வடக்கு, கிழக்கில் சர்வதேசத்தின் கண்காணிப்புடன் இடைக்கால நிர்வாகம் ஒன்றை அமைக்க வேண்டும்: - யாழில் கனடிய அதிகாரிகளிடம் கூசூஞகு வலியுறுத்தியது.
ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு முன்னதாக ராஜதந்திரவட்டாரங்கள் பலவும் வட- கிழக்கிற்கு தொடர்ந்தும் படையெடுத்து வந்தவண்ணமேயுள்ளன. அவ்வகையில் யாழ். மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்த கனேடிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். கனேடிய வெளிவிவகார அமைச்சைச் சேர்ந்த ஜே.எஸ்.நிகார் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் இரு நாள் பயணமாக நேற்றுக் காலை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தனர். முதலில் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தினை சந்தித்த அவர்கள் நண்பகலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை சந்தித்துள்ளனர்.
யாழ்.மாவட்டத்தின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பிலேயே இவர்கள் அதிகளவு கவனம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் யாழ். நகரில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டுள்ளனர். குறிப்பாக மக்களிடமிருந்து நேரடியாக தகவல்களை திரட்டுவதிலேயே முனைப்பு காட்டியிருந்தனர். ஏற்கனவே தமிழ் கனேடிய நாடாளுமன்றகுழு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்புத் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் மேலும் ஊடககவியலாளாகளுக்கு தெரிவித்திருப்பதாவது.
இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கனடா வலியுறுத்த வேண்டும். அத்துடன் வடக்கு, கிழக்கில் சர்வதேசத்தின் கண்காணிப்புடன் இடைக்கால நிர்வாகம் ஒன்றை அமைக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கனடாவின் தென்னாசியாவிற்கான சிரேஷ்ட அதிகாரிகள் குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள கனடா நாட்டின் தென்னாசிய விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரியான ஜே மேகன் பொஸ்ரர், சரா ஜூலிஸ் அடங்கிய குழு நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், அக்கட்சியின் முக்கியஸ்தர் மணிவண்ணன் ஆகியோரைச் சந்தித்து தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபை கடந்த நான்கு மாதங்களாக இயங்கி வருகின்ற போதும் அதன் செயற்பாடுகள் ஆளுநரின் அதிகாரங்களால் முன்னோக்கிச் செல்ல முடியாதவாறு முடக்கப்பட்டு வருகின்றது. இம்மாகாண சபையால் தனித்து நின்று ஒரு முடிவை எடுக்க முடியாமல் உள்ளது. இன்னமும் வடக்கில் இராணுவ அத்துமீறல் செயற்பாடுகள், கைதுகள், காணாமற்போதல் என்பன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றை மாகாண சபையால் தடுத்து நிறுத்த முடியாதுள்ளது. சபையில் உள்ளவர்களால் மக்களின் பிரச்சினையை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லவே முடிகிறது. ஆனால் அவற்றைத் தடுத்து நிறுத்த அதிகாரமற்ற சபையாகவே உள்ளது.
தமிழர் பிரதேசங்களில் தொடரும் நில ஆக்கிரமிப்புக்களால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் மீள்குடியமர்த்தப்படாமலும் அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பதையும் இக்குழுவினரிடம் சுட்டிக்காட்டினோம்.
அத்துடன் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள், புனர்வாழ்வு முகாம்களில் உள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும் எனவும் புனர்வாழ்வு பெற்று சமூக வாழ்வோடு இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதையும் தவிர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்வரவேண்டும்.
அத்துடன் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சர்வதேச கண்காணிப்பில் இடைக்கால நிர்வாகம் ஒன்றை அமைப்பதற்கு சர்வதேசத்தை கனடா அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என மேலும் தெரிவித்தோம்.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கையில் சர்வதேச விசாரணை, மீள்குடியேற்றம், பொதுமன்னிப்பு, இடைக்கால நிர்வாகம் என்பவற்றை நடைமுறைப்படுத்த சர்வதேசத்திற்கு கனடா வலியுறுத்த வேண்டும் எனவும் இக்குழுவிடம் கோரிக்கையை முன்வைத்தோம் என்றார்.