தித்வா சூறாவளி ஏற்படுத்திய பேரனர்த்த பாதிப்புகளிலிருந்து மக்கள் இன்னமும் மீளாத நிலையில் அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் தொடர்பிலும் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது. இந்தப் பேரனர்த்தத்தில் மலையகப் பகுதி பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
இப்பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தங்களினால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீளவும் பாதுகாப்பான இடங்களில் குடியேற்றுவது எவ்வாறு என்பது தொடர்பில் தற்போது ஆராய வேண்டிய தேவை எழுந்திருக்கின்றது.
மலையகத்தை பொறுத்தவரையில் மண்சரிவு அனர்த்தங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன. தித்வா புயலின் தாக்கத்தினால் மலையகப் பகுதிகளில் பல இடங்களில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தங்கள் அந்த மக்களின் அவலநிலையை பறைசாற்றுவதாகவே அமைந்திருக்கின்றது.
இத்தகைய ஆபத்துகளை எதிர்நோக்கிய வண்ணம் அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பற்ற வகையில் தொடர்ந்தும் வாழ முடியாது என்ற எண்ணப்பாடு தற்போது உருவாகியிருக்கின்றது. இதனால் இந்தப் பகுதியில் அபாய எச்சரிக்கை பிரதேசங்களுக்குள் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த வேண்டியது அவசியம் என்று தற்போது வலியுறுத்தப்படுகிறது.
அனர்த்தத்தை அடுத்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கையானது, மலையகப் பகுதிகளில் மக்கள் எதிர்நோக்கும் மண்சரிவு அச்சுறுத்தலை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.
நாடளாவிய ரீதியில் சுமார் 15 ஆயிரம் மண்சரிவு அபாயம் உள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதிகளில் வசிக்கும் சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் ஏற்கெனவே வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு அபாயம் காணப்படும் பெரும்பாலான பிரதேசங்களில் மக்கள் தொடர்ந்தும் வசித்து வருகின்றனர். அவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியது அவசியம் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
மலையகத்தில் நான்கு மாவட்டங்களில் அபாய பகுதிகளில் வசிப்போரை வெளியேற்ற அனர்த்த முகாமைத்துவ நிலையம் பணிப்புரை விடுத்துள்ளது. அதற்கமைய கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களிலுள்ள பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
கண்டி, கேகாலை, மாவட்டங்களிலும் மண்சரிவு அச்சுறுத்தல் நிலவும் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு மலையகப் பகுதிகளைப் பொறுத்தவரையில் பெரும்பாலான இடங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுகின்றது. இந்தப் பகுதிகளில் மக்களை மீளவும் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பது என்பது அவர்களை தெரிந்தும் ஆபத்துக்குள் தள்ளும் விடயமாகவே அமைந்துள்ளது.
தற்போது பேரனர்த்தத்தினால் மலையகப் பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் விடயத்தில் அரசாங்கம் அக்கறை காண்பித்து வருகின்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பாதிப்புக்குள்ளான கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு சென்று ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களையும் நடாத்தி நிவாரணங்களை துரிதப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்திருந்தார்.
இந்தக் கூட்டங்களின் போது மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் மக்களை எவ்வாறு மீள குடியமர்த்துவது என்ற விடயம் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் ஜனாதிபதியிடம் சில ஆலோசனைகளை முன்வைத்திருக்கின்றார்.
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக் கொடுத்தால் வீட்டுப் பிரச்சினையை தீர்க்க முடியும். மக்களுக்கு வழங்குவதற்குரிய காணி வளம் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ளது. மக்கள் தற்போது வாழும் லயன் அறைகளில் சூழவுள்ள பகுதிகளை வழங்கினாலே அவர்களது வீடுகளை அமைத்துக் கொள்ள முடியும். இது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் ஒன்று 2024ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. எனவே, அதனை அரசாங்கம் அமுல்படுத்தலாம் என்றும் ஜீவன் தொண்டமான் இதன்போது யோசனை முன்வைத்திருக்கின்றார்.
ஜீவனின் இந்தக் கருத்துக்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, “மலையகத்தில் ஒரு குடும்பத்துக்கு ஆறு பேர்ச் காணி வழங்குவதாக வைத்துக் கொண்டால் 9 இலட்சம் பேர்ச் காணி தேவைப்படுகின்றது. இதனை எவ்வாறு பெற்றுக் கொள்வது? தொழில்நுட்பக் காரணி, பாதுகாப்பான இடம் என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் மலையகப் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளேன். இந்த விடயம் தொடர்பில் தேசிய வேலைத் திட்டம் ஒன்றை உருவாக்கி இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிப்போம்” என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
மலையக மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைப்பது தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கலந்துரையாடியிருந்தார்.
அவரும் பெருந்தோட்ட மக்களுக்கு அரசாங்கம் காணிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியிருந்தார். இதன்போதும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானங்களை எடுப்போம் என்று ஜனாதிபதி உறுதியும் வழங்கியிருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி பகுதிக்கு சென்றிருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். இதன்போது மண்சரிவு அபாயத்தில் சிக்கி தாம் வாழ்ந்து வரும் அவல நிலை குறித்து மக்கள் அவரிடம் எடுத்துக் கூறியிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த மனோ கணேசன், பெருந்தோட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் அரசாங்கம் காணிகளை வழங்க வேண்டும். பாதையோர பாதுகாப்பான பகுதிகளில் அவர்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை அரசாங்கத்திடம் நாம் முன்வைப்போம். ஆனால், பாதுகாப்பான காணி தரப்படாவிட்டால் வடக்கு, கிழக்கு பகுதிகளில் குடியேறுவது குறித்து நாம் சிந்திக்க வேண்டி வரும் என்று சுட்டிக்காட்டியிருந்தார். “மலையக தமிழர் மலையக மண்ணில்தான் வாழ வேண்டும் என்று நானும் விரும்புகிறேன். ஆனால், பாதுகாப்பான காணி உரிமையை வழங்குவதற்கு மறுத்தால் எமது மக்கள் மலை மண் சரிவில் சிக்குண்டு தொடர்ச்சியாக பலியாகுவதா? இதற்கு அனுமதிக்க முடியாது” என்றும் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோரது கருத்துக்கள் பெருந்தோட்ட மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் அவர்களுக்கு வீடுகள் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவே அமைந்திருக்கின்றது.
உண்மையிலேயே மலையகத்தில் பெருந்தோட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் பாதுகாப்பான முறையில் வீடுகள் அமைக்கப்பட்டு குடியேற்றப்பட வேண்டியது அவசியமாகவுள்ளது. ஏனெனில், அங்கு ஏற்படுகின்ற அனர்த்தங்களின் போது அந்த மக்கள் வீணாக உயிரிழக்க வேண்டிய நிலைமை நீடித்து வருகின்றது.
தற்போதைய இயற்கை பேரனர்த்தத்தின் போது மலையகத்திலேயே பெரும் இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. பாதுகாப்பற்ற முறையிலும் பாதுகாப்பற்ற இடங்களிலும் அமைக்கப்பட்ட வீடுகளில் தங்கியிருந்தமையினாலேயே இத்தகைய உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன.
எனவே, மலையகத்தில் மண்சரிவுகள் ஏற்படக் கூடிய இடங்களில் மக்களை இனியும் வாழ்வதற்கு அனுமதிக்க முடியாது. அவ்வாறு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் காணிகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகவுள்ளது.
அதேபோன்றே தற்போதைய அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பாதுகாப்பான இடங்களில் வீடுகள் அமைக்கப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் தேசிய வேலைத் திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும். அதற்கு மலையக அரசியல்கட்சிகள் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டியது இன்றியமையாதது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.