மண்சரிவு அபாயத்தால் கண்டி மகாமாய பெண்கள் கல்லூரி காலவரையின்றி மூடல்
19 Dec,2025
மண்சரிவு அபாயம் காரணமாக கண்டி மகாமாய பெண்கள் கல்லூரி தொடர்ந்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) குழுவினர் ரஜ பிஹில்லா மாவத்தையை ஆய்வு செய்த நிலையில், பாடசாலைக்கு மேலே அமைந்துள்ள மலைப்பகுதியில் மேலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாடசாலை மூடுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு மேலே உள்ள பகுதியில் பல வீடுகள் மற்றும் விருந்தகங்களும் அமைந்துள்ளன. அப்பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டால், பாடசாலை கட்டிடங்களுக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை தொடர்வதால் அருகிலுள்ள குடியிருப்பாளர்கள், பாடசாலை சுற்றுவட்டார மக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அதிக விழிப்புடன் செயற்படுமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவிகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அடுத்த கட்ட தீர்மானங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.