சிறிலங்கா அதிபரை சந்தித்தார் முதல்வர் விக்னேஸ்வரன் – நிர்வாக முட்டுக்கட்டைகள் குறித்து முறைப்பாடு
02 Jan,2014

சிறிலங்கா அதிபரை சந்தித்தார் முதல்வர் விக்னேஸ்வரன் – நிர்வாக முட்டுக்கட்டைகள் குறித்து முறைப்பாடு
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில், இன்று அலரி மாளிகையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, இருவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதாக, சிறிலங்கா அதிபர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன்போது, வடக்கு மாகாணசபை எதிர்கொள்ளும் நிர்வாக பிரச்சினைகள் குறித்து முதல்வர் விக்னேஸ்வரன், சிறிலங்கா அதிபரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
அத்துடன் வடக்கு மாகாணசபையின் எதிர்கால நிர்வாக செயற்பாடுகள் குறித்தும் அவர் சிறிலங்கா அதிபருடன் கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, அமைச்சரவை செயலாளர் சுமித் அபேசிங்க, நிதியமைச்சின் செயலர் கலாநிதி பி.பீ.ஜெயசுந்தர ஆகியோரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வடக்கு மாகாணசபைக்கு சிவில் ஆளுனர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று மாகாணசபை கோரி வருகிறது.
அதேவேளை, மாகாண நிர்வாகத்தைக் குழப்பும் வகையில், ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி செலுத்தி வரும் ஆதிக்கம் குறித்து முதல்வர் விக்னேஸ்வரன் கடும் அதிருப்தி அடைந்திருந்தார்.
இந்தநிலையிலேயே சிறிலங்கா அதிபருடனான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த ஒக்ரோபர் மாதம், சிறிலங்கா அதிபர் முன்னிலையில், வடக்கு மாகாண முதல்வராக சி.வி. விக்னேஸ்வரன் பதவியேற்ற பின்னர் சிறிலங்கா அதிபருடனான முதலாவது சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.