இன்றைய நாளில் சிங்கள மக்களை பிரம்மிக்க வைத்த நீதிபதி இளஞ்செழியனின் செயல்
22 Jul,2018
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் சரத் ஹேமச்சந்திரவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கடந்த வருடம் இதேபோன்றதொரு நாளில் (ஜுலை 22) யாழில் வைத்து நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியிருந்தது.
யாழ்ப்பாணத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த இந்த சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் நீதிபதி இளஞ்செழியனின் உயிரை பாதுகாக்க போராடிய இரு பாதுகாவலர்களில் சரத் ஹேமச்சந்திர உயிரிழந்தார்.
இந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்று ஒருவருடம் ஆகியுள்ளதால் இன்று சிலாபம் - சின்னவத்தையில் உள்ள சரத் ஹேமச்சந்திரவின் இல்லத்திற்கு சென்று நீதிபதி இளஞ்செழியன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அத்துடன், ஹேமச்சந்திரவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கும் இளஞ்செழியன் சென்று அஞ்சலியை செலுத்தியுள்ளார். அவரின் இந்த செயற்பாடுகள் சிங்கள மக்களை பிரம்மிக்க வைத்துள்ளது.
சரத் ஹேமச்சந்திரவின் உயிரிழப்பிற்கு பின் அவரின் குடும்பத்திற்கு தொடர்ச்சியாக நீதிபதி இளஞ்செழியன் உதவிகளை செய்து வருகிறார்.
இதேவேளை ஹேமச்சந்திரவின் இல்லம் அமைந்திருக்கும் சின்னவத்தை பகுதியில் குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கி வந்ததையடுத்து இளஞ்செழியன் குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிவகைகளை செய்துள்ளார்.
பல அரசியல்வாதிகள் கூட தம்முடைய மெய்ப்பாதுகாவலர்கள் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் உயிரிழந்தால் தேவையான உதவிகளை செய்து விட்டு அத்துடன் மறந்து விடுகின்றனர்.
ஆனால் நீதிபதி இளஞ்செழியன் 17 வருடங்களாக தன்னுடனிருந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்தின் மீது அக்கறை கொண்டு தேவையான அனைத்து உதவிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் ஹேமச்சந்திரவின் இல்லம் அமைந்துள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் வசிக்கும் பகுதி மக்களுக்கும் உதவியுள்ளார்.
இளஞ்செழியனின் இந்த செயற்பாடுகளானது இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதுடன், இதனை அனைவரும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான செயல்கள் மூலம் நீதிபதி இளஞ்செழியன் வடக்கு, கிழக்கு மட்டுமல்லாது தென்னிலங்கை உட்பட நாட்டிலுள்ள அனைத்து மக்களின் மனங்களிலும் நீங்கா இடம்பிடித்துவிட்டார் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.