மூதூர் மத்திய கல்லூரியில் கட்டிடத் தட்டுப்பாடு: போராட்டத்தில் குதித்த மக்கள்
16 Jun,2025
திருகோணமலை மூதூர் மத்திய கல்லூரியில் நிலவும் கட்டிடத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து தருமாறு கோரி பாடசாலைக்கு முன்பாக அமைதிவழி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று(16) நடாத்தப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
மூதூர் மத்திய கல்லூரியில் காணப்படும் ஒரு கட்டிடம் கடந்த வாரம் இடிந்து வீழ்ந்துள்ளது. இன்னும் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் காணப்படுகிறது. இதன் காரணமாக 14 வகுப்பு மாணவர்கள் மர நிழலில் இருந்து கல்வி கற்று வருகின்றனர்.
இந்நிலையில் முன்னைய அரசாங்கத்தால் மூதூர் மத்திய கல்லூரி புதிய கட்டிடத்திற்காக 120 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போதைய அரசாங்கத்தால் இந்த வேலைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அரசாங்கம் புதிய கட்டிடத்திற்கான வேலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டம் நிறைவடைந்த பின்னர், அந்த இடத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன, மூதூர் வலயக் கல்வி பணிப்பாளர் வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஒரு மனு கையளிக்கப்பட்டுள்ளது.