சட்ட ரீதியான செயற்பாடு என்றால் திருகோணமலை கடற்கரை வீதியில் ஏன் இரவோடு இரவாக புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்ய வேண்டும். எதிர்வரும் 21ஆம் திகதி பேரணிக்கான முன் ஆயத்தமாகவே இது காணப்படுகிறது. அரசாங்கத்துக்கு எதிராக பேரணிக்கு ஆட்களை கொண்டு வரவேண்டுமாயின் அதற்கு வேறு வழிமுறைகளை பின்பற்றுங்கள். இனவாதத்தை பரப்ப வேண்டாம் என்று நாமல் ராஜபக்ஷவுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன். பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பதவியை துறந்து எமது கட்சியில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் என்றார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள்,வெளிநாட்டு , வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
திருகோணமலை பகுதியில் நேற்று இரவு ஒரு துரதிஸ்டவசமான சம்பவம் நடைபெற்றது. அரசியல் செய்வதற்காக சட்ட ரீதியிலான செயற்பாட்டுக்கு இடமளிக்க கூடாது என்று பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். எதிர்க்கட்சித் தலைவருக்கும் இதனைக் குறிப்பிட்டுக் கொள்கிறேன். பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். பௌத்த மதம் அல்ல எந்த மதமும் சட்ட விரோதமான முறையில் செயற்பட முடியாது.அதற்கு இடமளிக்கவும் முடியாது.
திருகோணமலை கடற்கரை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதிதாக ஒரு விகாரை உருவெடுத்துள்ளது.இந்த விடயம் குறித்து பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரவும் கரிசணை கொண்டுள்ளார்.மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியி;ல் ஒருசில இனவாத துறவிகள் இப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் செயற்பட்டார்கள்.கரையோர பாதுகாப்பு பிரிவினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்து நீதிமன்றத்துக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.இந்த விடயத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்.
நேற்று இரவு 8 மணியளவில் இந்த பகுதியில் திடீரென புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டது.இந்த விடயம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல வுக்கு குறிப்பிட்டு, இதன் பாரதூரத்தன்மையை எடுத்துரைத்தேன். அதன் பின்னர் இரவு 10.மணியளவில் அந்த சிலை அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டது.
ஆனால் இவ்விடயம் குறித்து சபைக்கு தெளிவுப்படுத்திய அமைச்சர் ஆனந்த விஜேபால இனவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து சிலையை பாதுகாப்பதற்காகவே வெளியில் எடுத்துச் சென்றோம் என்று குறிப்பிட்டார். அமைச்சரின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
30 வருட கால யுத்தத்தின் போது பௌத்த விகாரைகள் மற்றும் சின்னங்கள் விடுதலைப் புலிகளால் அழிக்கப்படவில்லை. இரவோடு இரவாக சென்று சிலைகளை உடைக்கும் கேவலமான இனம் தமிழினமல்ல, வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களை இராணுவத்தினரை இடித்தழித்துள்ளார்கள். நாங்கள் அவ்வாறு செயற்படவில்லை.
பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பதவியை துறந்து வி:ட்டு எமது கட்சியில் இணைந்துக் கொள்ள வேண்டும். அவருக்கு தேசிய மக்கள் சக்தி பொருத்தமற்றது. நானும் கடந்த காலங்களில் சுதந்திர கட்சியில் இருந்தேன். அங்கு இனவாதமே இருந்தது. இந்த அரசாங்கத்தில் உள்ள சகல தமிழ் அரசியல்வாதிகளும் இதனை எதிர்க்க வேண்டும், தவறை தவறு என்று சுட்டிக்காட்ட வேண்டும்
சட்ட ரீதியான செயற்பாடு என்றால் ஏன் இரவோடு இரவாக செல்ல வேண்டும். எதிர்வரும் 21 ஆம் திகதி பேரணிக்கான முன் ஆயத்தமாகவே இது காணப்படுகிறது.அரசாங்கத்துக்கு எதிராக பேரணிக்கு ஆட்களை கொண்டு வரவேண்டுமாயின் அதற்கு வேறு வழிமுறைகளை பின்பற்றுங்கள்.இனவாதத்தை பரப்ப வேண்டாம் என்று நாமல் ராஜபக்ஷவுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
சரியான மற்றும் உண்மையை குறிப்பிட்ட அமைச்சர் ஆனந்த விஜேபால இனவாதிகளுக்கு அச்சமடைந்து தனது நிலைப்பாட்டில் பின்னடைந்ததையிட்டு கவலையடைகிறேன்.இந்த முறையற்ற செயற்பாட்டுக்கு எதிராக எம்மால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மக்களை ஒன்றுதிரட்ட முடியும் . ஆனால் நாட்டை நெருக்கடிக்குள்ளாக்க நாங்கள் விரும்பவில்லை.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்கு தல் தொடர்பான விசாரணைகளில் நம்பிக்கையில்லை ஆகவே சர்வதேச விசாரணையை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோருகிறார். நாங்கள் 2009 ஆம் ஆண்டு முதல் வெளியக விசாரணைகளையே கோருகிறோம்.ராஜபக்ஷர்கள் மீது போர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஏன் உரிய நடவடிக்கைகளை எடுக்க பயப்படுகின்றீர்கள். புதிய அரசியலமைப்பு பற்றி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்று போலியாக்கப்பட்டுள்ளது என்றார்.