இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் இந்தியா தனது நிலைப்பாட்டை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் வெளிப்படுத்தி வருகின்றது.
ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த 8ஆம் திகதி இலங்கை தொடர்பாக இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி, நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றார். அத்துடன் சகலரையும் உள்ளடக்கிய அதிகாரப்பகிர்வு மற்றும் நியாயமான நல்லிணக்க செயன்முறை என்பன நிலையான அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
ஐ.நா. மனித உரிமை பேரவையின் 60ஆவது கூட்டத் தொடர் கடந்த 08ஆம் திகதி ஆரம்பமானது. அன்றைய தினம் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டேர்க் தனது இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். இந்த அறிக்கை மீது விவாதம் இடம்பெற்றிருந்தது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்திய பிரதிநிதி, 2009ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கும் மக்களை மீள்குடியமர்த்துவதற்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவு வழங்கியது. அதேபோன்று 2022ஆம் ஆண்டு இலங்கை மிகத் தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்த வேளையில் இந்தியா உதவியது. இலங்கையின் ஒருமைப்பாடு மற்றும் இறையான்மையுடன் தமிழ் மக்களின் அபிலாஷைகளான சமத்துவம், நீதி மற்றும் கெளரவத்தை இந்தியா வலியுறுத்தி வருகின்றது. நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துமாறும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளுமாறும் நாம் வலியுறுத்துகின்றோம் என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
ஐ.நா. மனித உரிமை பேரவையில் 2012ஆம் ஆண்டு முதல் இது தொடர்பான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்தப் பிரேரணைகள் மீதான விவாதத்தில் பங்கேற்கும் இந்தியப் பிரதிநிதிகள், கடந்த காலத்தில் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துமாறும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்குமாறும் வலியுறுத்தி வந்தனர்.
தற்போது இந்தியாவானது 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நேரடியாக முன்வைக்காது அரசியலமைப்பை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றே கோரி வருகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பதவியேற்றதன் பின்னரே இத்தகைய நிலைப்பாட்டை இந்தியா எடுத்துள்ளதாகவே தெரிகின்றது. கடந்த வருடம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது.
இதன்போது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் 1987ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபை முறைமையினை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்துவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தச் சந்திப்பின் போது 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் நேரடியாக சுட்டிக்காட்டாத இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையானது அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தச் சந்திப்பின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்தோ அல்லது 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலோ எத்தகைய கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
இந்த விஜயத்துக்கான இரு தரப்பு முன்னேற்பாட்டு பேச்சுவார்த்தையின் போது 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பேசப்படுவதை தாம் விரும்பவில்லை என்று இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இந்திய அரசுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாகவே நேரடியாக 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் விடயத்தினை இந்திய தரப்பில் சுட்டிக்காட்டவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்த விஜயத்தின் பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போதும் இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெற்றன. இதன் பின்னர் கருத்து வெளியிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அரசியலமைப்பினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியிருந்தார்.
இந்த விஜயத்தின் போதும் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் நேரடியாக இந்தியப் பிரதமர் கருத்து வெளியிட்டிருக்கவில்லை.
அதேபோன்றுதான் தற்போதும் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்தியா, தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றது.
பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்தியா, இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஒரேயொரு தடவையே ஆதரவு வழங்கியிருந்தது. அதுவும் தமிழக அரசின் அன்றைய அழுத்தம் காரணமாக இத்தகைய நிலைமை ஏற்பட்டிருந்தது.
அதனைத் தவிர, வேறு எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்கவில்லை. மாறாக நடுநிலை வகிக்கும் நிலையிலேயே வாக்கெடுப்பில் கலந்துகொள்வதை தவிர்த்திருந்தது. ஆனாலும், பிரேரணை மீதான விவாதத்தில் இந்தியப் பிரதிநிதிகள் உரையாற்றிய போது, இலங்கையின் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது.
தற்போது 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தாது மென்போக்கான முறையில் அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று இந்தியா தெரிவித்து வருகின்றது.
இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு என்பது மறக்க முடியாததாகும். அன்னை இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில் ஈழத்தமிழ் மக்கள் விடயத்தில் இந்தியா தீவிர கரிசனை கொண்டிருந்தது. தமிழ் போராளிக் குழுக்களுக்கு அந்த வேளையில் இந்தியாவில் பயிற்சிகளும் உதவிகளும் வழங்கப்பட்டன.
இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டியதன் அவசியத்தை அன்று இந்திராகாந்தி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். பிரச்சினைக்கு தீர்வுகாண கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஓரங்கமாகவே திம்புப் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது.
அன்று ஈழத் தமிழர்களது போராட்டத்துக்கு உதவிய இந்தியா, தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையிலேயே 1987ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தது. இதன் மூலமாகவே 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு மாகாண சபை முறைமை அமுலுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 38 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் இன்னமும் 13ஆவது திருத்தச் சட்டமானது முழுமையாக இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணமும் பிரிக்கப்பட்டு விட்டது.
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி அதனை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட அரசியல் தீர்வுக்கு செல்ல வேண்டும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற போதிலும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரியவில்லை. இந்தியாவும் இந்த விடயத்தில் அழுத்தங்களைக் கொடுப்பதற்கு முயல்வதாகவும் தெரியவில்லை.
13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி தீர்வைக் காணுமாறு வலியுறுத்தி வந்த இந்தியா, தற்போது அதனைக் கூட மென்மையான போக்கில் கூறுவதற்கு முயல்கின்றது. இதனைத்தான் தற்போது ஐ.நா. மனித உரிமை பேரவையில் காணக்கூடியதாக உள்ளது.
இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்ற விடயத்தில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான தார்மீகக் கடமை இந்தியாவுக்கு உள்ளது. எனவே, தற்போதைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உரிய அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.
இதனைவிடுத்து, 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தில் மென்போக்கை கடைப்பிடிப்பதானது எந்தவகையிலும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு உதவப் போவதில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.