இந்திய- சீன இராஜதந்திர இழுபறிகளால் வீடமைப்புத் திட்டம் முடக்கம்
26 Jul,2018
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல்களால், வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் முடங்கியுள்ளதாக, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார்.
”வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தை, ஒரு வீட்டை இந்தியா 2.2 மில்லியன் ரூபாவுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க முன்வந்திருந்தது.
ஆனால், 1.3 மில்லியன் ரூபாவுக்கு கட்டிக் கொடுக்க சீனா முன்வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை சீனாவுக்கு வழங்குவதை இந்தியா எதிர்க்கிறது.
இந்த இராஜதந்திர மோதல்களால் இதுகுறித்து முடிவெடுக்க முடியாதுள்ளது.
எனினும், இரண்டு தரப்புகளுடனும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சு நடத்துவார். ஏனென்றால், இரண்டுமே எமது நட்பு நாடுகள்.
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சரவை அடுத்தவாரம் அதிகார பூர்வ அறிக்கை ஒன்றை எதிர்பார்க்கிறது.
இந்தப் பிரச்சினை சுமுகமாக தீர்த்துக் கொள்ளப்படும் என்பதில் சந்தேகமில்லை.
அரசாங்கத்தின் பிரதான கரிசனை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பது தான்.
இரண்டு நட்பு நாடுகளின் பிரச்சினைகளால் இதில் தாமதம் ஏற்பட்டு விடக் கூடாது.” என்றும் அவர் கூறினார்.