மஹிந்தவும் கோத்தாவும் சம்பந்தனுடன் பேசியது என்ன?
04 Aug,2018
இவ்வாரம் இலங்கை அரசியலில் அதிகமாக மக்களால் பிரஸ்தாபிக்கப்பட்ட பத்திரிகை செய்திகளில் மிக கவனத்தை ஈர்த்த செய்தியாக பேசப்படுவது. எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் உரையாடியதாக கூறப்படுகின்ற விடயம் .மற்றொன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து ஆற்றிய உரை. இன்னொன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் வடக்கு பிரச்சினைக்கு தீர்வின்றேல் அங்கு மீண்டும் பிரச்சினை உருவாகலாம் என்ற கருத்து.
பிரதமர் ரணில் யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த வேளை வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் வரட்சியினால் பாதிக்கப்பட்டவர்களின் கடனினை பதிலளிப்பு செய்யும் செயற்றிட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் யாருக்கு தண்டனை வழங்குவது யாழ்ப்பாணம் கொழும்பின் காலனித்துவ பகுதியல்ல என்ற கருத்தை கூறியிருந்தார். இது போலவே சந்திரிகா அம்மையார் தமிழ் மக்களின் உரிமைகள் அரசியல் அமைப்பினூடாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் வடக்கில் ஏற்பட்டது போன்ற பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டி வரும். புதிய அரசியல் அமைப்பை தாமதப்படுத்தினால் நல்லிணக்கம் பாதிப்படையும் என சந்திரிகா அம்மையார் எச்சரித்துள்ளார்.
இவ் வாரத்தின் மிக முக்கியமான சந்திப்பாகவும் அரசியல் நகர்வாகவும் பேசப்படுகின்ற விடயம் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவும் உரையாடிய விவகாரங்களாகும்.
சீன மக்கள் இராணுவத்தின் 91 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சீன தூதுவராலயம் ஏற்பாடு செய்திருந்த 23.7.2018 நிகழ்வில் சந்தித்த வேளையில் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் கோத்தபாய ராஜ
பக் ஷ ஆகிய இருவருடனும் தான் கலந்துரையாடியது பற்றி இரா. சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில். பல நெருக்கடியான விடயங்கள் குறித்து இருவரும் நீண்ட நேரம் என்னுடன் உரையாடினர். அரசியல் ரீதியாக அடுத்த கட்ட செயற்பாடு குறித்தும் வடக்கில் முன்னெடுக்கவிருந்த செயற்பாடுகள் தற்பொழுது ஏன் தடைப்பட்டுள்ளன என்ற காரணிகளை அவர்கள் இருவரும் என்னிடம் முன்வைத்தனர் என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்திருந்தார்.
தீர்வினை நோக்கிய பயணத்தை முன்னெடுக்கும் புதிய அரசியல் அமைப்பு விடயத்தில் நீங்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவ்விருவரையும் தான் கேட்டுக்கொண்டதாகவும் சம்பந்தன் தெரிவித்திருந்தார். சம்பந்தன் மேலும் தெரிவிக்கையில் தாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் இணைந்து நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்ல ஒத்துழைப்பு நல்கி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வர வேண்டும் .எனவும் தாம் தமிழ் மக்களின் உரிமைகளை ஜனநாயகத்தை பறிக்க நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் மஹிந்த கூறியதாக சம்பந்தன் தெரிவித்திருந்தார்.
சம்பந்தனுடனான உரையாடலில் மஹிந்த இன்னும் பல விடயங்களை மனம் விட்டு பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. அவை யாதெனின்.
மீண்டும் தாம் அதிகாரத்துக்கு வந்ததும் தமிழ் மக்களுக்கான பிரச்சினையை பேசி தீர்க்க முடியும் அதற்கு தமிழர் தரப்பு ஒத்துழைக்க வேண்டும்.
எங்களுடன் இணைந்து கூட்டமைப்பு செயற்பட வேண்டும்.
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் புதிய அரசியல் சக்திகள் உருவாகும் ஆபத்து ஏற்படும் என்பது பற்றியெல்லாம் மஹிந்தவும் கோத்தாவும் விலாவாரியாக பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலில் எதிர்க்கட்சித் தலைவர் மேற்படி இருவரிடமும் விடுத்த கோரிக்கை தொடர்பில் ஆக்கபூர்வமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் தீர்வுகளை நோக்கிய பயணத்தை முன்னெடுக்கும் புதிய அரசியல் அமைப்பு விடயங்களுக்கு தங்களின் பூரண ஆதரவு வேண்டுமென சம்பந்தன் மஹிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது போன்ற கோரிக்கைகளை இதற்கு முன்னும் எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கமாகவும், பக்குவமாகவும் பல தடவைகள் விடுத்துள்ளார். உதாரணமாக 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு சம்பூர் விடுவிக்கப்பட்ட வேளையில் எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கமாக இக் கோரிக்கையை விடுத்திருந்தார். ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மஹிந்த அணியினர் அதை ஏற்றுக்கொண்டதாகவோ ஒப்புக்கொண்டதாகவோ சாடை மாடை காட்டப்படவில்லை. மாறாக புதிய அரசியல் யாப்பை முன்னெடுப்பதை மஹிந்த அணியினர் கடுமையாக எதிர்த்து வந்தனர். புதிய அரசியல் யாப்பானது தமிழ் ஈழத்துக்கான முயற்சி நாட்டை துண்டாடுவதற்கு உண்டாக்கப்பட்டிருக்கும் சதி இதை நிறைவேற்ற ஒருபோதும் நாம் அனுமதிக்கப் போவதில்லையென கடுமையான எதிர்ப்பை காட்டி வந்தனர் மஹிந்த அணியினர்.
உபகுழுக்களின் அறிக்கைகளை கடுமையாக விமர்சித்தது மாத்திரமன்றி வழிப்படுத்தல் குழுவை அங்கீகரிக்காதவர்களாகவே அவர்கள் காணப்பட்டனர். உண்மை நிலையை கூறப்போனால் அரசியல் சாசன முன்னெடுப்புகள் தேங்கி போனதற்கு காரணம் இவர்களின் கடுமையான எதிர்ப்புகள். இந்த அணியினரின் கடுமையான எதிர்ப்பை தாங்க முடியாததன் காரணமாகவே நல்லாட்சி அரசாங்கம் தனது முயற்சிகளை இழுத்தடிப்பு செய்தது என்பது வளிப்படையான உண்மையாகும்.
13க்கு அப்பால் சென்று தீர்வை நல்குவேன் என்று வாக்குறுதி நல்கிய முன்னாள் ஜனாதிபதி தனது ஆட்சிக் காலத்தை எப்படி இழுத்து சென்றாரென்பது சாதாரண பாமரனும் விளங்கிகொண்ட யதார்த்தமாகும்.
நல்லாட்சி அரசாங்கம் மூன்று வருடங்களை மிக வெற்றிகரமாக கடத்திவிட்டது. அமைச்சர் மனோகணேஷன் சுட்டிக்காட்டியது போல் தேசிய பிரச்சினையை தீர்க்க வேண்டுமென கடந்த மூன்று வருடங்களில் உருவாக்க முடியாத புதிய அரசியல் அமைப்பு எதிர்வரும் ஒன்றரை வருடத்தில் உருவாக்க முடியுமா என வினா எழுப்பியுள்ளார்.
நிபுணர் குழுவை பயன்படுத்தி இரகசியமான முறையில் அரசியல் அமைப்பு வரைபை கொண்டு வருவதற்கு கூட்டமைப்பு முயற்சிப்பதாக கூட்டமைப்பின் மீது கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவதிலிருந்தே புதிய அரசியல் அமைப்பு நிைலமைகள் எவ்வாறு தலைகீழாக போகின்றதென்பது வளிப்படையாகவே தெரிகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எதிர்க்கட்சி தலைவரை கேட்டுக் கொண்ட விடயங்கள் தொடர்பில் தமிழ் மக்கள் எத்தகைய அபிப்பிராயங்களை கொள்ள முடியும் என்பது பற்றி கவனிப்போமாயின்
மீண்டும் நாம் அதிகாரத்துக்கு வருவோம். வரும் பட்சத்தில் தமிழ் மக்களுக்கான பிரச்சினையை பேசித் தீர்ப்போம் அதற்கு தமிழர் தரப்பு ஒத்துழைக்க வேண்டும் என்ற விடயம் தொடர்பில் மிக கவனமாக மஹிந்த உரையாடியுள்ளார். மீண்டும் நாம் ஆட்சிக்கு வருவோமென்ற அவரின் அதீத நம்பிக்கை இன்றைய ஆட்சியாளர்களின் பலவீனத்தையும் செல்வாக்கு இழப்புகளையும் மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாக உள்ளதோடு தமிழ்மக்கள் எதிர்காலத்தில் எமக்கு ஆதரவு நல்குவதன் மூலமே எதையாவது பெற வாய்ப்பிருக்கிறது என்ற மறை பொருளை மிக பக்குவமாகவும் சாணக்கியத்துடனும் வளிப்படுத்தியுள்ளார். மஹிந்த காரணம் கடந்த காலத்தில் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் மக்கள் எவ்வாறு செயற்பட்டார்கள் என்ற அனுபவத்தின் அடிப்படையில் இவை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஜனாதிபதியாக வர முடியுமென்ற நம்பிக்கையில் வீராப்பு பேசிக்கொண்டிருந்த தரப்பினர் தமது இந்த வளிப்படுத்தலின் மூலம் சிறுபான்மையினரின் அவசியத்தை உணர்ந்து அடியிட நினைக்கிறார்களா என்பதை மிக கவனமாக எதிர் கொள்ள வேண்டிய தேவை தமிழ் தலைமைகளுக்கு உண்டு. இதற்கு அப்பால் பயன்படுத்த வேண்டிய சூழலையும் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேசி தீர்க்க முடியுமென்பது ஒரு பழைய பல்லவி என்பது சாதாரணமாகவே விளங்கி கொள்ளக்கூடிய விவகாரமாகும். பேசி தீர்க்கும் அத்தியாயமென்பது பண்டா – செல்வா ஒப்பந்த காலந்தொட்டு அண்மைய தேசிய அரசாங்கத்தின் இழுத்தடிப்புகள் வரை ஏற்பட்ட அனுகூலங்கள் மூலமும் பிரதி கூலங்கள் மூலமும் புரிந்து கொள்ள முடியும். பேசி தீர்க்கும் பொறிமுறையில் தமிழ் மக்கள் எந்தளவு நம்பிக்கை கொள்வார்கள் அல்லது நம்பிக்கை வைப்பார்கள் என்பதை காலம் தான் தீர்மானிக்க முடியும். அதிலும் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் சர்வதேச அளவிலும் உள்நாட்டு முறையிலும் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் நிறைவு பெறுமானம் எவ்வாறு இருந்தது என்பது பதிந்து கொள்ளப்பட்ட விடயங்கள். கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மஹிந்த கால பேச்சுவார்த்தை தொடர்பாக விடுத்து வந்த அறிக்கைகள் எவ்வளவு உண்மைகளை உணர்த்தும் என்பது பற்றி விளக்க வேண்டிய தேவையில்லை.
எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தங்களுடன் சேர்ந்து செயற்பட வேண்டுமென்பது மஹிந்தவின் எதிர்பார்ப்பாகும். தமிழரசு கட்சி ஆரம்பிக்கப்பட்டு அதன் பின்னே அது தமிழர் விடுதலை கூட்டணியாக பரிணமித்து அதன் பின்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒன்று கூடிய காலம் வரையுள்ள சுமார் 68 வருட வரலாற்றிலும் சரி அல்லது 15 மேற்பட்ட பொதுத் தர்தல் காலத்திலும் சரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது அதன் தோழமை கட்சிகளாக இருந்த கட்சிகளின் தலைமைகளோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கைகோர்த்துகொண்ட வரலாற்று சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரியவில்லை. அதற்கு காரணம் 1958 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இன கலவரத்தின் பின்னணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சி இருந்துள்ளது என்பது. மற்றும் பண்டாரநாயக்கவினால் கொண்டு வரப்பட்ட தனி சிங்கள சட்டம் இன்னும் பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட சம்பவங்கள் தமிழ் கட்சிகளையோ அதன் தலைமைகளையோ ஒன்றுசேர விடவில்லையென்பது பொதுவாக கூறப்படுகின்ற காரணங்கள். அது மட்டுமன்றி 1972 ஆம் ஆண்டு திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவினால் உருவாக்கப்பட்ட சுதந்திர யாப்பில் தமிழர்களுக்கெதிரான பல கெடுபிடிகள் கொண்டு வரப்பட்டது என்பது தமிழ் மக்களின் மனதில் பதிந்து போன காரணங்களாக இருந்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியை ஆலிங்கனம் செய்த ஒரு சில வரலாற்று சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. உதாரணமாக 1965 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் தமிழரசு கட்சியும் தமிழ் காங்கிரஸும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டபோதும் கோணேஷர் கோயில் புனிதநகர் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தலைமைக்கும் தமிழரசு கட்சிக்கும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை ஏற்றிருந்த திருச்செல்வம் அமைச்சர் பதவியை துறந்தார்.
குறிப்பிட்டு கூறுவதானால் ஐக்கிய தேசிய கட்சியுடன் உடன்பட்டு போகிற பல சந்தர்ப்பங்கள் தமிழ் தரப்பினருக்கு உண்டாகிய போதும் அவை பல காரணங்களினால் தவிர்த்து கொள்ளப்பட்டது ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுதந்திரக் கட்சியுடன் உடன்பட்டு போகிற சந்தர்ப்பங்கள் உருவாகுவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இவ்வாறானதொரு நீண்ட வரலாற்று ஓட்டத்துடன் உருவாகியதே இன்றைய தேசிய அரசாங்கமாகும்.
வரலாற்றில் என்றுமில்லாதவாறு தேசிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு கட்சிகளும் கூட்டு சேருவதற்கு சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்த பெருமை சிறுபான்மை கட்சிகளை சாரும். வடக்கு, கிழக்கு, தெற்கு தமிழ் முஸ்லிம் சிங்களம் தென்னிலங்கை வடகிழக்கு, மலையகம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்று இணைந்துகொண்ட ஒரு தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
இது உருவாகுவதற்கு பல காரணங்கள் நதி மூலமாக இருந்தபோதிலும் நீண்டகாலமாக புரையோடிபோய் காணப்படும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டுமென்ற ஆழமான அத்திவாரத்தில் உருவாக்கப்பட்டதே தேசிய அரசாங்கமானதாகும். 30 வருட கால யுத்தம் நாட்டின் பொருளாதாரத்தை மாத்திரமன்றி இனவுறவுகள், நல்லிணக்கம், பிராந்திய ஒற்றுமை, மத கைங்கரியங்கள் அனைத்திலுமே பாதகமான நாசத்தை விளைவித்த நிலை உணரப்பட்டே தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
இதன் பிரதான குறிக்கோளாக காணப்பட்ட விடயம் தேசிய பிரச்சினைக்கு அரசியல் யாப்பு மயப்பட்ட தீர்வை கொண்டுவரப்பட வேண்டுமென்ற தூரநோக்கு மற்றும் ஆழமான அனுபவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். அந்த குறிக்கோளின் அப்பாற்பட்டதே அரசியல் யாப்பை உருவாக்கும் முயற்சியாகும். ஆனால் அந்த முயற்சிக்கு தடையாக இருக்கின்ற காரணிகள் அல்லது சவால்கள் எவையென்பது தளிவாகவே உணரப்படுகின்ற விடயமாகும்.
தேசிய அரசாங்கத்துக்கு தலைமை தாங்குகின்ற தலைமைகள் மக்களுக்கு பயப்படுகின்றதை விட தம் எதிரே நிற்கும் மாற்றுத்தலைமைகளுக்கு பயப்படுவதன் காரணமாகவே அரசியல் யாப்பு சார்ந்த முயற்சிகளில் அதிக அக்கறை காட்டாமல் இழுத்தடித்து வருகிறார்கள்.
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென்ற உண்மையை மஹிந்த தரப்பினர் ஏற்றுக்கொண்டிருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். கடந்த 35 வருடங்களுக்கு மேலாக ஒப்பீட்டு ரீதியில் வடகிழக்கு அபிவிருத்தி ஏனைய பிரதேசங்களை விட பாரிய பின்னடைவு கொண்டதாக காணப்படுகிறது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. தென்னிலங்கையுடன் ஒப்பிடும் போது எல்லா துறையிலும் பாரிய பின்னிலை கொண்டதாகவே காணப்படுகிறது என்பது பலவிதமான காரணிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வேலையில்லாப் பிரச்சினை விவசாயத் துறையின் அபிவிருத்தி குறைவு. தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி துறையின் அதிகரிப்பு இன்மை உல்லாச பயணத்துறை கவனிக்கப்படாமை நிர்மாணத்துறையின் வீழ்ச்சி போக்குவரத்து துறையின் வளர்ச்சியின்மை என ஏகப்பட்ட துறைகளில் வடகிழக்கு பின்னடைவு கொண்டதாகவே காணப்படுகிறது.
இது தொடர்பில் மாகாண அமைச்சர்களின் பொறுப்பாண்மை கையளிக்கப்படவில்லை என்பதற்கு அப்பால் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் நிதியொதுக்கங்களில் காட்டப்படுகின்ற பாகுபாடு காரணமாகவே அப்பிரதேசங்கள் அபிவிருத்தி அடையவில்லையென்பது பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களாகும்.
வடமாகாண முதலமைச்சர் வடக்கின் அபிவிருத்தி தொடர்பில்காட்டப்படுகின்ற ஓரவஞ்சக தன்மை பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டி வருவது மாத்திரமன்றி அரசாங்கத்துடன் அடிக்கடி முரண்பட்டு கொண்டிருப்பதையும் கேள்வியுறுகிறோம். வடமாகாணத்துக்கான முதல் அமைச்சர் நிதியொன்று ஸ்தாபிக்கப்படவேண்டும் என விடுத்த கோரிக்கைகள் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு புறமிருக்க வடமாகாண அபிவிருத்தி தொடர்பில் மாகாண சபையுடன் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு செயற்படுவது தொடர்பாக பல அதிருப்திகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படா விட்டால் வட கிழக்கில் புதிய சக்திகள் உருவாகும் சூழ்நிலை ஏற்படும் என்ற ஒரு யதார்த்தத்தை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின் வடகிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய சந்தர்ப்பங்கள் பல முனைகளிலும் இருந்தபோதிலும் அவை அனைத்துமே திட்டமிட்ட முறையில் தட்டி கழிக்கப்பட்டது. தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்ற அழுத்தங்களை இந்தியா உட்பட போருக்கு உதவிய அனைத்து நாடுகளும் அழுத்தம் கொடுத்த போதும் முன்னைய அரசாங்கம் அதை பொருட்படுத்தாமல் ஏமாற்றும் கைங்கரியங்களை மேற்கொண்டதே தவிர இதய சுத்தியுடன் செயற்படவில்லை. போருக்கு பின்னரான நிைலமைகளில் ஐ. நா. உட்பட ராஜதந்திர வட்டாரங்கள் தீர்வை முன்வைத்து நிரந்தரமான அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வாருங்கள் என ஆலோசனை வழங்கிய போதும் அந்த விடயத்தில் அக்கறை செலுத்தாது போரை வெற்றி கொண்ட கர்வத்தில் மஹிந்த அரசாங்கம் செயற்பட்டதே தவிர எவ்வித ஆரோக்கியமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லையென்பது தமிழ் தரப்பினரின் குற்றச்சாட்டாக இருந்துள்ளது. அத்தகைய ஒருவர் தான் தற்போது பிரச்சினை தீர்க்கப்படா விட்டால் வடகிழக்கில் புதிய சக்தி உருவாக வாய்ப்பிருக்கிறதென்று கூறியுள்ளார்.
வடக்கு, கிழக்கை பொறுத்தவரை பிரதமர் கூறினாலும் சரி கூறா விட்டாலும் சரி கொழும்பு ராஜ்ஜியத்தின் காலனித்துவ பிரிவாகவே பார்க்கப்ப டுகிறதென்பது ஒரு கசப்பான உண்மை.
மாற்றங்களும் மாறுதல்களும் பாய்ச்சல்களும் இயற்கையின் நியதி. அந்த வகையில் முன்னாள் ஜனா திபதி தமிழர்கள் விடயத்தில் தன்னை தற்பொழுது சுதாகரித்து கொண்டிருக்கலாம். இன்னொரு வகையில் கூறுவதானால் மனமாற்றங்களுக்கு உட்பட்டிருக்கலாம். இது மனமாற்றங்கள் என்பதை விட நாட்டின் எதிர்கால நன்மை கருதி மாற்றங்களுக்கு ஆளாக வேண்டிய தேவை எல்லா தரப்பிற்கும் உண்டு என்பதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். மஹிந்த ராஜபக் ஷ கோத்தபாய ராஜ
பக் ஷ சார்பான மனப்பதிவுகள் தமிழ் மக்கள் மத்தியில் எவ்வாறு இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு விளக்கம் தேவையில்லை. சந்திரிகா அம்மையாரின் கருத்தை உரைத்து பார்க்கக் கூடிய இலங்கையர் ஒவ்வொருவரும் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் ஒரு பிரச்சினை தங்களுடைய அடையாளங்களை உறுதிப்படுத்தி கொள்வதற்கானதாகவே காணப்படுகிறது. அந்த வகையில் இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதி யில் வாழும் தமிழ் மக்கள் தங்களுடைய அடை யாளங்களை உறுதிப்படுத்தி கொள்வதற்கும் அதற்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும் பல வருடங்களாக போராடி வருகிறார்கள் அதை தொடர்ந்து புறக்கணிப்போமாயின் நாடு நல்லிணக் கத்தை அடைய முடியாது என பகிரங்கமாகவே கூறியுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் த ன் எதிர்க்கட்சி தலைவருடனான சந்திப்பில் முன்னாள் ஜனாதிப தியான மஹிந்தவும் பாதுகாப்பு செயலரும் உரை யாடியுள்ளனர். இந்த சந்திப்பு தொடர்பில் தமிழ் மக்களின் எண்ண அலைகள் புதிய கருத்துக்களை கொண்டதாகவே காணப்படுகிறது.குறிப்பிட்டு கூறுவதானால் தேசிய அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் விசுவாசம் எல்லாம் கரைந்து போய் அவநம்பிக்கைகளும் விரக்திகளுமே எஞ்சி நிற்கின்றது. இந்த அரசாங்க காலத்தில் தீர்வை அடைந்து விடலாம் நல்லிணக்கம் உண்டாகி விடும் என்ற எதிர்பார்ப்புகளும், நம்பிக் கைகளும் குலைந்து போன நிலையில் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். எவ்வாறு பிரேமதாஸவுக்கு பயந்தாரோ சந்திரிகா அம்மையார் ரணிலுக்கு பயந்தாரோ அதேபோன்றே இன்றைய அரசு எதிர ணியினருக்கு பயந்து கொண்டிருக்கும் சூழலை மஹிந்த அணியினர் பயன்படுத்த பார்க்கின்றார் கள் என்பதை மேற்படி உரையாடல் சுட்டிக்காட்டு கிறது.