தமிழர்களின் உணர்வுகளை நல்லாட்சி புரிந்து கொள்ளவில்லை –
24 Jul,2018
தமிழ் மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது கோபம் கொண்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்கள் தொடர்பில் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள குறிப்பு ஒன்றிலேயே அமைச்சர் மனோ கணேசன் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் பதிவிட்டுள்ள குறிப்பில்,
‘இன்று காலை அமைச்சரவையில் வடக்கு, கிழக்கில் வீடு கட்டுதல் தொடர்பில் கடும் வாத, விவாதம் ஏற்பட்ட போது நான் ஜனாதிபதியை பார்த்து சுத்த சிங்களத்தில் சொன்னது.
அமைச்சரவையில் அனைவரும் கேட்டுக்கொண்டு இருந்தார்கள்,
விஜயகலாவை முழுநாடும் திட்டுகிறது. அவரது கருத்தை நானும் ஏற்கவில்லை. ஆனால் அவரது கருத்திற்கு பின்னுள்ள உண்மையை யாரும் உணரவில்லை. வடக்கு, கிழக்கில் எவ்வித வாழ்வாதார அபிவிருத்தியும் செய்யப்படவில்லை.
இங்கிருந்து தலைவர்கள் அங்கு போய் வாக்குறுதிகள் அளிப்பதுதான் தொடர்ந்தும் நடக்கிறது. ஆனால் அங்கு ஒன்றும் நடைபெறுவதில்லை. மூன்று வருடங்கள் கழிந்தும், அங்கு அமைச்சர் சுவாமிநாதன், தனக்கு ஒதுக்கப்பட்ட 40 ஆயிரம் வீடுகளில் ஒரு வீட்டையேனும் கட்டவில்லை.
இந்தநிலையில் தற்போது மேலும் 50 ஆயிரம் வீடுகள் கட்டும் பொறுப்பு, உங்கள் அமைச்சு மூலம் என்னிடம் வந்துள்ளது. அதற்கும் பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றது.
யார் என்னதான் அங்கு போய் சொல்லி வந்தாலும், அங்கு மக்கள் நியாயமாக கோபம் கொண்டுள்ளார்கள். உங்கள் மீது, பிரதமர் மீது, நம் அரசாங்கம் மீது கோபம் கொண்டுள்ளார்கள்’ என பதிவிட்டுள்ளார்.