குரங்குகளிடம் இருந்து மக்களையும், கிராமங்களையும் பாதுகாப்பதற்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு காற்றழுத்த துப்பாக்கி (Air Gun) வழங்குமாறு செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை (20) நடைபெற்ற ஏறாவூர் பற்று பிரதேச சபையின் ஆறாவது அமர்வில் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தனால் குரங்குகளிடம் இருந்து மக்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பது மற்றும் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணையை முன் வைத்து சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் போது பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை முழுவதும் இன்று குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்றத்தில் பல விவாதங்கள் நடைபெற்றன ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எமது ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் தற்போது வரை குரங்குகளின் அட்டகாசம் தொடர்ந்து கொண்டே உள்ளது. நகர் பகுதிகளுக்குள் படையெடுக்கும் குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து பெறுமதியான பொருட்களை அழிக்கின்றன.
மின் குமிழ்களை திருடிச் செல்கின்றன, சி. சி. டிவி கேமராக்களை உடைக்கின்றன, பிரதேச சபையினால் போடப்பட்ட மின் குமிழ்களை எடுத்துச் செல்கின்றது.
தொலைத்தொடர்பு இணைப்புக்களை துண்டிக்கிறது, பலன் தரும் மா, தென்னை மரங்களை அழிக்கின்றது. இதனால் பல ஆயிரக்கணக்கான சொத்தழிவுகள் ஏற்படுகிறது.
அத்தோடு பல கிராமங்களில் பொதுமக்களை குரங்குகள் கடித்துள்ளன. குரங்கு கடியால் பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
இன் நிலையை கருத்தில் கொண்டு பொறுப்பு வாய்ந்த பிரதேச சபை என்ற வகையில் குரங்குகளிடம் இருந்து மக்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பது எமது கடமையாக உள்ளது.
குரங்குகளை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை நாம் கண்டறிய வேண்டும். என்னை பொறுத்தவரை காற்றழுத்த துப்பாக்கிகளை(Air Gun) வழங்கினால் அதன் மூலம் குரங்குகளை துரத்தியடிக்க முடியும்.
குரங்குகளுக்கு காயமோ, உயிர் ஆபத்துக்களோ ஏற்படாத வகையில் அவற்றை துரத்தி அடிக்க முடியும். பிரதே சபை தவிசாளர் உரிய திணைக்களங்களோடு பேசி காற்றழுத்த துப்பாக்கிகளை (Air Gun) பெற்று குரங்குகளை துரத்தியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லை என்றால் வட்டார உறுப்பினர்களுக்கு காற்றழுத்த துப்பாக்கிகளை (Air Gun) பெற்று தந்தால் அவர்களது கிராமங்களுக்கு வரும் குரங்குகளை அவர்கள் துரத்தியடிக்க நடவடிக்கை எடுப்பார்கள்.
இதேபோல் கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள் அதிகரித்துள்ளன. வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் வீதிகளில் சுற்றி திரிகின்றன.
அதேபோல் கட்டாக் காலி நாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. நகர் பகுதிகளில், சந்தைகளில் கூடுதலான நாய்கள் சுற்றி திரிகின்றன. பல நாய்கள் நோய் தாக்கத்தோடு சுற்றி திரிகின்றன.
இதனால் வீதிகளில் விபத்துக்கள் ஏற்படுகிறது, விசர் நாய் கடி அதிகரிக்கிறது, சுகாதார பிரச்சினைகள், பாதுகாப்பு பிரச்சினை ஏற்படுகிறது.
எனவே நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்டாக்காலியாக சுற்றி திரியும் நாய்களை பிடித்து நாய்கள் காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
எதிர் காலத்தில் ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் சுற்றி திரியும் கட்டாக்காலி நாய்களை பராமரிக்க நாய்கள் காப்பகம் அமைக்க பிரதேச சபை ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.