அனர்த்த நிவாரணம்: தற்காலிக முகாம்களுக்கு வராத பாதிக்கப்பட்டவர்களுக்கும் உலர் உணவு வழங்க உத்தரவு
30 Nov,2025
தற்காலிக பாதுகாப்பு முகாம்களுக்கு செல்வர்களுக்கு மாத்திரம் உலர் உணவுகளை வழங்க வேண்டும் என அனர்த்த நிவாரண சேவை சுற்றறிக்கை மற்றும் வழிகாட்டல்களில் குறிப்பிடப்படவில்லை.தற்காலிக முகாம்களுக்கு வருகைத் தராத நிலையில், பாதிக்கப்பட்டுள்ள சகல தரப்பினருக்கும் உலர் உணவுகளை வழங்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
மாவட்ட செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்களுக்கு விசேட அறிவுறுத்தலை விடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுநிலை) சம்பத் துய்யகொந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அனர்த்த நிவாரண சேவை சுற்றறிக்கை மற்றும் வழிகாட்டல்கள் 01/2025 ஊடாக விரைவாக நிவாரணமளிப்பதற்கு உரிய அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சின் செயலாளரினால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட சகல பிரதேச சபை செயலாளர்கள் மற்றும் பிரதேச சபை உதவி செயலாளர்கள் சங்கத்தினரால் 2025.11.29 ஆம் திகதியன்று அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஊடாக பரிந்துரைகள் வருமாறு,
தற்காலிக பாதுகாப்பு முகாம்களுக்கு செல்வர்களுக்கு மாத்திரம் உலர் உணவுகளை வழங்க வேண்டும் என அனர்த்த நிவாரண சேவை சுற்றறிக்கை மற்றும் வழிகாட்டல்கள் 01/2025யில் குறிப்பிடப்படவில்லை.அந்த சுற்றறிக்கை இல 5.1.5.1.2.1 ஊடாக சகல தரப்பினருக்கும் உலர் உணவு வழங்குவதற்குரிய மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆகவே தற்காலிக முகாம்களுக்கு வருகைத் தராத நிலையில், பாதிக்கப்பட்டுள்ள சகல தரப்பினருக்கும் உலர் உணவுகளை வழங்க வேண்டும்.
அனர்த்த நிலைமையின் போது மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரண சேவை குழு அல்லது பிரதேச அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரண சேவை குழுவின் அனுமதியுடன் உரிய தீர்மானங்களை எடுக்குமாறு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளரால் 2025.11.28 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட செலவு சுற்றறிக்கையில் நிவாரமணிப்பதற்கு 50 மில்லியன் ரூபாவை செலவழிப்பதற்கு பிரதேச செயலாளருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் ஒருவருக்கு உலர் உணவுக்காக 2100 ரூபா, இரண்டு அங்கத்தவர்களை கொண்ட ஒரு குடும்பத்துக்கு 4200 ரூபா, மூன்று அங்கத்தவர்களை கொண்ட ஒரு குடும்பத்துக்கு 6300 ரூபா, நான்கு அங்கத்தவர்களை கொண்ட ஒரு குடும்பத்துக்கு 8400 ரூபா,ஐந்து அங்கத்தவர்களையோ அல்லது அதற்கு மேலதிகமாக அங்கத்தவர்களை கொண்ட ஒரு குடும்பத்துக்கு 10500 ரூபா செலுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.