சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு
02 Sep,2025
சம்பூர் மனித எச்சங்கள் தொடர்பான வழக்கில் அகழ்வு மேற்கொள்வதற்காக மாகாண மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்ட உத்தேச பட்ஜட்டின் அனுமதியானது செவ்வாய்க்கிழமை (2) கிடைக்கப் பெறாமையால் இவ்வழக்கானது இம்மாதம் 16ஆம் திகதி மீள அழைக்கப்படவுள்ளது.
குறித்த வழக்கானது மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஸான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பூர் பகுதியில் மேலதிக மனித எச்சங்கள் தொடர்பில் ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்காக சட்ட வைத்திய அதிகாரி, தொல் பொருள் திணைக்களம்,காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ஆகியோரின் கையொப்பத்துடன் சம்பூர் பொலிஸாரினால் கடந்த மாதம் 26ஆம் திகதி உத்தேச பட்ஜட் மூதூர் நீதிமன்ற நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் மூதூர் நீதிமன்றத்தால் மாகாண மேல் நீதிமன்ற அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வழக்கின் உத்தேச பட்ஜட்டுக்கான அனுமதி மாகாண மேல் நீதிமன்றத்திலிருந்து கிடைக்கப் பெறவில்லை எனவும் இவ்வழக்கு மீண்டும் இம்மாதம் 16ஆம் திகதி மீள அழைக்கப்படவுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகத்தின் சார்பாக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி எம்.எம்.நஸ்லீம் தெரிவித்தார்.
சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் மெக் என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த யூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதியில் இருந்து சிதைந்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. இதன் பின்னர் மிதிவெடி அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.