காணாமல் போயுள்ள 350 பேரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன
தித்வா புயலால் ஏற்பட்ட பாரிய மண்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் 16 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 44 000 வீடுகள் சேதமடைந்துள்ளன.
புதன்கிழமை (03) இரவு வரையான நிலைவரத்தின் அடிப்படையில் 479 பேர் உயிரிழந்துள்ளதோடு, 350 பேர் காணாமல் போயுள்ளனர்.
மொத்த உயிரிழப்புக்களில் 118 உயிரிழப்புக்கள் கண்டி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளன. இம்மாவட்டத்தில் மேலும் 171 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்திலேயே இரண்டாவதாக அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இம்மாவட்டத்தில் 89 பேர் உயிரிழந்துள்ளதோடு, 73 பேர் காணாமல் போயுள்ளனர். இதேவேளை பதுளையில் 83 பேர் உயிரிழந்துள்ளதோடு, 28 பேர் காணாமல் போயுள்ளனர். குருணாகல் மாவட்டத்தில் 56 பேர் உயிரிழந்துள்ளதோடு, 23 பேர் காணாமல் போயுள்ளனர். மாத்தளை மாவட்டத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர். கேகாலையில் 30 பேர் உயிரிழந்துள்ளதோடு, 41 பேர் காணாமல் போயுள்ளனர்.
அந்த வகையில் நாடளாவிய ரீதியில் 4,55, 405 குடும்பங்களைச் சேர்ந்த 16,14 790 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 1,88, 974 பேர் 1,347 தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. அத்தோடு நாடளாவிய ரீதியில் 1,289 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 44,556 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நுவரெலியா மாவட்டத்தில் உலங்கு வானூர்திகள் மூலம் சென்ற படையினரால் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய கொத்மலை, நுவரெலியா, இறம்பொடை, மீமுர, கம்பளை, நாவலப்பிட்டி, பன்னில, பாலுவத்த மற்றும் மந்தானம்நுவர உள்ளிட்ட பிரதேசங்களில் சிக்கியிருந்த 288 பேர் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்தார்.
நுவரெலியா - கொத்மலை, மாவத்துர மற்றும் கொஸ்வத்த பிரதேசங்களில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி காணாமல் போன சுமார் 50 பேரில் 9 பேரது சடலங்கள் மாத்திரமே இதுவரையில் மீட்க்கப்பட்டுள்ளன. நாவலப்பிட்டி - தொலஸ்பாகே , பாரகல பிரதேசத்தில் மண்சரிவில் சிக்கி உயிரிந்த மேலும் 8 பேரது சடலங்கள் நேற்றைய தினம் மீட்க்கப்பட்டுள்ளன. காணாமல் போயுள்ள மேலும் ஐவரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை, பொலன்னறுவை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சகல பிரதான வீதிகளும் திறக்கப்பட்டுள்ளன. பேராதனை, பதுளை, செங்கலடி, பண்டாரவளை, எட்டம்பிட்டி, நுவரெலியா - புஸல்லாவை, நுவரெலியா - உடபுஸலாவை, பசறை - மடுல்சீமை, எல்ல - பசறை வீதி, பெரகல - ஹாலிஎல வீதி, வெலிமட - கேலீஸ் வீதி என்பன மண்சரிவினால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன.
கண்டியிலிருந்து ஆரம்பிக்கும் பிரதான வீதிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. புத்தளம் - குருணாகல் வீதி, கல்கமுவ - நிக்கவௌ வீதி, மல்லவபிட்டி - கெப்படிபொல வீதி, நயினைமடு - இரணவில வீதி, கோப்புவ - மாதம்பே வீதி, புத்தளம் - நாத்தாண்டியா வீதி என்பவையும் இன்னும் மீளத் திறக்கப்படவில்லை. அநுராதபுரம் - புத்தளம் வீதி கலாஓயா பாலத்துக்கருகில் சேதமடைந்துள்ளது. அதன் மீள் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கம்பஹாவில் பண்டாரவத்தை, களனி, மாவில, மல்வான, கெரவலப்பிட்டி உள்ளிட்ட தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் மட்டம் தொடர்ந்தும் காணப்படுகிறது. கொழும்பில் சேதவத்தை, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, களுபாலம், கொழும்பு தேசிய மனநல வைத்தியசாலை மற்றும் கொட்டிகாவத்தை உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ள நீர் தொடர்ந்தும் காணப்படுகிறது. இந்த பிரதேசங்களில் வாழ்ந்து வந்த 20 203 மக்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவுக்கு செல்வதற்கான பிரதான வீதிகள் திறக்கப்பட்டுள்ள போதிலும், மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள சில பிரதேசங்களை இன்னும் அண்மிக்க முடியாத நிலைமையே காணப்படுகிறது. அவ்வாறான பிரதேசங்களுக்கு இலங்கை விமானப்படையின் ஊடாக நிவாரண உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.
கொத்மலை கிழக்கு, வலப்பனை, நில்தன்டாஹின்ன மற்றும் மத்துரட பிரதேச செயலகப்பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களுக்கு இவ்வாறு செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது. இந்த பிரதேசங்களுக்கு விமானப்படையினரால் உலங்கு வானூர்தி மூலம் நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன.
உணவுகள் மாத்திரமின்றி, தேவையான மருந்துகளும் வழங்கப்படுகின்றன. எவ்வாறிருப்பினும் குறித்த பகுதிகளில் இனங்காண முடியாத பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. அவ்வாறானவர்களை இனங்காண்பதற்கான அதிகபட்ச முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாகவும் துஷாரி தென்னகோன் மேலும் தெரிவித்தார்.