தலைமன்னாரிலிருந்து தீடைப் பகுதியில் உள்ள இராமர் பாலம் வரை சென்று சுற்றுலாப்பயணிகள் பார்வையிடுவதற்கான படகுச் சேவையினை ஆரம்பிக்க அனுமதி பெறப்பட்டதைத் தொடர்ந்து, படகுச் சேவைக்கான கட்டண வசூலிப்பை வன ஜீவராசிகள் திணைக்களம் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த படகு சேவையினை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தில், அரசாங்க அதிபரின் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (8) மாலை நடைபெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையிலான இக்கலந்துரையாடலில் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் உட்பட உறுப்பினர்களுடன் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் உள்ள கடற்கரை பூங்கா மன்னார் பிரதேச சபையின் பராமரிப்பில் நீண்ட காலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வட மாகாணத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட கடற்கரை பூங்கா மன்னார் பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டதிலிருந்து, குறித்த இடம், மன்னார் பிரதேச சபையின் கண்காணிப்பிலேயே இதுவரைக் காலமும் இருந்து வந்தது.
2015ஆம் ஆண்டு இந்த கடற்கரைப் பூங்கா பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு உட்பட்ட பகுதியாக கொண்டுவரப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் முன்பிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அதிகளவு சுற்றுலாப் பயணிகள் இராமர் பாலத்தை பார்க்கச் செல்லும் சந்தர்ப்பங்களில் படகுச்சேவையை பயன்படுத்துவதற்கான கோரிக்கையினை மன்னார் மக்கள் முன்வைத்ததுடன் அரச மட்ட தரப்பிலும் இக்கோரிக்கை பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு படகுச்சேவையினை மேற்கொள்வது தொடர்பில் முடிவுகள் எடுக்கப்பட்டு, படகுச் சேவைக்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள படகு சேவைக்கான கட்டண வசூலிப்பை வன ஜீவராசிகள் திணைக்களம் முன்னெடுக்கவுள்ளது.
இது தொடர்பாக நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில், படகுச் சேவைக்கான கட்டண வசூலிப்பை 50க்கு 50 என்ற அடிப்படையில் வன ஜீவராசிகள் திணைக்களமும் மன்னார் பிரதேச சபையும் செயற்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான படகுச் சேவையை நடைமுறைப்படுத்தலாம் என்றும் இதர வருமானங்களுக்கான திட்டங்களை மன்னார் பிரதேச சபையின் ஊடாக வகுத்து, அவற்றை செயற்படுத்தலாம் என்றும் அரச அதிபர் தனது உரையில் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்த சந்திப்பில் பங்குபற்றிய தலைமன்னார் ஊர்மனை கிராமத்தின் உறுப்பினர் உள்ளிட்டோர், மன்னார் பிரதேச சபை கடற்கரை பூங்காவை நீண்ட நாட்களாக பராமரித்து வரும் நிலையில், மன்னார் பிரதேச சபையின் வருமானம் மிகவும் குறைந்துள்ளதையும் இன்னும் சில காரணங்களையும் சுட்டிக்காட்டி, படகுச் சேவைக்கான நிதி வசூலிக்கும் பொறுப்பினை தமக்குத் தருமாறு கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இக்கோரிக்கைக்கு பதிலளித்த வனஜீவராசிகள் திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அதிகாரி பாத்தியா மடுகல்ல, அவ்வாறு செயற்பட முடியாது. வன ஜீவராசிகள் திணைக்களம் பல்வேறு இடங்களில் இவ்வாறான சுற்றுலா நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தமக்கு உட்பட்ட பகுதியில் குறித்த கடற்கரை பூங்கா காணப்படுவதனால் திணைக்களத்தின் சட்ட நடவடிக்கைக்கு ஏற்ப செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
அந்தக் கருத்தினை மன்னார் பிரதேச சபை தவிசாளர் ஆதரித்துப் பேசினார்.
அத்தோடு, கூட்டத்தில் பங்குபற்றிய உறுப்பினர்களின் மேற்படி கருத்தினை பிறிதொரு நாளில் கூடிப் பேசித் தீர்மானிப்பதென மன்னார் அரசாங்க அதிபர் தெரிவித்து கலந்துரையாடலை நிறைவு செய்தார்.