யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள- 93 கடற்படை முகாம்களும், 54 இராணுவ முகாம்கள்!!
21 Jul,2018
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது 93 கடற்படை முகாம்களும் 54 இராணுவ முகாம்கள் , ஒரு விமானப்படை தளம் என்பன இயங்குவதோடு 18 பொலிஸ் நிலையம் உட்பட 30 பொலிஸ் அலுவலகம் இயங்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வாழும் சுமார் 5 லட்சம் மக்கள் வாழும் குடாநாட்டில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடியை நம்பியே வாழும் நிலையில் கடற்படையினரே அதிக இடங்களை அபகரித்து நிலைகொண்டுள்ளமையினால் மீனவர்களின் வாழ்வாதாரம் இன்றும் பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இதிலும் குறிப்பாகக் குடாநாட்டைச் சூழ 93 முகாம்களில் குடியிருக்கும் கடற்படையினர் தீவகத்தைச் சூழ்ந்த பிரதேசத்தில் மட்டும் 61 முகாம்களில் கடற்படையினர் நிலைகொண்டுள்ளதோடு, குடாநாட்டின் ஏனைய பகுதிக் கரையோரத்தில் 32 இடங்களில் நிலைகொண்டுள்ளனர். இவ்வாறு நிலைகொண்டுள்ள கடற்படையினர் மக்களிற்குச் சொந்தமான 269 ஏக்கர் நிலத்தினையும் அரச காணிகளில் 260 ஏக்கரையும் அபகரித்தே நிலைகொண்டுள்ளனர்.
இதேநேரம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் சிவில் நிர்வாகச் செயல்பாட்டிற்காக செயல்படும் பொலிஸாரும் மக்களின் நிலங்களைக் கையப்படுத்தும் நடவடிக்கையில் குறைவில்லாமலே செயலாற்றுகின்றனர். அதன் வகையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள 18 பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்கள் அலுவலகம் , பொலிஸ் விடுதிகள் என மொத்தமாக 30 இடங்களில் மக்களின் நிலத்தைக் கையகப்படுத்தியே பொலிஸாரும் தங்கியுள்ளனர். இவை சுமார் 200 குடும்பங்களிற்குச் சொந்தமான நிலங்கள்.
அவ்வாறு பொலிஸார் தங்கியிருக்கும் நிலங்களை விடுவிக்குமாறு உரிமையாளர்கள் கோரிக்கை விடுக்கும் நிலையிலும், பல இடங்களை நிரந்தரமாக சுவீகரிக்கும் செயலில் பொலிஸார் இறங்கியுள்ளனர். இதன்காரணமாக நீதிமன்றை நாட உரிமையாளர்களும் தயாராகின்றனர். இதில் நெல்லியடிப் பொலிஸார் தற்போது தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் வீட்டை ஒப்படைக்குமாறு கோர பதில்காணியை பொலிஸார் கோரியதற்கினங்க மாவட்டச் செயலகம் ஓர் நிலத்தை வழங்கியிருந்தது.
இந்த நிலையிலும் குறித்த நிலம் நகரில் இருந்து சற்றுத் தொலைவில் உள்ளது . அதனால் நகரை அண்டிய பகுதியில் வேறு காணியை வழங்குமாறு பொலிஸார் தற்போது கோருகின்றனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயங்கும் 18 பொலிஸ் நிலையங்களில் 14 பொலிஸ் நிலையங்கள் தனியார் காணியை அபகரித்தே இயங்குகின்றனஎனவும் கண்டறியப்பட்டுள்ளது.