தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் - வேல்முருகன்
சிங்களப் பேரினவாத அரசால் நிகழ்த்தப்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு நீதிக் கேட்டு திருச்சி சிறப்பு முகாமில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தோழர் யோகராசா நவநாதன் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!என தமிழக வாழ்வுரிமை கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் கட்சியின் தலைவர் தி வேல்முருகன் தெரிவித்துள்ளதாவது.
07.09.1996 அன்று சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிரிஷாந்தி தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில்இ 11 சிங்கள ராணுவத்தினரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். அவரைத் தேடிச்சென்ற தாய் ராசம்மா தம்பி பிரணவன் குடும்ப நண்பர் சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோரும் கொல்லப்பட்டு நால்வரின் உடலும் வயல்வெளியில் புதையுண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இக்கொடூர நிகழ்வால் பெரும் கவலையுற்ற ஈழத்தமிழ் சொந்தங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் மகளிர் அமைப்புகளும் சிங்களப் பேரினவாத அரசுக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாக 7 இராணுவ வீரர்களும்இ 2 காவலர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர்.
கிருஷாந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனையை எதிர்கொண்ட இராணுவ வீரர்களில் ஒருவரான சோமரத்ன ராஜபக்சே இலங்கை நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின் மூலமாகவேஇ செம்மணி மனித புதைகுழிகள் வெளிச்சத்திற்கு வந்தன.
குறிப்பாக 1995–-96 ஆம் ஆண்டுகளில் இலங்கை ராணுவத்தினரால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்து புதைக்கப்பட்டது தெரியவந்தது.
ஐ.நா சபையின் தலையீடு காரணமாக சோமரத்ன ராஜபக்சே அடையாளம் காட்டிய இடங்கள் சிலவற்றில் கொல்லப்பட்ட தமிழர்களின் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. ஆனால் வழக்கம்போல் சிங்களப் பேரினவாத அரசு புதைகுழிகள் அனைத்தையும் முழுமையாகத் தோண்டி விசாரணை நடத்தாமல் கிடப்பில் போட்டது.
அதுமட்டுமின்றி 2009 ஆம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் துணைக்கொண்டு 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொத்துக்கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான முறையான விசாரணையையோ உரிய நீதியையோ இதுவரை பெற முடியாமல் உலகத்தமிழர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா குழுவின் பங்கேற்போடு தமிழீழத்தில் பல்வேறு இடங்களில் அகழ்வுப் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றது.
அந்த அகழாய்வில் அரியாலை – சிந்துப்பாத்தி பகுதியிலிருந்த புதைகுழியிலிருந்து சிறு குழந்தை உட்படக் கொல்லப்பட்ட 5 தமிழர் உடல்களின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழிகள் என்பது சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்ட தமிழ் இனப்படுகொலைகளில் ஒரு சிறு துளி மட்டுமே. இதுபோன்ற ஏராளமான மனித புதைகுழிகள் ஈழத்தாயகம் முழுவதும் பரவிக்கிடக்கின்றன.
இந்நிலையில் சிங்களப் பேரினவாத அரசால் கொன்றுக் குவிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் மறைவுக்கு நீதி விசாரணைக் கேட்டும் ஈழத்தமிழர்களுக்கான சம உரிமைக் கேட்டும் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் யோகராசா நவநாதன் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 4 நாட்களாக அவர் மேற்கொண்ட போராட்டத்தில் நீருக் கூட அருந்தாமல் இருப்பதால் யோகராசா நவநாதன் உடல்நிலை மிகவும் மோசமாகி இருப்பது வேதனை அளிக்கிறது.
எனவே தோழர் யோகராசா நவநாதனின் கோரிக்கையை ஏற்று சிங்களப் பேரினவாத அரசால் கொன்றொழிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் மறைவுக்கு உரிய நீதி விசாரணை நடத்தவும் ஈழத்தமிழர்களுக்கான சம உரிமை கிடைக்கவும் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் திருச்சி சிறப்பு முகாம் என்கிற கொடூர முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்து அவர்கள் விரும்பும் நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் மேலும் அவர்கள் தமிழ்நாட்டிலேயே வாழ விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து தர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இருக்கிற ஈழத்தமிழர்களுக்கோ அல்லது ஈழத்தில் வாழுகின்ற தமிழர்களுக்கோ சம உரிமை கிடைக்கவும்இ சிங்களப் பேரிவாத அரசால் வேட்டையாப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும்இ தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.
எனவே உடல்நிலை மிகவும் மோசமடைந்து வரும் நிலையில் தோழர் யோகராசா நவநாதன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.