
ஒட்டுசுட்டான் பிரதேச மக்களின் காணி பிரச்சினைகளை தீர்த்து வைக்க மாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் முனைப்பு!
கடந்த 02.02.2014 அன்று ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில், மக்கள் தமது காணி தொடர்பான பிரச்சினைகளை மாகாணசபை உறுப்பினரும் வைத்தியகலாநிதியுமாகிய சி.சிவமோகனிடம் முறையிட்டதையடுத்து, அவர் மக்களின் காணி பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
ஒட்டுசுட்டான் பிரதேசம் முத்துஐயன்கட்டு இடதுகரை கிராமத்தில் மட்டும் கடந்த 35-40 வருடங்களாக 130க்கும் மேல்பட்ட குடும்பங்கள் சொந்த காணி இல்லாமலும், காணி தொடர்பான பிணக்குகளுடனும் வசித்து வருகின்றன.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் பல தடவைகள் காணி கச்சேரிகள் நடத்தப்பட்டும் மக்களுக்கு இதுவரை காணி உரித்து பத்திரங்கள் வழங்கப்படாமையினால், அவர்கள் வீட்டுத்திட்ட பயனாளர் பட்டியலில் இடம் பெறுவதிலும், வீடுகளை பெறுவதிலும் பல தடைகள் ஏற்பட்டுள்ளன.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் முப்பது வருடங்களுக்கு முன்னர், அந்த பிரதேசத்திலேயே வசிக்காத பலருக்கு மத்தியதர வகுப்பு, படித்த வாலிபர் திட்டம் எனும் காணி ஒதுக்கீடு அடிப்படையில் காணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த காணிகளுக்கு உரித்துடையவர்கள் யார்? அவர்கள் இப்போது உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? அப்படி இருந்தால் அவர்கள் இப்போது எங்கிருக்கின்றார்கள்? என்று நீண்ட காலமாக இப்பிரதேசத்தில் வசித்து வரும் தமக்கே , அவர்கள் யார் எவர்? என்ற ஆளடையாளங்கள் தெரியாது என்றும், அதனாலேயே அக்காணிகளில் தாம் குடியிருப்பதாகவும், பல வருடங்களாக தாம் குடியிருக்கும் குறித்த காணிகளுக்கு யாரும் இதுவரை உரிமை கோரி தம்மிடம் வரவில்லை என்றும், மக்கள் மாகாணசபை உறுப்பினர் சிவமோகனிடம் தெரிவித்தனர்.
மக்களின் குறைகளை கேட்ட சிவமோகன், மக்கள் முன்னிலையிலேயே ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளருக்கும், வடமாகாண காணி ஆணையாளருக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “மக்களின் காணி பிரச்சினைகளை, அதிலுள்ள குறைகளை, மக்களின் இடர்நிலையை, அவல வாழ்வை அவர்களுக்கு விளக்கிக்கூறி, முன்னைய பதிவுகளை இரத்து செய்து, நீண்ட பல வருடங்களாக குடியிருக்கும் தற்போதுள்ள மக்களுக்கு காணி உரித்து பத்திரங்களை வழங்குமாறும், இறுதி யுத்தத்துக்குப்பின்னர் மீளக்குடியமர்த்தலின் போது பிரதேச செயலகங்களால் எப்படி இப்போது இந்த மக்கள் குடியிருக்கும் காணிகளில் தற்காலிக குடில்களை அமைத்துக்கொடுக்க முடிந்ததோ, அதேபோன்று வீட்டுத்திட்டங்களையும் பெற்றுக்கொடுக்குமாறும்” கேட்டுக்கொண்டார்.
மாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர்கள், “தற்போதைக்கு உடனடியாக இந்த விடையம் சாத்தியமாகாது எனவும், எனினும் முடிந்தவரை ஒரு வருட காலத்துக்குள் தாம் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களுக்கு காணிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.