தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் மேதகு வேலுப் பிள்ளை பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாள் தாயகத்திலும் புலத்திலும் இன்று கொண்டாடப்படவுள்ளது.
தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை ஆலடி வீதியில் அவரது இல்லம் அமைந்துள்ள வளாகம் அந்தப் பகுதி இளைஞர்களால் துப்புரவு செய்யப்பட்டு சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு, இன்று காலை கேக் வெட்டிக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன.
தமிழர்தாயகத்தின் இதர பகுதிகளிலும், புலம்பெயர்நாடுகளிலும்கூடதலைவர் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கடந்த பல வருடங்களாக இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்களது இறுக்கமான கண்காணிப்புக்குள்ளும், கெடுபிடிக்குள்ளும் கொண்டாடப்பட்ட நிலையில், இம்முறை அச்சமின்றி மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடத் தயாராகின்றமையை அவதானிக்க முடிகிறது.
இலங்கை தீவில் இழந்துவிட்ட தம் இறைமையை மீட்கவே முடியாது என்ற பெருங்கவலையோடு ஈழத்தமிழர்கள் பல சந்ததிகளைக் கடந்தனர். இடையிடையே எல்லாளன், சேனன், குத்திகன், பண்டாரவன்னியன், கயிலைவன்னியன், செகராசசேகரன், பரராசசேகரன், சங்கிலியன் எனப் பலர் அந்தக் கனவை ஏந்தி வரலாற்றில் வந்துபோயினர். ஆனால் எவராலும், விஜயனிடம் இழந்த ஈழத்தமிழர் இறைமையை முழுமையாக அடைய முடியவில்லை. ஒரே ஒருவரால் அது முடிந்தது. வெறுங்கனவாக மாத்திரமிருந்த ஈழத்தமிழர் இறைமையை ஆட்சி சிம்மாசனத்தில் ஏற்றி 30 வருடங்களாக அழகுபார்க்க முடிந்தது. அவரே நம் தலைவர். அவரே இன்றைய நாளுக்குரியவர்.
அதுவரைக்குமான உலகில் கண்டுபிடிக்கப்படாதிருந்த அனைத்துவித அறவழிப்போராட்டங்களிலும் ஈடுபட்டு, தோற்றுப்போயிருந்த தருணத்தில்தான் தலைவர் வந்தார். பெற்றோரின், ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்றி முடிவெடுக்க முடியாத வயதில், இனத்தையே வழிநடத்தத் துணிந்தார். தம்மிடமிருக்கும் ஆயுதங்களை வைத்து ”எவ்விதமான” காரியங்களையும் செய்யத்துணியும் வயதில், அனைத்துவித பாசங்கள் மீதான பற்றுக்களையும் அறுத்தெரிந்தார். இனவிடுதலை ஒன்றே தாம் ஏந்தியிருக்கும் ஆயுதத்தின் ஒரே இலக்கு என்பதைத் தன்னைச் சூழ்ந்திருந்த இளையோருக்குப் போதித்தார்.
இன்றைய உலக அனுபவங்களை வைத்துக் கற்பனை செய்துபாருங்கள், ஆயிரக்கணக்கான இளைஞர்களிடம் கனரக ஆயுதங்களும், வெளியுலகத் தொடர்புகளற்ற ஒரு பிராந்தியத்தை நிர்வகிக்கவல்ல அதிகாரமும் கிடைத்தால் என்ன செய்திருப்பர். உலக அனுபவங்களைப்போன்று எதுவும் நடக்கவில்லை. இனவிடுதலை என்கிற இலக்கு ஒன்றிற்காக ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்கள் அவர் தலைமையில் விதையாகி வீழ்ந்தபோதிலும் யாரை நோக்கியும் ஒரு தீயசொல் பாயவில்லை. ”அவரின் எத்தனையோ படங்களை மீட்டோம். ஒரு படத்தில்கூட மது போத்தல்களைக் காணவில்லை” என எதிரிகளே புகழுமளவிற்கு உலகின் மிகஉன்னதமான சுய ஒழுக்கமிக்க இயக்கமொன்றைக் கட்டமைத்தார் அவர். அதனை இம்மியளவும் வழிபிசகாமல் இறுதிவரையில் வழிநடத்தினார். அதனால்தால் அவர் தலைவர்.
விடுதலை கோரி போராடத்தை ஆரம்பிக்கும் ஆயுத இயக்கங்கள், வெகுவிரைவிலேயே திசைமாறிப் போவது உலக வழக்கம். உலகநாடுகளின் சதிகளில் சிக்கி தான் வந்த வழியையே மறந்து, விடுதலை இயக்கங்களின் மறைந்துபோவதும் பொதுப்போக்கு. தலைவரை நோக்கியும் உலக வல்லரசு நாடுகள் அந்த வலையை தொடர்ச்சியாக முப்பதாண்டுகள் வீசிவந்தன. ”நான் இனவிடுதலை என்கிற இலட்சியத்திலிருந்து விலகினால் என் மெய்பாதுகாவலரே என்னை எவ்வேளையிலும் சுட்டுக்கொல்லலாம்” என்கிற கொள்கையில் தலைவர் துளியளவும் விடாப்பிடியாக இருந்தார்.
அவருக்கென்று தனிப்பட்ட வாழ்வொன்றிருந்தது. ஒரே மகள், இரண்டு ஆண் மகன்கள் என்கிற அரியதொரு குடும்பமிருந்தது. அன்பிற்கே அடையாளமான தாய், தந்தையர் இருந்தனர். ஒரு மனிதனின் வாழ்க்கை வரம்பின் உச்சமெதுவெனில் இப்படியொரு அன்பான குடும்பம்தானே. ஆனால் இந்த இனவிடுதலைக்காக தன் மொத்தக் குடும்பத்தையும் தியாகித்தார் தலைவர். தானும் தன் பிள்ளைகளும், தன் உறவினர்களும் ஏழேழு தலைமுறையாக செழித்து வாழவேண்டியளவுக்கு நாட்டைச் சூறையாடி சொத்துச் சேர்க்கும் தலைவர்கள் மத்தியில், ஒரு ரூபாயைக்கூடத் தனக்காகவோ, தன் குடும்பத்திற்காகவோ எடுத்துச்செல்லாத – தன் மொத்தக்குடும்பத்தையும் இனத்திற்காக வித்தாக்கிய ஒப்பற்ற தலைவர் உலகில், இந்தப் பூகோள வரலாற்றில் வேறெந்த இனத்திற்கு வாய்த்திருக்கும்.
சதாகாலமும் போர் நடத்திக்கொண்டு, கடல், தரை, வான் என எல்லைகளைக் காத்துக்கொண்டு, புவிசார் அரசியல் அழுத்தங்களுக்கு எதிராகப் போராடிக்கொண்டு ஒரு நிழல் அரசைக் கட்டமைப்பதும், அதனை நேர்த்தியாக வழிநடத்துவதும் கற்பனைகூட செய்துபார்க்கமுடியாத ஒன்று. உலகம் பாதுகாப்புசார் துறைகளில் இவ்வளவு தூரம் வளர்ந்துவிட்ட பிறகும்கூட நவீன அரசுகள் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்ற பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் குற்றங்கள், திட்டமிட்டக் குற்றச்செயல்களுக்காக உருவாகும் குழுக்கள் என எல்லாவற்றையும் 30 ஆண்டுகளாக ஒருவர் கட்டுப்படுத்தினார் எனில் அது தலைவரைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்..!
எல்லாவற்றுக்கும் மேலாக, படையக் கட்டுமானம்..! சோழர்களுக்குப் பிறகு 30 ஆண்டுகள் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய ஒரே படையக் கட்டமைப்பைத் தலைவர் உருவாக்கினார். அவரின் காலத்தில் இலங்கைத் தீவின் மீதான புவிசார் அரசியல் இன்றிருக்கிற அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இந்தியா, சீனா என எந்நாட்டுக்கும் ஒரு துண்டு நிலம்கூட இத்தீவிலிருந்து விற்கப்படவில்லை. இன்று இந்நாட்டின் தலைநகரில் பெரும்பகுதியைப் பிடித்து சீனா தனக்கான தனிநாடொன்றை உருவாக்கிக்கொள்ளுமளவிற்கு இந்நாடு புவிசார் அரசியல்விடயத்தில் தோல்வியடைந்திருக்கின்றது. இந்தியாவின் தலையீடுகள் சொல்லத்தேவையில்லை. அவர் உருவாக்கிய வலிதான – ஓர்மம் மிக்க படையக் கட்டமைப்புக்களின் வழியே தமிழர்களின் கடல் மற்றும் நிலம் சார் இறைமை மாத்திரமின்றி, முழு இலங்கைத்தீவின் இறைமையும் காப்பாற்றப்பட்டது. ஆனால் அவரற்ற பதினாறு வருடங்கள் கடந்துள்ள இன்றைய நிலைஸ!
இப்படி தன்னினத்திற்கு மாத்திரமல்லாது, இத்தீவில் வாழுகிற எதிர் இனத்திற்குமாகப் போராடியவர் எம் தலைவர். அதனால்தான் குற்றவுணர்வால் உந்தப்படும் எதிரிகள்கூட அவ்வப்போது தலைவர் பற்றிய உண்மையைச் சொல்லிவிடுகின்றனர். உலகில் தோன்றிய ஆச்சரியமிகு – மேன்மைமிகு தலைவர்களின் வரிசையில் நின்றுநிலைத்துவிட்ட தலைவருக்கு இன்று அகவைத் திருநாள். வானும் தன் ஆசி வழங்கி, வாழ்த்தி நிற்கும் இன்நன்நாள் குறித்து நம் தலைமுறைக்கு ஒரு பெருமிதம் உண்டு.
அது எதுவெனில், தலைவஸநாம் நின் காலத்தில் வாழ்ந்தோம்..!
மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்தில்,
மங்களம் தங்கிடும் நேரத்தில்,
பிறந்த எங்கள் ஒரே தலைவனுக்கு
பிறந்த நாள் வாழ்த்துகள்!
நீங்கள் விட்ட சுவாசம் கலந்த காற்றை நான் சுவாசித்ததும்,
உங்கள் காலடித் தடம் பதித்த கோண்டாவில் முகாமில் சுவடுகள் காயும் முன் நானும் நடந்ததும்,
உங்களின் குரலை கேட்டதும் என் வாழ்வில் கிடைத்த மிகச் சிறந்த அனுபவங்கள்.
நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே ஒரு பெரும் பாக்கியம்
ஆயிரம் விமர்சனங்கள் உங்கள் மீது எனக்கும் இருக்கலாம்.
ஆயினும் நீங்கள் ஒருவரே என் தலைவன்.
என்னைப் போன்றோரிற்கான ஒப்பற்ற ஏக தலைவன்.
இறந்தும் இறவாமல் நீக்கமற நிறைந்து இருக்கும் தலைவன்!