திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று திங்கட்கிழமை (17) பிற்பகல் 1.35 மணிக்கு பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அவசர அவசரமாக தற்காலிக கட்டடம் அமைத்து புத்தர்சிலை கொண்டு வந்து வைக்கமுற்பட்ட போது ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மீண்டும் புத்தர்சிலை கொண்டு செல்லப்பட்டு இன்றையதினம் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் #ஆனந்த_விஜயபால அவர்கள் புத்தர்சிலைக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால்தான் திரும்ப கொண்டு சென்றதாகவும் இன்றைய தினம் அதே இடத்தில் வைக்கப்படும் என்ற கருத்தினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன்போது பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததோடு பொதுமக்கள் மற்றும் பௌத்தபிக்குகள் கலந்து கொண்டு இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
புத்தர் சிலையால் வந்த வில்லங்கம்!
திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று (17) பிற்பகல் பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது.
நேற்று (16) இரவு அவசர அவசரமாக தற்காலிக கட்டடம் அமைத்து புத்தர்சிலை கொண்டு வந்து வைக்கமுற்பட்ட போது ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மீண்டும் புத்தர்சிலை கொண்டு செல்லப்பட்டு இன்றைய தினம் மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த_விஜயபால, புத்தர்சிலைக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால்தான் திரும்ப கொண்டு சென்றதாகவும் இன்றைய தினம் அதே இடத்தில் வைக்கப்படும் என்ற கருத்தினை வெளியிட்டிருந்தார்.
இன்று காலை நிலவரம்
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரயின் வளாகத்திற்குள் அனுமதி பெறாது, சட்டவிரோதமான முறையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றதுடன்
அதனை பார்வையிட சென்ற கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளுக்கும் பௌத்த துறவிகளுக்கும் இடையில் முறுகல் நிலை தொடர்ந்துள்ள நிலையில் இன்று காலையும் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.
இதேவேளை இன்றையதினம் பிற்பகல் 12 மணியளவில் திருகோணமலை மாவட்ட செயலத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசாண் அக்மீமனவிற்கு எதிரான பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
நேற்று மாலை நிறுவப்பட்ட புத்தர் சிலைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில் அமைச்சரின் உத்தரவிற்கு அமைய நேற்றிரவே அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தது.
முன்னதாக கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டபோதும் நேற்று இரவு 8 மணி வரை கட்டுமானப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பொலிசார் சிலையை அகற்றமுற்பட்டபோது பௌத்த பிக்குகள் எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன் பொலிசாரையும் தாக்கியிருந்தனர்.
குறிப்பாக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட பின்னர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதன் பிரகாரமே பொலிஸாரினால் தற்காலிகமாக கட்டுமான பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
எனினும் கட்டுமான பணிகளை முன்னெடுத்தவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளைத் பொலிஸார் இன்று நீதிமன்றம் மூலம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை குறித்த பகுதியில் சட்ட அனுமதியற்ற சிற்றுண்டிச்சாலை தமது திணைக்களத்தால் உடைத்து அகற்றப்பட்டுள்ளதாக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூல வளங்கள் திணைக்கள அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால
இதேவேளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவிற்கு அமைய கட்டுமான பணிகள் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் ஆனந்த விஜேயபால கீழ் கண்டவாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
இன்று அந்த புத்தர் சிலையை குறித்த விகாரையில் வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளோம்.
அத்தோடு அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கரையோர பாதுகாப்பு திணைக்களத்தால், அங்கு சட்டவிரோதமாக நடத்தப்படும் கடை ஒன்று தொடர்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அது தொடர்பில் பொலிஸார் நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்ற தீர்ப்பின்படியே செயற்பட வேண்டியுள்ளது.
இந்த காணி தொடர்பிலான பிரச்சினையை நீதிமன்றத்திலேயே தீர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில்
நீதிமன்றத்திற்கு காரணங்களை சமர்ப்பிக்கவுள்ளோம்.
இதற்கு பின்னர் திருகோணமலையில் எந்த பிரச்சினையும் நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை
தடுத்து நிறுத்தியதாக நேற்றிரவு தெரிவித்த அமைச்சர் இன்று சபையில் முரணாக கருத்து வெளியிட்டார்.
சபையில் சஜித் கேள்வி
புனித பூமிவளாகத்திற்குள் புத்தர்சிலை வைப்பதை பொலிஸார் இன்று தீர்மானிக்கின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளினால் இந்த சமூகத்தில் இனவாதம் தலைதூக்கும் நிலை ஏற்படும்.
நாட்டில் இனவாதத்தை ஏற்படுத்தும் எண்ணத்தில் செயற்படும் குழுவினர் இந்த சம்பவத்தை ஒருகருவியாக பயன்படுத்த நேரிடும்
இதனால் நாட்டினுள் தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படும்.
ஏதேனும் பிரச்சினை இருந்தால். விடயத்துக்கு பொறுப்பாக மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும்
அதனை விடுத்து இரவோடு இரவாக பொலிஸார் அங்கு அனுப்பி ஒரு புனித பூமிக்குள் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி திட்டங்களில் பொலிஸார் எவ்வாறு தலையீடு செய்ய முடியும்.
யாருடை ஆணையின் பேரில் இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன?
அரசாங்கத்திடம் நாம் ஒரு விடயத்தை தெளிவாகக் கூறிக்கொள்கிறோம்.
நாட்டில் சட்டங்கள் தொடர்பாக புரிதல் இல்லாவிடின் அதனை கற்றுக்கொள்ள வேண்டும்.
எனவே தற்போது சூடு பிடித்துள்ள இனவாத மதவாத தீப்பிழம்பினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நீதியை நிலைநாட்டுமாறும் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.
புனித பூமிக்குள் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி திட்டங்களில் பொலிஸார் எவ்வாறு தலையீடு செய்ய முடியும் – என்று சஜித் கேள்வி எழுப்பினார்.
சாணக்கியன் கடும் கண்டனம்
திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் 30 வருட யுத்தக் காலத்தில் கூட அவர்கள் பௌத்த இனத்தின் எந்தவொரு பௌத்த சின்னங்களும் அவர்களால் அழிக்கப்படவில்லை என்றும் அவர் நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.
இன்றைய சபை அமர்வின்போது அவர் இது குறித்து கடும் தொனியில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தேசிய மக்கள் சக்தி அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கேவலமாகக் காண்கிறது.
எனவே, அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நேற்றிரவு அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலை பொலிசாரினால் அகற்றப்பட்ட போது, அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கிறது என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் அப்படியல்ல என்பதை சில மணி நேரத்துக்குள்ளேயே அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
பாதுகாப்புக்காகவே சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று மீள நிறுவப்படும் என்றும் வெட்கமில்லாமல் அறிவித்த போதே சகல மக்களும் சமத்துவமாக நடத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி அரசும் முன்னைய அரசுகளைப் போலவே ஒரு இனவாத, சிங்கள பெளத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது.
இக் கட்சியைச் சேர்ந்த அனைத்து தமிழ் உறுப்பினர்களும், திருகோணமலை உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா உட்பட, உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.