வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட - கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை சுமார் 90,000
22 Nov,2013

வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட - கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை சுமார் 90,000
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் கணவனை இழந்த பெண்கள் சுமார் 90,000 பேர் உள்ளனர் என விழுது ஆற்றல் பேரவை மையத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் சாந்தி சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், புத்தளம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு தலைமைதாங்கும் பெண்களின் மாநாடு 2013 மட்டக்களப்பு கிறீன் கார்டன் ஹோட்டலில் இன்று (22.11.13) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த 4 மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட எண்பது பெண்கள் செயலணியின் தலைவிகள் பங்குகொண்ட மாநாட்டில் கலந்து கொண்டு மேலும் கூறுகையில்,
கணவனை இழந்த வெளிநாட்டு பெண்கள் அமைப்புடன் விழுது அமைப்பு தொடர்பு வைத்துள்ளதினால் கணவனை இழந்த பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், இலவச சட்ட உதவி, வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட பலவேறு பிரச்சினைகளுக்கு உதவுவதாகத் தெரிவித்தார்.
சர்வதேச விதவைகள் தினம் ஜூன் 23ம் திகதி என பிரகடனப்படுத்திய நிலையில் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் அரச புள்ளி விபரம் இதுவரையில் சரியாகத் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறினார்.
கணவனை இழந்த பெண்களின் செயலணிகள் பற்றிய விழுதின் செயல்திட்ட அறிக்கை, மாவட்ட தலைவியர்களின் அனுபவப் பகிர்வுகள், 'அமரா' குடும்பத் தலைமைப் பெண்களின் ஒன்றியம் என்பன அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன.
மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்சளியன், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ. அருள்மொழி, விழுதுகள் அமைப்பின் ஆலோசகர் காசுபதி நடராசா, திட்டமிடல் உத்தியோகத்தர் ஹரி இந்துமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.