தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்தார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன்!
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மகஸின் சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இம்மாதம் யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையின் கட்டடத்தில் இடம்பெற்ற சபை அமர்வில், வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்ப வழங்க வேண்டுமென்ற பிரேரணையை கொண்டு வந்திருந்தார்.
அதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய போது காணாமல் போனோர் தொடர்பாகவும் அரசியல் கைதிகளாகவும் உள்ளோரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாக தனது உரையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமக்காக இன்றுவரை குரல் கொடுக்காத சங்கம், பிரதம செயலாளருக்காக மட்டும் அவசரமாகக் குரல் கொடுப்பது ஏன்?
வடமாகாண ஆளுநரினால் பாதிப்புக்குள்ளான இலங்கை நிர்வாக சேவை ஊழியர்கள் முறைப்பாடு செய்தபோது எதுவித நடவடிக்கைகளையும் எடுக்காத இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம், பிரதம செயலாளர் முறைப்பாடு செய்த போது மட்டும் முழுமூச்சாக நடவடிக்கை எடுக்கக் களமிறங்குவது ஏன் என்று வடமாகாண நிர்வாக சேவை ஊழியர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி ரமேஸ் விஜயலட்சுமி, வடக்கு மாகாண சபையினால் தனக்குக் கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும், தமது நிகழ்சி நிரலுக்கு ஏற்ப செயற்பாடுமாறு வற்புறுத்துவதாகவும், அத்துடன் வெளிநாடுகளிலிருந்து குறுந்தகவல்கள் மற்றும் தொலைபேசி அழைப்பினூடாகக் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் தெரிவித்து இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கத்துக்கு முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து உடனடியாக நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம், கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியதுடன் பிரதம செயலாளருக்குக் காட்டப்படும் பாகுபாடு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் வடக்கு ஆளுநர் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது.
இதே சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள், வடக்கு மகாண ஆளுநரினால் கடந்த காலங்களில் முறையற்ற இடமாற்றங்களுக்கு உள்ளாகிய போது சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பல தடவைகள் முறைப்பாடு செய்தும் சங்கம் இதுவரை எதுவித பதிலும் அனுப்பவில்லை என்று பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமக்காக இன்றுவரை ஆளுநரை எதிர்த்துக் குரல் கொடுக்காத சங்கம், பிரதம செயலாளருக்காக மட்டும் அவசர அவசரமாகக் குரல் கொடுப்பது ஏன் என்றும் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
சங்கம் பக்கச் சார்பாகச் செயற்படுவதாகவும், கீழ்நிலை நிர்வாக உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்டால் அதைக் கண்டு கொள்வதில்லை எனவும் அவர்கள் மேலும் குற்றம் சாட்டியுள்ளனர்.
வீடுகள் மீது கற்கள் வீசியதாக படையினருடன் மக்கள் முறுகல்! யாழ். வட்டுக்கோட்டையில் நேற்றிரவு பதற்றம்
வீடுகளின் மீது கல்லெறிந்த படையினருடன் மக்கள் நியாயம் கேட்டுத் தர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் பெரும் களேபரம் மூண்டது. யாழ் வட்டுக்கோட்டை வடக்குப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இதனையடுத்துப் பொலிஸாரின் முன்பாகவே கொலை செய்துவிடுவோம் என்று இராணுவத்தினர் தம்மை மிரட்டினர் என்று மக்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தினால் அந்தப் பகுதியில் பெரும் அச்சநிலை தோன்றியுள்ளதுடன், இரவு முழுவதும் பதற்றமான சூழலே நிலவியது.
குறித்த பகுதியிலுள்ள கேணியடியின் பின்பாக இராணுவ முகாம் அமைந்துள்ளது. குறித்த முகாமைச் சுற்றிலும் பொது மக்களின் வீடுகள் காணப்படுகின்றன. முகாமிலுள்ள இராணுவச் சிப்பாய்கள் அயலிலுள்ள வீடுகளில் பெண்கள் குளிக்கும் பொழுது எட்டிப் பார்ப்பது உள்ளிட்ட சில்மிச இ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கடந்த டிசெம்பர் மாதம் 13 ஆம் திகதி பெண் ஒருவர் குளிப்பதை இராணுவ சிப்பாய் ஒருவர் எட்டிப் பார்த்ததைத் தொடர்ந்து அங்கு திரண்ட மக்கள், சிப்பாயைப் பிடித்து முறையாகக் கவனித்தனர்.
அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கு வந்த இராணுவ முகாம் பொறுப்பதிகாரி, நடந்த சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரியதுடன், குறித்த முகாமிலிருந்து இராணுவச் சிப்பாய்களை உடனடியாக இடமாற்றம் செய்திருந்தார். அத்துடன் குறித்த இராணுவ முகாம் விரைவில் அகற்றப்படும் எனவும் உறுதியளித்திருந்தார்.
இதன் பின்னர் புதிதாக வந்த இராணுவத்தினரும் அங்குள்ள வீடுகளை எட்டிப் பார்ப்பது, முகாமுக்கு முன்பாகப் பெண்கள் தனித்திருக்கும் வீட்டுக்கு இரவில் சென்று ரோச்லைட் அடித்துப் பார்ப்பது என்று தொடர்ச்சியாகத் தங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இவ்வாறானதொரு நிலையில் நேற்று சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் முகாமைச் சுற்றி அமைந்துள்ள இரண்டு வீடுகளுக்கு இராணுவத்தினர் கல்லெறிந்ததாகவும் அதனையடுத்து அந்தப் பகுதியில் மக்கள் குழுமியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் அங்கு வாகனத்தில் ரோந்து சென்ற பொலிஸார் வந்தனர். உங்களைக் கொல்லுவோம் என்று பொலிஸாருக்கு முன்பாகவே படையினர் தம்மை மிரட்டியதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்து அவர்கள் மிரட்டியதாகவும், ஒரு கட்டத்தில் நாங்கள் முகாமை விட்டுவிட்டு வெளியேறுகின்றோம். முகாமுக்கு ஏதாவது நடந்தால் நீங்கள் அனைவரும் தான் பொறுப்பு என்று சொல்லிவிட்டு மோட்டார் சைக்கிளில் இராணுவத்தினர் ஓடித் தப்பியுள்ளனர் என்றும் மக்கள் கூறினர்.
இராணுவத்தினர் வேண்டுமென்றே தமது முகாமைத் தாமே ஏதாவது செய்து விட்டு எங்களை எதுவும் செய்யக் கூடும். எனவே பொலிஸார் பாதுகாப்புக்கு வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதனை உதாசீனம் செய்த பொலிஸார், தாம் தொடர்ச்சியாக ரோந்து வருவோம் என்றும் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்யுமாறும் கூறிவிட்டுச் சென்று விட்டனர்.
இதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு செய்யச் சென்ற போதும், பொலிஸார் முறைப்பாட்டை ஏற்க மறுத்துள்ளனர் எனவும் அத்துடன் முறைப்பாடு பதிவு செய்ய மறுத்தமைக்கு எந்தக் காரணமும் தெரிவிக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் மேலும் கூறினர்.
வெளியேறிச் சென்ற இராணுவத்தினர் இரண்டு மணித்தியாலங்களில் மீளவும் முகாமுக்கு வந்துள்ளனர். அங்கு நின்ற மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவற்றின் இலக்கங்களைப் பதிவு செய்துள்ளனர். அதன் பின்னர் முகாம் வாசலிலேயே அவர்கள் இருந்தனர்.
இராணுவத்தினர் மீளத் திரும்பி வந்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதி மக்கள் கலைந்து சென்றுள்ளனர். இருப்பினும் தமக்கு ஏதாவது நடக்குமா என்ற அச்சத்துடன் இரவுப்பொழுதை கழிக்க வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
மாற்று பொலிஸ் ஒன்றை அமைக்கப் போவதாக சிங்கள ராவய அறிவிப்பு
ஊழல் மோசடிகளுக்கு எதிராக மாற்று பொலிஸ் ஒன்றை அமைக்கப் போவதாக சிங்கள ராவய அமைப்பு அறிவித்துள்ளது.
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சிங்கள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் அக்மீமமன தயாரட்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மக்களுக்காக அரசியல்வாதிகள் குரல் கொடுப்பதில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியலில் களமிறங்கும் திட்டங்கள் எதுவும் கிடையாது.
அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மறைமுகமான வகையில் பணம் சம்பாதிக்கின்றனர்.
ஊழல் மோசடிகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து கொழும்பு வரையில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட உள்ளது.
அரசாங்கத் தரப்பினரால் மேற்கொள்ளப்படும் ஊழல் மோசடிகளுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட உள்ளது.
ஊழல் மோசடிகளுக்கு எதிராக எந்தவொரு தரப்பினரும் குரல் கொடுக்க முன்வரவில்லை. எனவே இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு மக்களுக்காக குரல் கொடுக்கத் தயார்.
அரசியல்வாதிகள் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கு முன்னதாக அவர்களின் சொத்துக்களை மதிப்பீடு செய்ய காத்திரமான பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
மிருகவதை, முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிதல், மதமாற்றம், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அழித்தல் போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கப்படும் என அக்மீமமன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொன்சேகா, ஜேவிபி முன்வந்தால் யானையை கைவிட்டு பொதுச்சின்னம்!- மனோவிடம் ரணில் தெரிவிப்பு!
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கின்ற பிரபல கட்சிகளான சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி, ஜேவிபி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் ஒன்று சேர்ந்து போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக யானை சின்னத்தைக் கைவிட்டு பொது சின்னத்தை ஏற்றுக்கொள்ள நாம் தயார். ஆனால் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி, ஜேவிபி ஆகிய கட்சிகள் இந்த யோசனைக்கு இதுவரையில் உடன்படுவதாகத் தெரியவில்லை. இந்தக் கட்சிகளும் நம்முடன் கூட்டிணைவார்களாயின் நாம் ஒன்று சேர்ந்து இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கலாம். நீங்கள் இந்தக் கட்சிகளுடன் இதுபற்றி உரையாட வேண்டும். இது நடக்குமானால் 2010ம் வருட ஜனாதிபதி தேர்தல் காலத்தையொட்டிய எதிரணி கூட்டணியை ஏற்படுத்தலாம் என ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க மனோகணேசனிடம் தெரிவித்துள்ளார்.
மனோகணேசனும் ரணில் விக்ரமசிங்கவும் நேற்று முற்பகல் சந்தித்து எதிர்வரும் மாகாணசபை தேர்தல் தொடர்பாக கலந்துரையாடினர். கொழும்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பு இரு கட்சித் தலைவர்களுக்கு இடையில் மாத்திரம் இடம்பெற்றது.
இதன்போது தமது கட்சி இத்தேர்தலில் மேல் மாகாணத்தில் தனித்து ஏணி சின்னத்தில் போட்டியிட செய்துள்ள முடிவு தொடர்பாக மனோ கணேசன் ரணில் விக்ரமசிங்கவுக்கு நேரடியாக விளக்கிக் கூறினார். தமது கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் இருக்கின்ற பாரம்பரிய உறவு தொடர்ந்து இருக்கும் என்றும், ஆனால் எதிர்வரும் தேர்தலில் பொது எதிரணி உருவாகாத பட்சத்தில் தனித்து போட்டியிடுவதைத் தவிர தமக்கு வேறு வழியில்லை எனவும் மனோ கணேசன் ரணில் விக்ரமசிங்கவுக்கு எடுத்து கூறினார்.
ஜனநாயக மக்கள் முன்னணியும், ஐக்கிய தேசியக் கட்சியும் தொடர்ந்து இணைந்து செயற்படுவதையே தாம்விரும்புவதாகவும், இந்தத் தேர்தலிலும் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவதை தான் பெரிதும் விரும்புவதாகவும், அதன் மூலமாகவே இந்த அரசாங்கத்தை விரட்ட முடியும் என்றும் ரணில் விக்ரமசிங்க மனோ கணேசனிடம் கூறினார்.
அத்துடன் பொது எதிரணிக்கு தாம் தயார் என்றும், ஜனநாயகக் கட்சி, ஜேவிபி, ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட ஏனைய கட்சிகளுடன் இணைந்து பொதுச்சின்னத்தில் போட்டியிட முடியும் என்றும் அதற்கான அரசியல் சூழல் உருவாக்கப்பட எதிர்வரும் தினங்களில் உழைக்குமாறும் ரணில் மனோகணேசனிடம் கேட்டுக்கொண்டார்.
சர்வதேச விசாரணை கோரி ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது உறுதி!
இம்முறை ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேறும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீவன் ஜே ராப்பின் அறிக்கை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மற்றும் ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு அறிக்கைகள் இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருப்பதை உறுதிப்படுத்துவதாய் அமைந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் ஸ்டீவன் ஜே ராப்பின் இலங்கை விஜயம் தொடர்பாக அமெரிக்க தூதரகத்தின் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள படங்கள் ஆக்கங்கள் குறித்து அமைச்சர் விமல் வீரவன்ச, மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் வெளியிடும் கருத்துகள் அவர்களது வாக்கு வங்கியைக் காப்பாற்றும் நடவடிக்கையாகும்.
சிங்கள பௌத்த இனவாதம் பேசிக் கொண்டு நாட்டின் பாதுகாப்புக்காக எனக்கூறி தமிழ் மக்களை அழிக்க நடவடிக்கைகளையே அவர்கள் முன்னெடுக்கின்றனர். உலக அரங்கில் இவர்களது பேச்சு எடுபடப் போவதில்லை.
ஐநா மனித உரிமைப் பேரவையும், அதன் ஆணையாளர் நாயகமும் இலங்கைக்கு இரணஒ்டு சந்தர்ப்பங்களை வழங்கியிருந்தும் இலங்கை அரசு அதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டிற்கு விஜயம் செய்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை இலங்கை அமுல்படுத்தா விட்டால் சர்வதேச விசாரணையை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என எச்சரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
ஸ்டீவன் ஜே ராப்பின் இலங்கை விஜயம் அவரது நடவடிக்கைகள் குறித்து அரசும் அரசியல் கட்சிகளும் எவ்வாறான விமர்சனங்களை முன்வைத்த போதும் அமெரிக்கா அவரது அறிக்கையை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளும்.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைக்கப் போகும் பிரேரணையில் ஸ்டீவன் ஜே ராப்பின் அறிக்கையிலுள்ள விடயங்களும் உள்ளடக்கப்படுவதால் இலங்கை அரசும் ஆளும் தரப்பிலுள்ள கட்சிகளும் அவரைப் பலவாறாக விமர்சித்து வருகின்றன. இந்த விமர்சனங்கள் சர்வதேச ரீதியில் எடுபடப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேல்மாகாணசபை இன்றும் தென்மாகாணசபை நாளையும் கலைக்கப்படும்?
இலங்கையின் மேல்மாகாண சபை இன்று நள்ளிரவு கலைக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் தென்மாகாண சபை நாளை கலைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா ஆகியோர் மாகாண சபையைக் கலைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எழுத்து மூலமாக ஆளுனர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தென் மாகாண ஆளுனர் குமாரி பாலசூரிய மற்றும் மேல் மாகாண ஆளுனர் அலவி மெளலான ஆகியோர் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதன் அடிப்படையிலே மாகாண சபைகள் கலைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெற்றிக் களிப்பில் பாற்சோறு உண்டவர்களிடம் மன்னிப்பா? உண்மையை கண்டறியும் குழுவில் நம்பிக்கை இல்லை: ஐதேக
இலங்கையில் உண்மையை கண்டறியும் குழுவை அமைப்பதில் நம்பிக்கை இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்காக உண்மையை கண்டறியும் குழுவை அமைக்கவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் கடுமையான பரிந்துரைகளையே அரசாங்கம் நடைமுறைப்படுத்தாத நிலையில், உண்மையைக் கண்டறியும் குழுவை அமைப்பதில் பயன் இல்லை என்று கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவே உண்மையை கண்டறியும் குழு அமைக்கப்படுவதாக கூறப்படுவதை நிராகரித்த அவர், உலகில் எங்கேனும் ஒரு குழுவின் பரிந்துரையை அமுல்செய்ய இன்னும் ஒரு குழு அமைக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்னாபிரிக்கா நாட்டில் நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்கள் மன்னிக்கும் குணத்தை வெளிக்காட்டியமையால் உண்மையை கண்டறியும் குழு வெற்றியளித்தது.
எனினும் இலங்கையின் அரசாங்க தரப்பினர் அவ்வாறு செய்வார்களா? போரில் சொந்த நாட்டில் உள்ளவர்களை வெற்றிக்கொண்டு விட்டதாககூறி பாற்சோறு உண்டு மகிழ்ந்தவர்கள் எவ்வாறு இவ்வாறு மன்னிக்கும் குணத்தை வெளிக்காட்டுவார்கள் என்று கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.
அரசாங்கம், உடனடியாக 2009 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும்.
13ம் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதுடன், சர்வதேசத்துக்கு கொடுத்த உறுதிமொழிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று கிரியெல்ல குறிப்பிட்டார் .
இதேவேளை தமக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று உள்நாட்டு விசாரணைகள் என்பதை விட சர்வதேச விசாரணைகளேயே தாம் நம்பியுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஐ.தே.க
ஜெனீவாவில் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியும் செயற்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஒன்று அல்லது இரண்டு பிரதிநிதிகளை அனுப்பி வைப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமர்வுகளில் பிரதிநிதிகளை பங்கேற்கச் செய்யுமாறு அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சியிடம் கடந்த டிசம்பர் மாதம் கோரியிருந்தது.
இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி சாதகமாக பதிலளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.