இலங்கையின் தென் கிழக்கில் உருவாகி வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக, இலங்கையும் அதனைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கும் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தென்கிழக்கு கடற்பகுதியில் நிலவும் தாழமுக்கம், வலுப்பெற்று, மட்டக்களப்புக்கு தென்கிழக்கில் சுமார் 120 கிலோற்றர் தூரத்தில் மையங்கொண்டுள்ளது.
இது அடுத்த 12 மணிநேரங்களுக்குள் சூறாவளியாக (Cyclonic Storm) உருவெடுத்து, வட- வடமேற்கு திசையில் நகர அதிக வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வானிலை அமைப்பின் தாக்கத்தினால், நாடெங்கும் நிலவும் கனமழை மற்றும் பலத்த காற்று அடுத்த சில நாட்களும் நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் 200 மில்லிமீற்றருகு்கு மேற்பட்ட மிக கனமழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேற்கு மாகாணங்கள் மற்றும் மட்டக்களப்பு, பதுளை மாவட்டங்களில் 150 மில்லிமீற்றருக்கும் மேல் மழை எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின், ஏனைய பகுதிகளிலும் 100 மில்லிமீற்றருக்கும் மேல் மழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
அதேவேளை, நாடளாவிய ரீதியில் 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்திலும், சில பகுதிகளில் 80 கிலோமீற்றர் வரை காற்றடிக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில், பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் 60–70 கிலோமீற்றர் மற்றும் இடையிடையே 80 கிலோமீற்றர் வரை காற்றடிக்கும். கடற்பரப்பில் 3.0 – 4.0 மீற்றர் உயரமுள்ள பெரும் அலைகள் எழும்பக்கூடும். புத்தளம் முதல் காங்கேசன்துறை வரை — கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை வழியாக காற்று அதிகரிக்கக்கூடும்.
இதனால், கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கடற்படை மற்றும் மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விழிப்புடன் இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் கடுமையான வானிலை குறித்து நவம்பர் 30, 2025 வரை பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
அவசரநிலைகளில் அருகிலுள்ள பாதுகாப்பு நிலையங்களை தொடர்புகொண்டு உதவி பெறுமாரும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.