. யாருக்கு வீட்டுத்திட்டத்தை கொடுப்பது என பேசிக்கொண்டு காலத்ததை கடத்தாது எமது மக்களுக்கான வீடுகளை உடனடியாக அரசாங்கம் அமைந்துக்கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
வடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்தை இந்தியாவுக்கா அல்லது சீனாவுக்கா கொடுப்பது என்பது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் வடக்கில் வீடுகள் நிர்மாணிக்கும் செயற்பாடுகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வினவிய போதே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்
வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றுள்ள பிரதான நெருக்கடி வீடுகள் இல்லாமையேயாகும். பலர் இன்றும் வீடுகள் இல்லாது மிகவும் கடினமான சூழலில் வாழ்ந்து வருகின்றனர். ஆகவே அவர்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து விட்டதால் மக்களின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது அரசாங்கத்தின் முக்கிய கடமையாகும். இராணுவத்தில் உள்ளவர்களுக்கு வீடுகளை ஜனாதிபதி நிர்மாணித்து கொடுக்கின்றார். ஆனால் போரிற்கு முகங்கொடுத்த தமிழ் மக்களுக்கு இன்றும் முகாம் வாழ்க்கையே வாழ நேர்கின்றது. காணிகள் முழுமையாக விடுபடாது மிகவும் மோசமான நிலையில் எமது மக்கள் உள்ளனர்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சில நன்மைகள் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளன. குறிப்பாக வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமிருந்த காணிகள் ஓரளவு விடுவிக்கப்பட்டுள்ளன. அரசியல் ரீதியாவும் சில நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் எமது மக்களுக்கான வீடுகளை நிர்மாணித்துக்கொடுக்க வேண்டும். இதில் இந்தியாவா சீனாவா என்ற இழுத்தடிப்புகள் இருக்கக்கூடாது. உடனடியாக வீடுகளை நிர்மாணித்து எமது மக்களின் வீட்டுப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.
வடக்கில் வீடுகளை நிர்மாணிப்பது இந்தியாவா அல்லது சீனாவா என்ற நிலைப்பாடு அரசாங்கத்திடம் உள்ளது. ஆனால் வடக்கில் இந்திய வீட்டுத்திட்டமே உகந்தது. வடக்கு அபிவிருத்திக்கூட்டத்தில் நாம் இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தெரிவித்துள்ளோம். ஏனெனில் வடக்கில் தமிழ் மக்கள் கலாசார பண்பாடுகளுடன் அதற்கேற்ற சூழலில் வாழ்ந்து பழகியவர்கள். அத்தோடு வடக்கின் காலநிலை தன்மைகள் வெப்பம், அமைவு என்பவற்றை கருத்தில் கொண்டும் வீடுகளை நிர்மாணிக்க வேண்டும்.
செங்கல் கொண்டு கட்டும் வீடுகளே எமது காலநிலைக்கும் ஏற்றதாகும். ஆகவே இந்தியா இந்த விடயத்தை சரியாக கையாண்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் உதவியில் நிர்மாணிக்கப்பட்ட ஐயாயிரம் வீட்டுத்திட்டம் எமது மக்களுக்கு சாதகமாக அமைந்தது. சீனாவின் திட்டம் எமக்கு ஏற்றால்போல் இல்லை. நுரைச்சோலை அனல் மின்நிலைய சாம்பலை கொண்டு வீடுகள் அமைப்பதாக கூறுகின்றனர் . இது பக்க விளைவுகளை நோய்களை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது. சீட் முறைமை வீடுகள் எவையும் வடக்கிற்கு ஒத்துவராது. ஆகவே இந்தியா வீட்டுதிட்டதியே அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.