எலும்புக் கூடுகளின் மீட்பு, இராணுவத்தின் போர்க்குற்ற சாட்சியங்களாக அமைகின்றன
24 Jul,2018
..
தமிழர் பிரதேசங்களில் எலும்புக் கூடுகள் மீட்கப்படுவதானது போர்க்காலத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதையும் இராணுவத்தின் போர்க்குற்ற சாட்சியங்களாகவும் அமைவதாகவும் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா இவை குறித்து நேர்மையோடும் நம்பிக்கையோடும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்,மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தின் செம்மணி மட்டுமல்ல எல்லா இடங்களிலும் பொதுத் தேவைகளுக்காக அல்லது வீடுகளைக் கட்டுவதற்காக நிலங்களைத் தோண்டுகின்ற போது மனித எலும்புக் கூடுகள் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு மீட்கப்படவதானது எவ்வளவு தூரத்திற்கு மனித உடல்கள் அழிக்கப்பட்டு அவை புதைக்கப்பட்டு இருக்கின்றதென்பது நிருபணமாக இப்போது வெளியே வந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறு எமது பகுதிகளில் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்படுவது பற்றி நாங்கள் முக்கிய கவனமெடுக்க வேண்டும். இந்த விடயத்தில் வெளிநாட்டு நிபுணத்துவம் வாய்ந்தவர்களை ஈடுபடுத்தி அந்த எலும்புக் கூடுகள் தொடர்பில் ஆராய்ந்து அவை யாருடையவை என்பது பற்றியும் ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.
அதே வேளையில் இந்த அரசாங்கமும் திட்டவட்டமாக நேர்மையோடு நம்பிக்கையோடு அந்தப் புதைகுழுகளில் அல்லது பொது இடங்களில் தற்போது கண்டுபிடிக்கப்படுகின்ற எலும்புக் கூடுகளை முக்கியமாக ஆராய வேண்டும். அதற்கமைய நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்க வேண்டியதும் அவசியம்.
போர்க் காலங்களிலும் அதற்கு அண்மையான காலங்களிலும் கூட தமிழ் மக்கள் பலர் காணாமல் போனவர்கள் அல்லது கைது செய்யப்பட்டவர்கள் என்று பலர் உள்ளனர். இவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருப்பது மேலும் மேலும் உறுதிப்படுத்தக் கூடிய செய்தியாக இன்றைக்கு வெளியே வந்து கொண்டிருக்கின்றன.
இத்தகைய சம்பவங்களானது இந்த நாட்டில் தமிழ் மக்கள் கொல்லப்ட்டிருக்கிறார்கள் என்பதை போர்க்குற்றங்களாக நிருபிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நாங்களும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் எச்சரிக்கையோடு அனுகி அந்த விடயங்களை பார்க்கின்றோம்.
இவற்றையெல்லாம் பார்க்கின்ற போது போர்க் காலங்களில் இரானுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக பல குற்றங்களை நிருபிக்கக் கூடியதாக உள்ளன. மேலும் மனித எலும்புக் கூடுகளும் எச்சங்களும் இதற்குச் சாட்சியங்களாக இருக்குமென்பதையும் தெரரிவிக்கின்றோம்.
ஆகவே இந்த விடயங்களை முன்கொண்டு வர வேண்டியவர்களாகவும் அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களாகவும் நாங்கள் இருக்கின்றோம். அதற்கமைய தமது செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க உள்ளதாகவும் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.