பிக்குகளின் குரலை அடக்க வெள்ளைக்காரனுக்கே முடியவில்லை!
09 Aug,2018
நீதிமன்றத்தை அவமதித்ததாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் அடையாளப்படுத்தப்பட்டு 19 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்" என்று பிக்குமார் குரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
நாட்டை ஆண்ட வெள்ளைக்காரனுக்கே பிக்குமாரின் குரலை அடக்க முடியாது போனது என்பதை அரசாங்கம் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
கொழும்பு நாரஹேண்பிட்டி அபேராம விகாரையில் இன்று செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய முருதெட்டுவே ஆனந்த தேரர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
இது தொடர்பில் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டை முன்கொண்டு செல்வது தொடர்பில் அரசாங்கத்துக்கு தெளிவில்லை. இதனாலேயே தற்போது நாட்டின் எப்பக்கத்திலும் போராட்டம் வெடித்துள்ளது. இதற்காக வழங்கும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில்லை. பாராளுமன்றமும் இன்று கேலி கூத்தாகிவிட்டது. பாராளுமன்ற சபாநாயகரிடம் கேள்வி கேட்டால் அவர் அதற்கான விடையை இன்னொருவரிடம் கேட்டே பதிலளிக்கிறார்.
இந்நிலையில் நாட்டிலுள்ள பிக்குமார்களை அடக்குவதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. நாட்டை ஆண்ட வெள்ளைக்காரனுக்கு பிக்குமாரின் குரலை அடக்க முடியாது போனது. அந்த முயற்சியில் அரசாங்கம் ஈடுபடுமாயின் அது நாட்டின் அழிவுக்கான பாதையே ஆகும்.
ஞானசார தேரர் எதற்கும் அஞ்சாது துணிந்து பேசுபவர். இவரை அடக்குவதன் மூலம் ஒட்டுமொத்த பிக்குமாரின் குரலையே அடக்க அரசாங்கம் முயற்சித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்திலும் மகாநாயக்கர் சங்க தேரர் விழித்து கொள்ளவில்லையானால், தேரர்களுக்கு எதிரான வன்முறைகள் எதிர்வரும் காலங்களில் அதிகரித்து செல்லும் என்பதே உறுதி.
நாட்டு மக்களுக்கு தற்போது எதிரணி மீது சற்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனை நினைவில் கொண்டு அவர்களும் பலிவாங்கும் நடவடிக்கைகளை விட்டு நாட்டின் முன்னேற்றத்துக்கு பணியாற்றுவார்களாயின் அவர்களுடன் இணைந்து செயற்பட நாம் தயார். இது வரையில் பிக்குமார் சரியாக வீதிக்கு இறங்கவில்லை. அரசாங்கம் அதற்கான வழிகளை செய்கிறது. நாம் எமது தரப்பு நியாத்துக்காக போராட வீதிக்கு வந்தால் நாடு தாங்காது என்றார்.
இதேவேளை, இதன் போது உரையாற்றிய சதாதிஸ்ஸ தேரர் தெரிவிக்கையில்,
கொலைக் குற்றம், பாலியல் குற்றம் போன்றவற்றுக்காக அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படவில்லை. தேசத்துக்காக பேசியதனாலேயே அவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவருக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி சிறிசேன முன்வர வேண்டும்.
இல்லையானால் நூற்றுக்கணக்கான இளம் பிக்குமாரை அணித்திரட்டிக்கொண்டு வீதியில் இறங்கி போராட்டத் தயாராகியிருக்கிறோம். அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் உள்ள பிக்குமாரில் 80 சதவீதமானவர்கள் அரசாங்கத்துக்கு எதிராகவே இன்று திரும்பியிருக்கிறார்.
சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராகவும் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் எத்தகைய தீர்ப்பு வழங்கப்படும் என்பதை நாம் அவதானித்துக் கொண்டேயிருக்கிறோம். முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்திய உரை சட்டவிரோதமானது. அது குறித்து பாராளுமன்ற சபாநாயகரிடம் வினவினால் அவர் பொலிஸ்மா அதிபர் இன்னமும் அறிக்கை தரவில்லை என்ற பதிலே அவரிடமிருந்து வருகிறது.
அதேபோன்று, சபாநாயகரிடம் எதைக் கேட்டாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைக் கேட்டுத்தான் பதில் சொல்கிறார். விஜயகலா போன்று பொது ஜனபெரமுனவைச் சேர்ந்த எவராவது பேசியிருந்தால் தற்போது கடுமையான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எந்தவிதமான உருப்படியான காரியத்தையும் செய்யாமல் பிக்குமாரை சிறைக்கு அனுப்புவதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்ற அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பவேண்டும். எதிரணியினருடன் சேர்ந்து அதற்கானப் போராட்டத்தில் இறங்கத் தயாராக இருக்கிறோம் என்றும் தேரர் செய்தியாளர் மாநாட்டில் மேலும் கூறினார்.