விக்கியால் முடியாவிட்டால் நான் செய்து காட்டுகிறேன்
10 Aug,2018
வடக்கு மாகாணத்தை வீதி விபத்துகள் அற்ற மாகாணமாக மாற்றவேண்டும் என்று நீதிமன்றால் வடக்கு மாகாண அமைச்சர் என்று அறிவிக்கப்பட்டுள்ள பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.
வீதி விபத்துத் தொடர்பில், முதலமைச்சரும், அதிகாரிகளும் அடிமட்டத்துக்கு இறங்கி அர்ப்பணிப்போடு சேவை செய்ய முயற்சி செய்யவேண்டும். இல்லையேல் இன்னும் எத்தனையோ எமது உறவுகளை இழக்கவேண்டிவரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
முதலமைச்சரால் அவற்றைச் செய்ய முடியாவிட்டால் அமைச்சு பொறுப்பை தரவேண்டாம், தயவு செய்து ஒரு அனுமதியைத் தாருங்கள் இரவுபகலாக நின்று வேலை செய்து தருகிறேன் என்றும் டெனீஸ்வரன் சவால் விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நான் இரவுபகலாக பாடுபட்டு நியதிச்சட்டம் உருவாக்கி அதன் ஊடாக போக்குவரத்து அதிகார சபையை உருவாக்கி இருந்தேன். பிழை செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கு அந்தச் சட்டத்தில் இடமிருக்கின்றது.
பல்வேறு வேலைத்திட்டங்கள் செய்து வைத்திருந்தேன். அவையனைத்தும் தற்போது முதலமைச்சரின் கைகளில் உள்ளன. அனைத்தும் வெறுமனே கிடப்பில் போடப்பட்டுள்ளன. எம்மில் சிலர் தானும் செய்ய மாட்டார்கள் செய்பவர்களையும் விடமாட்டார்கள். இது எமது இனத்தின் சாபக்கேடு என்று டெனீஸ்வரன் கடிந்துள்ளார்.
வீதி விபத்தால் இன்று எமது மாகாணத்தில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மூலையில் ஒரு உயிரை இழந்து கொண்டு இருக்கின்றோம். இதைப் பார்த்துக்கொண்டு இப்படியே இருக்கப் போகிறோமா? சாரதிகளின் கவனக்குறைவு என்று காரணம் கூறப்போகின்றோமா? தங்கள் பிள்ளைகளையும் உறவுகளையும் இழந்து பரிதவிக்கும் குடும்பங்களின் வேதனையை உங்களால் உணரமுடியவில்லையா? என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.