வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனூடான பிரச்சினையின் பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார் இருப்பதாக கூறுவதில் உண்மை இருக்கின்றது. இது மாபியாக்களுடன் தொடர்புபட்டுள்ளது. அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைந்துள்ளனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
தமிழ் மக்களுக்கு கார்த்திகை மாதம் என்பது முக்கியமான மாதம். இந்த மாதம் மாவீரர்களை நினைவு கூரும் மாதமாகும். அதுமட்டுமன்றி வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது பிள்ளைகளை நினைவு கூரும் மாதம். இந்த மாதத்தில் இருந்துகொண்டு நாங்கள் திரும்பி பார்க்க வேண்டியுள்ளது. அதாவது பல தசாப்தங்களுக்கு முன்பிருந்து இந்த நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று, தமிழ் மக்களுக்கு எதனையாவது செய்ய வேண்டும் என போராடிய மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? அவர்களின் எதிர்பார்ப்புகள், அவர்களின் ஆசைகள் மற்றும் அபிலாசைகள் என்ன என்பதனை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அங்குள்ள மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ வேண்டும். இந்த வாழ்க்கையை ஏற்படுத்துவதற்காக அவர்கள் போராடியிருந்தால் இன்று அந்த இளைஞர்களின் கனவினை நனவாக்கும் செயற்பாடுகளை எந்தவொரு தமிழ் கட்சியாவது எந்தவொரு தமிழ் அரசியல்வாதியாவது அன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் செய்த அர்ப்பணிப்பு தியாகங்களை செய்கின்றார்களா? என்பது கேள்விக்குரிய விடயம் .
அதுமாத்திரமன்றி வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் மக்கள் தொகை குறைந்துகொண்டு வருகின்றது. வறுமை கூடிய மாகாணமாக வடக்கு மற்றும் கிழக்கு காணப்படுகிறது. இன்று தேசிய உற்பத்திக்கு குறைந்த பங்களிப்பு செய்கின்ற மாகாணங்களாகவும் உள்ளன. இதன்மூலம் இந்த மாகாணங்களுக்கு கடந்த கால ஆட்சியாளர்கள் இந்த பிரச்சினைகள் தொடர்பில் இந்த மாகாணங்களை கண்டுகொள்ளவில்லை. உரிய தீர்வுகளையும் வழங்கவில்லை. அதன் விளைவாகவே வடக்கில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் 1981ஆம் ஆண்டில் 8இலட்சத்து 30ஆயிரம் மக்கள் வாழ்ந்தார்கள். ஆனால்தற்போது 6 இலட்சத்து 10 ஆயிரம் மக்களே வாழ்கின்றனர். அப்போது 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்த மாவட்டம் இப்போது 6 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மாவட்டமாக இருக்கின்றது. வருகின்ற வருடங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் குறையுமா என்றும் தெரியாது. இதனால் எமது அரசியல் இருப்பும் கேள்விக்குரியதாகியுள்ளது. எம்.பிக்களை தெரிவு செய்வதற்கான மக்கள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த நிலைமைக்கான காரணத்தை கண்டறிந்து அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும்.
தமிழ் மக்கள் வேகமாக நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இதனால் தமிழ் மக்களின் குடிப்பரம்பல் மேலும் குறைவடைகின்றது. கல்வியில் முன்னேறியிருந்த சமூகம் இப்போது கடந்த வருடங்களாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. ஆனால் கடந்த 6 மாதங்களாக அதில் முன்னேற்றம் காண்பதற்கான நம்பிக்கை உருவாகியுள்ளது. இது எங்கள் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையாகவே இருக்கின்றது.
போதைப்பொருள் மாபியாக்கள் வடக்கை ஆளுகின்றனர். அது வடக்கை அச்சப்படுத்துகின்றது. இதில் இருந்து வடக்கை மீட்க வேண்டும். கடந்த காலங்களில் சஜித் அணியினரை சார்ந்தவர்கள் 78ஆம் ஆண்டில் இருந்து அவ்வாறான நாசகர வேலை மாபியாக்களை உருவாக்கியுள்ளனர் என்றார்.
இதன்போது ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணயின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
கடந்த 7 மாதங்களாக கல்வியில் வடக்கு முன்னேற்றம் காண்பதாக கூறியுள்ளீர்கள் எதனை அடிப்படையாகக் கொண்டு அவ்வாறு கூறுகின்றீர்கள் ?. அதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவமே போதைப் பொருளுக்கு பிரதான காரணம். இதனால் எப்போது இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றப் போகின்றீர்கள் எனக்கேள்விகளை எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர், கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிள்ளைகளை கல்வி கற்பதற்காக கொழும்புக்கு அனுப்பும் நிலைமை காணப்பட்டது. அத்துடன் போதைப் பொருள் அச்சுறுத்தல் காரணமாக அதிகளவான பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. யதார்த்தமே இது. யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.
இதேவேளை போதைப் பொருள் பிரச்சினைக்கு பின்னால் இராணுவம் மற்றும் பொலிஸ் இருப்பதாக கூறினீர்கள். அதில் உண்மை இருக்கின்றது. இராணுவமும் பொலிஸும் வேறு அல்ல. இது மாபியாக்களுடன் இணைந்துள்ளது. அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் பிணைந்துள்ளனர். அந்த அரசியல்வாதிகள் அண்மையில் கைது செய்யப்பட்டும் உள்ளனர் என்றார்.
இவ்வேளையில் மீண்டும் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போதைப் பொருளுடன் இராணுவம் பொலிஸ் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் ஏற்றுக்கொண்டுள்ளமையை நான் வரவேற்கின்றேன். இதற்கு முன்னரான அரசாங்கங்கள் இதனை கூறியதில்லை. நீங்கள் இராணுவத்தை பொறுப்புக்கூற வைக்காமல் இந்த மாபியாக்களை இல்லாமல் செய்யப் போவதில்லை. வடக்கில் இரண்டு பிரஜைகளுக்கு ஒரு இராணுவ சிப்பாய் இருக்கும் நிலைமையே இருக்கின்றது என்றார்.
இதேவேளை தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர் இந்த விடயத்தில் ஒட்டுமொத்த இராணுவத்தின் மீதோ, பொலிஸார் மீதோ பழிகூற முடியாது. ஒரு சிலரின் செயற்பாடுகள் உள்ளன. உங்களுடைய நண்பர்களின் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும் இந்த மாபியாக்களுடன் பின்னால் இருக்கின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது என்றார்.