விடுதலைப்புலிகளின் தமிழீழக் கொள்கை எங்கும் தடை செய்யப்படவில்லை :
07 Aug,2018
ஈழத்தமிழ் மக்களின் அரசியற்பெருவிருப்பாக அமைகின்ற தமிழீழத்தைக் கொள்கையாக கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள், அக்கொள்கைக்காக எங்கும் தடை செய்யப்படவில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசு தனது அரசென்னும் தகுதியின் மூலம் அனைத்துலக பரப்பில் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நெறிபிறழ்ந்த பயரங்கவாதச் செயலாகப் படம்பிடித்துக் காட்ட முயன்றது எனச் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் குறிக்கோளைக் காரணம் காட்டி அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப்புலிகள் 'பயங்கரவாத' இயக்கமாக என்றுமே பிரகடனப் படுத்தப்படவில்லை. அமெரிக்க உச்சநீதிமன்றம் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் கொள்கைகளை பரப்புரை செய்யவும், தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடியினை ஏற்றவும் தனி நபருக்கு உரிமை உள்ளதென தெட்டத்தெளிவாகக் கூறியுள்ளது. அமெரிக்கக் குடிமகன் எவராயினும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு 'பொருண்மிய' உதவி செய்வது மட்டுமே தடுக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஐக்கிய நாடுகளினால் ஒருபோதும் பயங்கரவாத இயக்கமாக குறிப்பிடப்படவில்லை. ஐ.நா. பாதுகாப்புச் சபை 693 தனி நபர்களையும் 400 இயக்கங்களையும் தடை செய்துள்ள பட்டியலில் தமிழீழ விடுதலைப்புலிகளோ அன்றி ஒரு தமிழரோ உள்ளடங்கவில்லை.
இதுபோலவே சுவிஸ் கூட்டரசுக் குற்றத் தீர்ப்பாயம் கடந்த யூனில் வழங்கிய தீர்ப்பும் 'தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு குற்ற அமைப்பு இல்லை' என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையின் முழு விபரம்:
என்ன குற்றம் செய்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று சிறிலங்கா அரசு மார்தட்டித் திரிவதையும், போர் முடிவுற்றுக் கிட்டத்தட்டப் பத்தாண்டு ஆவதையும், தமிழீழ விடுதலைப் புலிகள் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பே தங்கள் ஆயுதங்களை மவுனித்து விட்டோமென்று அறிவித்து விட்டதையும், இலங்கைத்தீவில் தமிழர்கள் மீதான கட்டமைப்பியல் இனவழிப்பு தொடர்வதையும் கருத்தில் கொள்வோமானால், மலேசியாவில் பினாங்கு துணை முதலமைச்சராக இருக்கும் பேராசிரியர் ராமசாமி குறித்தும் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளோடு அவரது உறவு குறித்தும் எழுந்துள்ள சர்ச்சை நகைப்புக்கிடமானது மட்டுமன்று, அறநோக்கில் சீற்றத்தையும் ஏற்படுத்துகின்றது.
பல பத்தாண்டுகளாகவே, தமிழர்களும், பல்வகைத் தமிழ் அமைப்புகளும் தமிழர்களை ஒரு மக்களினமாகவும் தேசமாகவும் அடையாளப்படுத்திக் கொள்ள எடுத்த ஒவ்வொரு முயற்சியும் 'பயங்கரவாதம்' என்றே முத்திரையிடப் பெற்றுள்ளது. ஒரு மக்களினத்தையே மொத்தமாகக் கொடியவர்களாய்க் காட்டும் இந்த அடாவடிப் போக்கு இன்று வரை தொடர்கிறது. கடந்த 2009ஆம் ஆண்டு போர் முடிந்ததோடு, இந்தப் பழிசுமத்தும் பரப்புரைகளின் உண்மைத் தன்மை இன்னுங்கூட வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
2009 மே 18க்குப் பின் இலங்கைத்தீவில் வன்முறைச் செயல் புரிந்து வருவது அந்நாட்டு அரசு மட்டுமே. இருப்பினும் தமிழர்கள் மீது தான் இந்த வன்முறை முத்திரை தொடர்ந்து குத்தப்பட்டு அவர்கள் இவ்வன்முறைப் பழிக்கு இரையாகி வருகிறார்கள். புகழ்பெற்ற மலேசியத் தமிழ் அறிஞரும் அரசியல் தலைவருமான பேராசிரியர் பி. ராமசாமி இவ்வகையில் மிக அண்மையில் இப்பழிக்கு ஆளாகியுள்ளவராகிறார். சிறிலங்காவில் 2002-2006 போர்நிறுத்தக் காலத்தில் அமைதியைக் கட்டியெழுப்பும் முயற்சியில் பங்காற்றியவர் என்பதற்காக அவர் மீது இவ்வாறு பழி சுமத்தப்பட்டுள்ளது. போர் முடிந்து விட்ட நிலையில் இந்தப் பழிதூற்றலின் அரசியல் நோக்கம் இப்போது தெட்டத் தெளிவாகி விட்டது.
இலங்கைத்தீவில் 1983-2009 காலத்தில் நிகழ்ந்த தேசவிடுதலைப் போரின் போது, போர்த் தரப்புகளில் ஒன்றாகிய சிறிலங்கா அரசு தனது அரசென்னும் தகுதியின் மூலம் மற்றைய நாடுகளின் மேல்தட்டு வர்க்கத்தையும், சர்வதேச ஊடகங்களையும் கைவசப் படுத்தி, அமெரிக்காவின் 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' பிரகடனத்தை தனக்கு சாதகமாகவும் பயன்படுத்தி தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நெறிபிறழ்ந்த பயரங்கவாதச் செயலாகப் படம்பிடித்துக் காட்ட முயன்றது.
சிறிலங்காவில் ஐநா நடவடிக்கை பற்றிய ஐநா பொதுச் செயலரின் உள்ளக ஆய்வறிக்கை (பெற்றி அறிக்கை ( 1)) தமிழ்த் தேசியத்தின் முன்னணி இயக்கத்தை ஒரு பயங்கரவாதக் கும்பலாக பன்னாட்டு அரங்கினர் கருதச் செய்வதற்கு அரசு எடுத்த முயற்சிகள் பற்றிக் குறிப்பிட்டது. தமிழர்களின் இராணுவப் படையினரைப் பயங்கரவாதிகளாக சித்திரிப்பதில் அரசு வெற்றி பெற்றுப் பன்னாட்டு ஒழுங்கமைப்பு முடங்கிப் போனதன் விளைவாகத் தான் போரின் கடைசிச் சில மாதங்களில் 70,000 பேர், பெரும்பாலும் தமிழ்ப் பொதுமக்கள், உயிரிழந்ததாக நம்பத்தக்க மதிப்பீடுகள் கூறுவதை பெற்றி அறிக்கை எடுத்துக் காட்டிற்று. அரசு தந்துள்ள விவரங்களின் படி அந்த மாதங்களில் சிறிலங்காப் படை நடவடிக்கையைத் தொடர்ந்து 1,47,000 பேரினது உயிர்கள் பற்றிக் கணக்கெதுவும் தரப்படவில்லை என மன்னார் கத்தோலிக்கப் பேராயர் மறைதிரு ராயப்பு ஜோசப் குறிப்பிட்டிருந்தார்.( 2)
இன்றுங்கூட நெறிசார் அரசியல் உரையாடலை ஒடுக்கவும், தமிழர் நலனுக்காகக் குரல் கொடுக்கும் பொது ஊழியர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், இதழாளர்கள் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் போன்றவர்களின்; மீது மாசு கற்பிக்கவும் இப்பயங்கரவாத முத்திரை பயன்படுத்தப்படுகிறது. இவ்வகையாக புதிய வடிவங்கள் கொண்டMcCarthyismநடத்தைகள் உடனேயே முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டியவை.
ஈழத் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தம் அரசியல் வேணவாக்களின் உருவகக் குறியீடாகப் பார்க்கிறார்கள். தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளின் தலைநகரங்களில் ஆண்டுதோறும் மாவீரர் நாள் நிகழ்ச்சிகளில் பத்தாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது தமிழீழ மக்கள் தொடர்ந்து விடுதலைப் புலிகளை மதிப்பதற்கும் சார்ந்திருப்பதற்கும் அவர்கள் மீது பற்றுறுதி வைத்திருப்பதற்கும் தெளிவான சான்று. ஈழத் தமிழர்தம் இதயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய நினைவை மழுங்கடிக்கச் செய்யும் முயற்சியில் சிறிலங்கா அரசு படுதோல்வி அடைந்து விட்டதற்கும் இதுவே சான்று.
ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, உலகெங்குமுள்ள தமிழர்கள் அநீதி எங்கிருந்து வரினும் அதை எதிர்ப்பதற்கான மானவுணர்ச்சியையும் அறத் துணிவையும் விடுதலைப் புலிகள் தந்த கொடையென்றே மதிக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் கருத்தியல், அதாவது சுயநிர்ணய உரிமையைக் கொண்டு சுதந்திர அரசமைத்தல் என்பது ஐநா அரசியல் குடியியல் உரிமைகள் உடன்படிக்கையிலும் சாசனத்திலும், பொருளியல், சமூக, பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கையிலும் சாசனத்திலும், பன்னாட்டு; மரபுவழிச் சட்டமாக மதிக்கப்படும் ஐக்கிய நாடுகள் பொதுப் பேரவை 2625 தீர்மானத்திலும் வலுவாய் வேர் கொண்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் குறிக்கோளைக் காரணம் காட்டி அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப்புலிகள் 'பயங்கரவாத' இயக்கமாக என்றுமே பிரகடனப் படுத்தப்படவில்லை. அமெரிக்க உச்சநீதிமன்றம் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் கொள்கைகளை பரப்புரை செய்யவும், தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடியினை ஏற்றவும் தனி நபருக்கு உரிமை உள்ளதென தெட்டத்தெளிவாகக் கூறியுள்ளது. அமெரிக்கக் குடிமகன் எவராயினும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு 'பொருண்மிய' உதவி செய்வது மட்டுமே தடுக்கப்பட்டுள்ளது. பேச்சுச் சுதந்திரமும், ஒன்று கூடும் சுதந்திரமும், அமெரிக்காவில் மிகக் கவனமாகவே பேணப்படுகின்றன.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஐக்கிய நாடுகளினால் ஒருபோதும் பயங்கரவாத இயக்கமாக குறிப்பிடப்படவில்லை. ஐ.நா. பாதுகாப்புச் சபை 693 தனி நபர்களையும் 400 இயக்கங்களையும் தடை செய்துள்ள பட்டியலில் தமிழீழ விடுதலைப்புலிகளோ அன்றி ஒரு தமிழரோ உள்ளடங்கவில்லை.
சுவிஸ் கூட்டரசுக் குற்றத் தீர்ப்பாயம் பரபரப்பானதும் முக்கியமானதுமாகிய ஒரு வழக்கில் நீண்ட விசாரணையின் முடிவில் 2018 சூன் 14ஆம் நாள் வழங்கிய தீர்ப்பை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். 'தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு குற்ற அமைப்பு இல்லை'( * 3) என்று தீர்ப்பாயம் உறுதி செய்தது. 2002-2006 போர்நிறுத்தக் காலத்தில் சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு நெறிசார் இயக்கமாகவே கருதிச் செயல்பட்டது. அயலுலகின் ஏனைய உறுப்பு நாடுகளும், குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, சப்பான் ஆகிய நாடுகளும் அப்படித்தான் செய்தன.
மனித உரிமைகளைப் போற்றிக் காக்கும் உலகை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டுப் பாடாற்ற வேண்டிய நேரம் இதுவே.
குற்றங்கள் செய்தபோது கேள்வி முறையில்லாக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! ஆட்கடத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம்! அறிவு வெல்க! அறத்தின் கட்டளைகள் வெல்க! சட்டத்தின் ஆட்சி வெல்க! இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.