என்மீது பொய்க் குற்றச் சாட்டு
26 Jul,2018
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தன்மீது பொய்க் குற்றச் சாட்டு சுமத்துவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மகாணசபை அமர்வு தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
அனந்தி சசிதரனிடம் துப்பாக்கி இருப்பதாக அயூப் அஸ்மின் கூறியிருந்தார்.
இது தொடர்பில், இன்று அனந்தி சசிதரனால் தன்னிலை விளக்கம் கொடுக்கப்பட்டது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே குழப்ப நிலையும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு என்னை பலியாக்குகின்றனர்:
மாகாண சபைத் தேர்தலை இலக்காக கொண்டு, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக தன்னை பலிக்கடாவாக மாற்றுவது வருத்தமளிப்பதாக வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வடமாகாண சபையின் 128ஆவது அமர்வில் துப்பாக்கி விவகாரம் தொடர்பாக தன்னிலை விளக்கம் அளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
தான் துப்பாக்கி வைத்துள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினின் கருத்து தனது சிறப்புரிமையை மீறும் செயல் என்ற பிரேரணையை சபையில் முன்வைக்க அனந்தி ஏற்கனவே அனுமதி கோரியிருந்தார்.
ஆனால் அதற்கான அனுமதி அவைத் தலைவரினால் மறுக்கப்பட்ட நிலையில், தன்னிலை விளக்கமளிக்க இன்று சபையில் அனுமதிக்கப்பட்டது.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”அஸ்மினின் கூற்றின் மூலம் நான் ஒரு ஆயுததாரி, ஆயுதங்களில் விருப்பம் இருப்பவள் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளேன்.
அதுமாத்திரமின்றி இதனை எனக்கும் எனது குழந்தைகளுக்கும் உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கருத்தாக பார்க்கின்றேன்.
சபையில் 37 ஆண் உறுப்பினர்களின் மத்தியில் ஒரே பெண் உறுப்பினராக நான் விளங்குகின்றேன். இந்த விடயத்தினை எதிரணியினர் கேட்டிருந்தால், அதற்குரிய பதிலை வழங்கியிருக்க முடியும். ஆனால், ஆளும் தரப்பினரே இவ்வாறு கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது.
உறுப்பினர் அஸ்மின் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலும், எனக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் வகையிலும் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளமை தொடர்பாக சபை அவரை கண்டிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இவ்விடயம் சபையில் ஆளும் தரப்பினரிடையே பெரும் வாக்குவாதங்களை ஏற்படுத்தி இருந்ததுடன், சபையில் பெரும் குழப்பநிலையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.