யாழ்.கோப்பாய் ,மூதூர் கிழக்கு,மன்னார்.மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் சிரமதானப் பணிகள்!
04 Nov,2025
கோப்பாய் மாவீர்ர் துயிலுமில்லத்தில் சிறீலங்கா இனவழிப்பு இராணுவம் தொடர்ந்து நிலைகொண்டுள்ளநிலையில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 நினைவேந்தலுக்காக தனியார் காணியில் துப்புரவுப் பணிகள் இடம்பெற்று வருகின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்கு சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சனிக்கிழமை (01) சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
மூதூர் கிழக்கு சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இவ் சிரமதானத்தை ஏற்பாடு செய்திருந்தது.
சிரமதான நிகழ்வில் முன்னாள் போராளிகள், போராளிகளின் குடும்பத்தினர்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது சிரமதானத்தில் கலந்து கொண்டோருக்கு கூழ் காய்ச்சி பரிமாறப்பட்டிருந்தது.
மாவீரர் நாள் நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு மூதூர் கிழக்கு சம்பூர் -ஆலங்குளம் துயிலுமில்லத்தில் தொடர்ந்தும் சிரமதானம் மேற்கொள்ளப்படவுள்ளமையால் அதில் கலந்து கொள்ளக் கூடியவர்கள் கலந்து கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்
மாவீரர் தினத்தை முன்னிட்டு மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு
தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் தின நினைவேந்தல் எதிர்வரும் 27ஆம் திகதி வடக்கு கிழக்கு மற்றும் தமிழர் தாயக பகுதிகளில் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப் படவுள்ளது.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் நினைவு நிகழ்வுக்கு தயாராக ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்வதற்கான சிரமதான பணிகள் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் மாவீரர் துயிலும் இல்ல பணி குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த ஆரம்ப நாள் நிகழ்வு மற்றும் சிரமதான பணியில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், துயிலும் இல்ல பணி குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.