மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தி.இராஜகோபாலன் காலமானார்!
13 Nov,2025
மலையகத்தின் மூத்த எழுத்தாளரும் ஆய்வாளருமான தி.இராஜகோபாலன் தனது 86ஆவது வயதில் காலமானார்.
லிந்துலை, துலாங்கந்தையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், மலையக சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஆளுமையாக தனது வாழ்நாள் முழுதும் விளங்கினார்.
வீரகேசரி வாரவெளியீட்டில் அவர் எழுதிய “சிரிக்கும் செவ்வந்தி பூ”, “கண்ணான கண்மணிக்கு கதை கேட்க ஆசை இல்லையோ” போன்ற தொடர்கதைகள் பெருமளவு வரவேற்பை பெற்றன.
வீரகேசரிக்கு மட்டுமன்றி, பல பத்திரிகைகளுக்கு பல கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், தொடர்களை இவர் எழுதினார்.
இவர் தமிழ் மொழியில் எந்தளவுக்கு ஆழமான அறிவைப் பெற்றிருந்தாரோ அதேபோன்று ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்றவர் ஆவார்.
இவரது பல படைப்புகள், ஆக்கங்கள் மலையக மண்ணின் எழுச்சி மீதான எதிர்பார்ப்பை பிரதிபலித்தன. அன்னாரின் மறைவு மலையக சமூகத்துக்கு பேரிழப்பாகிறது.